மயிலம்:சென்னைக்குச் செல்லும் பஸ்கள் கூட்டேரிப்பட்டில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் அரசு பஸ்களை 1 டூ 3 என மாற்றி கூட்டேரிப்பட்டில் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வடக்கு பகுதியில் மயிலம், ஒலக்கூர், மரக்காணம், திண்டிவனம், வானுார் ஆகிய ஊர்களுக்கு விழுப்புரத்திலிருந்து அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் என பலர் தினசரி சென்று வருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாததாலும், கடந்த சில மாதங்களாக பெரும்பாலான அரசு பஸ்களை 1 டூ 3 என மாற்றி கூட்டேரிப்பட்டில் நிற்காமல் செல்வதுடன் அரசு மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.எனவே கடந்த காலங்களில் மேல்மருவத்துார் சென்ற தடம் எண். 151, திண்டிவனம் சென்ற தடம் எண்.150 ஆகிய வழித்தட சாதாரண பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.