கோட்டூர்:கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே, சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோட்டூர் சுற்றுப்பகுதிகளில், அக்., மாதம் பெய்த கனமழையால், குமரன்கட்டம் பகுதியில் இருந்து வந்த மழை வெள்ளம், கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் அருகே சூழந்தது.இதில், அலுவலகத்துக்கு எதிரேயுள்ள சிறுபாலம் முற்றிலுமாக சிதிலமடைந்தது. சிறுபாலம் வழியாக, மூன்று ரோடுகளுக்கு செல்ல வேண்டும். சிறுபாலம் உருக்குலைந்ததால், வாகன ஓட்டுனர்கள் அந்த ரோடுகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.வளைவுப்பகுதியில் சிறுபாலம் உடைந்து உள்ளதால், வாகனங்கள் குழியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை சரிசெய்ய மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.சிறுபாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு எதிரே, புதிதாக சிறுபாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக அரசிடம், 1.31 கோடி ரூபாய் நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி கிடைத்ததும், உடைந்த இடத்தில், 60 மீட்டர் அளவுக்கு ரோடும் புதுப்பிக்கப்பட்டு, தடுப்புச்சுவர்களுடன், சிறுபாலம் அமைக்கப்படும்,' என்றனர்.