வால்பாறை:வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களாக வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இவை, பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லார் நீர்வீழச்சி, நெம்பர்பாறை, கீழ்நீராறு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளது. அதனால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதிகளில், முகாமிட்டுள்ள யானைகளுக்கு, அருகில் சென்று செல்பி எடுப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாலை, 6:00 மணிக்கு மேல் எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழையும் யானைகளை துன்புறுத்தாமல் வனத்துறைக்கு தகவல் கொடுத்தால், வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வசதியாக இருக்கும்,'என்றனர்.