மேம்பாலப்பணியால் தினமும் நெரிசல்: மாற்றுப்பாதை வழி காணாததால் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலப்பணியால் தினமும் நெரிசல்: மாற்றுப்பாதை வழி காணாததால் தவிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பால பணிகளால் பி.ஏ.சி.ஆர் ரோட்டில் கனரக வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் ரூ. 45கோடி செலவில் நடந்து வருகின்றன. இதன் முதற்கட்ட பணியாக ரோட்டின் நடுவே மேம்பாலத்திற்கான துாண் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிவடைய குறைந்த பட்சம் ஓர் ஆண்டிற்கு மேலாகும் நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்களுக்கான போக்குவரத்து மாற்று பாதை ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.தற்போது சத்திரப்பட்டி செல்லும் வாகனங்கள் மலையடிப்பட்டி ரோடு வழியாக திருப்பி விடப்படுகின்றன. ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் நகர்பகுதிக்குள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த வன்னியம்பட்டி ரோட்டில் மாற்றுப்பாதையாக சென்று முதுகுடியை அடைகிறது. சத்திரப்பட்டியில் இருந்தும், தென்காசி ரோடு மற்றும் மதுரை ரோட்டிலிருந்து வரும் டூ வீலர், ஆட்டோ, லாரி, கல்லுாரி வாகனங்கள் மிகுந்த இன்னல்களை சந்திக்கிறது. பாலப்பணிகள் முடிவடையும் வரை மாற்று ஏற்பாடாக சத்திரப்பட்டி கேட் அருகே புது பஸ்ஸ்டாண்டு செல்லும் தெருப்பகுதி, திருவனந்தபுரம் தெரு வழியே புது பஸ் ஸ்டாண்டு வரை கண்மாய் கரையை மாற்றுப்பாதையாக கொண்டு வந்தால் பொது மக்களின் இன்னல்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இத்துடன் மலையடிப்பட்டி ரோட்டில் உள்ள வேகத்தடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தி நெரிசலை சரி செய்யலாம் என்கின்றனர் இப்பகுதியினர்.இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் இணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.தடைகளை அகற்றினாலே தீர்வுபி.ஏ.சி.ஆர். ரோட்டில் பாலப்பணிகள் நடைபெறுவதால் ரயில்வே கேட் அடுத்த பீமராஜா சாலை மாற்று வழியாக உள்ளது. இவற்றில் ரயில்வே துறையினரின் எல்லை கற்கள் மற்றும் தனியார் செய்துள்ள தடை, தொடர் வேகத்தடை இவற்றை அகற்றினாலே சத்திரப்பட்டி வழியாக சங்கரன் கோயில் மற்றும் புது பஸ் ஸ்டாண்டு செல்லும் ஆட்டோ, கார், டூவீலர்களுக்கு பெரும் தீர்வாக அமையும். இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் பணிகள் நடைபெறும் என்ற சூழலில் பொது மக்கள் நலனை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.கணேஷ்குமார், தனியார் ஊழியர், ராஜபாளையம்.மாற்றம் செய்தால் வழிஏற்கனவே இருந்த ஒரு வழிப்பாதையான டி.பி. மில்ஸ் ரோடு மாற்றப்பட்டு மலையடிப்பட்டி பாதை மற்றும் தென்காசி ரோடு என ஊருக்குள் அவசியமின்றி அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. நகர்ப்பகுதி நெரிசலை தவிர்க்க திருவனந்தபுரம் தெரு வழியாக புதியாதி குளம் கண்மாய் கரையை பலப்படுத்தி சிறு வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றம் செய்வதால் பாலப்பணிகள் வரை சிக்கல் குறைய வாய்ப்பாக அமையும்.பாஸ்கர், லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர், ராஜபாளையம்.அனுமதி கேட்டுள்ளோம்மேம்பால பணிகளுக்காக ஏற்பட்டுள்ள சிரமங்களை கருதி ஏற்கனவே மலையடிப்பட்டி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டோம். வன்னியம்பட்டி பகுதியில் போக்குவரத்தை திருப்பி கனரக வாகனங்களால் ஏற்படும் சிரமத்தை குறைத்துள்ளோம். தென்காசி ரோட்டில் வரும் வாகனங்கள் தளவாய்புரம் வழியே திருப்பவும், ராஜபாளையம் திருவனந்தபுரம் ரோடு வழியே நகருக்குள் நுழையாமல் புது பஸ் ஸ்டாண்டை அடையவும், ஐ.என்.டி.யு.சி., நகர் வழியே உள்ள ரயில்வே மற்றும் தனியார் தடைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.பழனிக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர், ராஜபாளையம்.தீர்வுபாலம் பணி முடியும் வரை ஆக்கிரமிப்பிற்குள்ளான தெருக்கள், ரயில்வே, உள்ளாட்சி போன்ற மற்ற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி தெருக்கள் போன்றவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப போக்குவரத்து உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும். பொது மக்கள் நலன் கருதி போக்குவரத்து தடைகளை அகற்றவும் முன் வர வேண்டும். மக்களுக்கான பணிக்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X