நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்...

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் மாதந்திர கூட்டம்.

உறுப்பினர்கள் தத்தம் பெயரைச் சொல்லி தங்களை அறிமுகம் செய்துகொண்டு தாங்கள் மனதில் சுமந்து வந்த ஜோக்குகளை சொல்கின்றனர்.

கூட்டத்தினர் சென்டிமீட்டருக்கு மேல் உதடு பிரித்து சிரித்தால் பாவம் என்பது போல சுவராசியமின்றி சிரிக்கின்றனர் சிலர் அதற்கு கூட சோம்பல் பட்டுக்கொண்டு ‛ம்' அப்புறம் என்பது ஜோக்குகளுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஜோக்காளர்களை பாவமாக பார்க்கின்றனர்.

இ்ந்த சூழ்நிலையில் ஒருவர் மேடைக்கு வருகிறார், தன்பெயர் சரவெடி ஸ்ரீதர் என்று அறிமுகம் செய்துகொள்கிறார், அடுத்த கணமே சரவெடி வெடிப்பது போல ஜோக்குகளை சராமரியாக சொல்கிறார்.

அவரது பல ஜோக்குகள் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன அவர் சொன்ன ஜோக்குகளை கேட்டு அதுவரை மவுனம் காத்து வந்த சபை தன் போலிக்கவுரம் கலைத்து வாய்விட்டு சிரித்தது, கைதட்டி மகிழ்ந்து பாராட்டியது.

உதாரணத்திற்கு சில ஜோக்குகள்

லஞ்சம் வாங்கினேன் பிடித்து உள்ளே போட்டனர்
‛அதையே' உள்ளே கொடுத்தேன் வெளியே விட்டனர்..

ஒரு அரசியல்வாதி டூடோரியல் கல்லுாரியை திறந்துவைத்து ...இது அருமையான கல்லுாரி ஏன் சொல்கிறேன் என்றால் நான் இங்குதான் பல வருடங்கள் படித்தேன்...என்று பேசினார்.

எழுத்தாளர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டது தப்பா போயிடுச்சு, ஏன்னா தாலி கட்டி முடித்ததும்,‛ நான் நகை போடுவதாகவும் பணம் தருவதாகவும் சீர் செய்வதாகவும் சொன்ன விஷயங்கள் அனைத்தும் கற்பனையேன்னுட்டார்'.

‛இருபது வருடமா உங்ககிட்ட வேலை செய்யறேன் என்னை நம்பமாட்டேங்கிறீங்களா முதலாளி?'
‛என்னடா இப்படி சொல்லிட்டே! வெளியே போகும் போது மொத்த கடைச்சாவியையும் உங்கிட்டதானே கொடுத்துட்டு போறேன்'.
‛போங்க முதலாளி ஒரு சாவி கூட கல்லாபெட்டிக்கு சேரமாட்டேங்குது '

அந்த இருதய டாக்டர் குறைஞ்ச காலத்தில் நிறைய சம்பாதிச்சுட்டாரே எப்படி?
எல்லாம் ‛பைபாஸ்'ல அடிச்சதுதுான்

இப்படி பல ஜோக்குகளைச் சொல்லி அனைவரையும் வாய்வலிக்க சிரிக்கவைத்த சரவெடி ஸ்ரீதரைப்பற்றி விரிவாக விசாரித்து பேட்டி போடுவதற்காக அவர் தங்கியிருக்கும் மாம்பலம் வீட்டிற்கு போயிருந்தேன்.

சிறிய வீடு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இவ்வளவு சிறிய வீடாகயிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.

ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு பக்கத்து வீட்டிற்கு ஒடோடிப்போய் ஒரு நாற்காலி இரவல் வாங்கிக்கொண்டு வந்து அதில் உட்காரச்சொன்னார்.

வாடகை கூடக்கூட வாழும் இடம் குறுகிக்கொண்டே போகிறது என்று சொல்லி சிரித்தார் ஸ்ரீதர்,அவர் கூடவே எப்போதும் நிழலாக இருந்து உதவும் மனைவி பத்மசாயி,மகள் வேதாஸ்ரீயுடன் அன்பான அறிமுகம் பிறகு பேட்டி தொடர்ந்தது...


நேர்மை உண்மை உழைப்பு கருணை அன்பு இவற்றின் மொத்த உருவம்தான் என் அப்பா கோபாலகிருஷ்ணன்.பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து அதிகாரியாக ஒய்வு பெற்றவர்.அவரது ஒவ்வொரு கையெழுத்துக்கும் பல ஆயிரங்கள் கொட்டி கொடுக்க ஒப்பந்தக்காரர்கள் தயராக இருந்து நிலையிலும் கடைசி வரை ஒரு பைசா தப்பாக சம்பாதிக்காமல் நேர்மையாகவே இருந்தவர்.


அரசு கடைநிலை உழியர்களை அழைத்து நீங்கள் எல்லாம் படித்து இந்த இந்த தேர்வு எழுதினால் பதவி உயர்வு பெறலாம் என வழிகாட்டி அதிகாரிகளின் கார் ஒட்டுனர்களை அலுவலர்களாக, அதிகாரிகளாக மாற்றி அழகு பார்த்தவர்.

இது எல்லாவற்றையும் விட மற்றவர் பசிகண்டு பொறுக்காதவர்‛ உன்னிடம் நாலு இட்லி இருந்தால் சாப்பிடும் முன்பாக உன்னைச்சுற்றிப் பார், யாராவது பசியோடு இருந்தால் அவர்களுக்கு உன்னிடம் உள்ள இட்லிகளில் இரண்டை அல்ல நான்கையுமே கொடு அவர் பசியை முழுமையாக ஆற்று நீ தண்ணீர் குடி பராவாயில்லை அவருக்கு வயிறு நிறையும் உனக்கு மனசு நிறையும்' என்று சொல்லிச் சொல்லியே எங்களை வளர்த்தவர்.

இப்போது அவர் இல்லை இருந்தாலும் அவர் சொல்லிக் கொடுத்த நல்ல பண்புகளை பழக்கவழக்கங்களை தொடர்கிறேன், வீட்டில் ரேஷன் கடை அரிசியில் செய்த சாப்பாடுதான் சாப்பிடுகிறோம் வேலைக்கு போகும் போது என்னுடன் மூன்று பார்சல் சாப்பாடு கொண்டுபோவேன் யாராவது இரண்டு பேருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுத்தான் பிறகு நான் சாப்பிடுவேன்

நான் கையில் வைத்திருக்கும் சிறு பையில் காசு இருக்காது ஆனால் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலும் பிஸ்கட் பாக்கெட்டும் இருக்கும் காரணம் ரோட்டில் யாராவது மயங்கிவிழுந்தால் முதலில் கேட்பது தண்ணீர்தான் அதுவே பசி மயக்கமாக இருந்தால் பிஸ்கட் உடனடியாக உதவும்.

எங்கள் குடும்பம் பெரிய குடும்பமாக இருந்ததால் அப்பாவின் சம்பளம் சாப்பாட்டுக்கே கூட போதுமானதாக இருக்கவில்லை ஆகவே படிப்பை பள்ளியோடு விட்டுவிட்டு நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

பார்க்காத வேலை இல்லை போகாத ஊர் இல்லை அனுபவிக்காத கொடுமை இல்லை அடையாத சிரமம் இல்லை இப்போதும் கூட வசதியோடு வாழ நினைக்கவில்லை வறுமை வாட்டாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைதான்.

தற்போது ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்க்கிறேன், அறக்கட்டளை தலைவர் உறுப்பினர்கள் உள்ளீட்ட அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர் நல்ல மதி்ப்பு கொடுக்கின்றனர் அறக்கட்டளையில் இருந்து ஒரு உதவியாளருக்கு எவ்வளவு சம்பளம் தரமுடியுமோ அந்த சம்பளத்தை குறைவில்லாமல் தருகின்றனர்.

ஆனால் அந்த 6500 ரூபாய் சம்பளத்தில் 4 ஆயிரம் ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிட்டு மீதத்தில் ‛கவுரமாக' குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லலாம் அல்லது நடத்த பேராடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் சோர்வாகிவிடக்கூடாது என்பதற்காக என்னை நானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள நான் அடிக்கடி ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தேன், என் மனைவி என்னை உற்சாகப்படுத்தினாள், பொதுவெளியில் சொல்லுங்கள் என்றார் அதன்படி வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சொல்கிறேன், பார்வையாளர்கள் மனதை வெல்லுகிறேன், என்னையும் என் பின்னனியையும் தெரிந்தவர்கள் குடும்ப, அலுவலக மற்றும் மன்ற விழாக்களுக்கு அழைத்து ‛ஜோக்' சொல்லவைத்து அதற்கு சன்மானம் கொடுத்தனுப்புவர்.பல நேரங்களில் உள்ளூர அழுதாலும் இது போன்ற தன்மானத்திற்கு குறைவின்றி சன்மானம் கிடைக்கும் நேரங்களில் நானும் சிரிப்பேன்.

சரவெடி ஸ்ரீதரை சிரிக்க வைக்க உங்கள் இல்லங்களில் அலுவலகங்களில் நடக்கும் சின்ன சின்ன விழாக்களுக்கு அழைக்கலாம் அவரது எண்:9499901986.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
09-மே-201919:41:12 IST Report Abuse
karutthu பாவம் அவர் நிலைமை . வறுமையில் வாடினாலும் சிரிப்பிலேயே சமாளிக்கிறார் . கடவுள் உங்களை கைவிடமாட்டார் .நேரம் காலம் கூடும்போது உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
13-பிப்-201903:29:01 IST Report Abuse
 nicolethomson வேதனையா இருக்கு, இவர்கள் அல்லவா நிஜ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-பிப்-201921:07:03 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவரின் கஷ்டங்கள் கடந்து போக இறைவன் அருள்புரியட்டும். பெரியவா சரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X