சத்தியமங்கலம்: ''தமிழகத்தில், வருமானம், பதவி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு மட்டுமே, அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் உள்ளனர்.'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில், அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளார் தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என்ற நிகழ்ச்சி நடத்தி, மக்களை சந்தித்து வருகிறார். சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசுக்கு பயந்து, அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். திருவாரூர் இடைத்தேர்தலை, தி.மு.க., சந்திக்க பயந்து, பிற கட்சிகளை தூண்டி வழக்கு போட வைத்து தேர்தலை நிறுத்தியுள்ளனர். வருமானம், ஆட்சி அதிகாரம், பதவிக்கு ஆசைப்பட்டு தான் பல நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் உள்ளனர். பழனிசாமி முதல்வராக, செம்மலை எதிர்த்தார்; தற்போது ஜால்ரா அடிக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து, தி.மு.க.,வை டிபாசிட் இழக்க செய்து, குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றேன். அதேபோல, லோக்சபா தேர்தலில் எங்களை ஆதரித்தால், தாளவாடி மலைப்பகுதியில் நீங்கள் நீண்ட காலமாக கேட்டு போராடி வரும் அரசு மருத்துவமனை, தடுப்பணைகள் கட்டப்படும். திம்பம் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.