பள்ளிபாளையம்: காவிரியாற்றில் தண்ணீர் இல்லாமல், வறண்டுள்ளதால் பள்ளிபாளையம் பகுதியில் குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியாற்றில், கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரத்து குறைந்து வந்தது. இரண்டு வாரங்களாக முற்றிலும் குறைந்து விட்டது. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதி முழுவதும் வறண்டு பாறைகளாக காணப்படுகின்றன. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியான, ஆவத்திபாளையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, ஆலாம்பாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு மற்றும் மாவட்டத்தின் பல இடங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது தண்ணீர் எடுக்கும் இடத்தில், வறண்டுள்ளதால், ஒரு வாரமாக குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் குடிநீர் வழங்கும் பணியாளர்கள் கூறியதாவது: ஓடப்பள்ளி தடுப்பணையில், தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் குறைந்து விட்டதால், தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது, சமயசங்கிலி தடுப்பணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இதை வைத்து, வழக்கம் போல குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.