கரூர்: ''வரும், 18,19,20 ஆகிய தேதிகளில், நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்,'' என, தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
கரூரில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 12 ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. 10 ஆண்டாக போனஸ் வழங்கப்படவில்லை. மேலும், பி.எஸ்.என்.எல்., நிறுவ னத்துக்கு, 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், வேண்டும் என்றே மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. தனியார் நிறுவனத்துக்கு மட்டும் கேட்டவுடன் ஒதுக்கீடு செய்கின்றனர். இதனால், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சம்பள உயர்வு கேட்டால், ஓய்வு பெறும் வயதை குறைப்பது, விருப்ப ஓய்வு உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதிக்கின்றனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள மத்திய அரசு கடிதம் கொடுக்க மறுக்கிறது. ஆனால், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் கடன் பெற்றுள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்க காரணம், நாங்கள் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, ஜியோ நிறுவனத்தின் முகவராக செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை சேர்ந்தவர்கள், நிதி அயோக் அமைப்பில் உள்ளனர். அவர்கள் தவறான ஆலோசனைகளை வழங்குகின்றனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை மூட, மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது தேச விரோதமாகும். தனியாரிடம் தொலைத் தொடர்பு முழுவதும் சென்றுவிட்டால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். கடந்த, 2000ல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொடுத்த வாக்குறுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும். இதனால், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 18,19,20ல், நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட உள்ளோம். மேலும் நாளை, நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.