புதுடில்லி : டில்லியில் துணைநிலை கவர்னர் - முதல்வரில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு, இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :
* லஞ்ச ஒழிப்பு துறை கட்டுப்பாடு: லஞ்ச ஒழிப்பு துறை துணைநிலை கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
* அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம்: மின்துறை, வருவாய்த்துறை, கிரேட் 3 மற்றும் 4 ம் நிலை பணியாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் டில்லி அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். இதில் டில்லி அரசு - கவர்னர் இடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டால் கவர்னரின் முடிவே இறுதியானது. அரசு வழக்கறிஞர்களை டில்லி அரசால் நியமிக்க முடியும் என நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.
* விசாரணை கமிஷனுக்கு உத்தரவு: விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கே உள்ளதாக இரு நீதிபதிகள் ஒருமனதாக தெரிவித்தனர்.
* துறைகள் மீதான கட்டுப்பாடு: துறைகள் மீதான கட்டுப்பாடு அதிகாரம் யாருக்கு என்பதில் நீதிபதி சிக்ரியின் கருத்திற்கு நீதிபதி பூஷண் உடன்படவில்லை. மேலும் அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழே வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இதனால் துறைகள் மீதான கட்டுப்பாட்டு அதிகாரம் கவர்னருக்கு உள்ளதா அல்லது டில்லி அரசுக்கு உள்ளதாக என்பது பற்றி 3 நீதிபதிகள் அமர்வு தீர்மானிக்கும் என தெரிவித்தனர்.
* விவசாய நிலத்தின் விலை: விவசாய நிலங்களின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் டில்லி அரசுக்கே உள்ளது என இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.
* அமைதியை பேணுங்கள்: மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளியுங்கள். இருதரப்பும் பரஸ்பரம் மதிப்பளித்து அமைதியை பேண வேண்டும் என்றனர் இரு நீதிபதிகளும்.