புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்காக எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய மோடி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து நிற்கிறது. நாடு தற்போது மிகவும் கோபமாக உள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். பாக்., மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இதற்கு மிகப் பெரிய விலையை பாக்., கொடுக்கும். இனி பாக்., எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும். இந்தியாவின் ஸ்திரதன்மையை இது போன்ற தாக்குதல்கள் பாதிக்காது.

எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமையை மறந்து பயங்கரவாதிகளை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாக்.,ன் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE