புதுடில்லி : புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாக்., உடனான வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிக அளவிலான சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை எடுக்கும்.

சர்வதேச அரங்கில் பாக்.,ஐ தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்கும். பாக்.,ஐ தனிமைப்படுத்த வேண்டும். தாக்குதலுக்கு காரணமானவர்கள் உரிய விலை கொடுப்பதை பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி செய்வார்கள். வர்த்தக ரீதியிலான எந்த சலுகையும் இந்தியாவிலிருந்து பாக்.,க்கு அளிக்கப்படாது. பாக்.,க்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து திரும்பப் பெறப்படுகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE