சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. குற்றவாளிகள் மலிந்து விட்டனர். ஒருவரை ஒருவர், வெட்டி வீழ்த்தும் எண்ணமும், செயலும் அதிகரித்து விட்டன. இதற்கெல்லாம் காரணம், மனித நேயம், சகிப்புத் தன்மை இல்லாதது தான்.சக மனிதனையும், மனிதனாக மதித்து, அவன் உள்ளத்தை புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே, மனிதாபிமானம். இதைத் தான், 'உனக்கு நீ எதைச் செய்ய விரும்ப மாட்டாயோ, அதை பிறருக்கு நீ செய்யாதே' என்கிறார், சீன தத்துவ ஞானி, கன்பூஷியஸ்.தவிர்க்க முடியாதவற்றை யும், ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் தான், சகிப்புத் தன்மை. நம் தீர்மானத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள், பல இருக்கின்றன. அதை நாம் புரிந்து கொள்வதே இல்லை; அதுவே, நம் மன உளைச்சலுக்கு காரணம்.'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...' என, புலம்புபவர்கள், எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில், இப்படித் தான் நடக்கிறது என்பதை, புரிந்து கொள்வதில்லை.
அதனால் தான், கடமையாற்ற செல்லும் போலீஸ்காரர்களையும், அப்பாவிகளையும், கண்மூடித்தனமாக தாக்குகின்றனர்.
அந்த போலீஸ்காரரும், ஒரு குடும்பத்திற்கு தேவையானவர் என்பதை, சட்டத்தை கையில் எடுக்கும் தனி மனிதர்கள், யோசிப்பது இல்லை.சட்டத்தை கையில் எடுக்க, அந்த சட்டத்தை அமல்படுத்தும், போலீஸ்காரர்களுக்கே அனுமதியில்லை. அவ்வாறு இருக்கையில், பிறரை தாக்க, அடித்து கொல்ல, தனி மனிதர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?அத்தகைய நேரங்களில், வன்முறையாளர்களை தடுத்து நிறுத்த, பொதுமக்கள் ஏன் முன்வருவதில்லை? அத்தகைய நேரத்தில், அந்த வன்முறையாளன் உயிர் போனால் கூட, வன்முறையை தடுத்தவர்களை, சட்டம் காப்பாற்றும்; இது, பலருக்கு தெரிவதில்லை.அப்பாவிகளை அடித்து கொல்லும், மனித நேயமற்ற செயல்களை தடுக்க, போலீஸ் மட்டும் போதாது. அந்தந்த பகுதியில், மனித நேயர்கள், பொது மக்கள் என, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக, குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்.இரண்டு பிரிவினர் இடையேயான மோதல் தான், பிரச்னைக்கு காரணம் என்றால், அதை பேசித் தீர்க்க, தாதாக்கள் தேவையில்லை. நல்லெண்ணம் கொண்ட நடுநிலையாளர்களே போதும்.
அந்த காலத்தில், அரசின் அதிகாரம் பெற்ற போலீசார் இருந்த போதிலும், கிராம தலைவர்கள், பஞ்சாயத்து நிர்வாகிகள், பல பிரச்னைகளை, சுமுகமாக தீர்த்து வைத்து உள்ளனர். அதில் பின் ஏற்பட்ட குழப்பங்களால், அந்த சேவை, இப்போது மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளது.சாதாரண பிரச்னையையும், நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, ஆண்டுக்கணக்கில், நீதிமன்ற படியேறி வருகின்றனர். இதை, சுய கவுரவம், ஆணவம் போன்றவை தடுக்கின்றன.அண்ணனிடம் தம்பி, சகித்து போவதில்லை. அண்டை வீட்டாரிடம் மோதல், காரணமே இல்லாமல், பிறர் மீது வன்மம் போன்றவற்றால், ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துகின்றனர். அந்த குற்றங்களுக்காக அவர்கள், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும், நீதிமன்றங்களில் காத்து கிடக்க தயாராகின்றனர்.இந்த சகிப்புத்தன்மையை, வன்முறைக்கு முன் காட்டியிருந்தால், கோர்ட், வழக்கு, காத்திருப்பு தேவையில்லையே!நீதிமன்றங்களில் வழக்குகள், நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதற்கு, நீதிபதிகள் அல்லது வழக்கறிஞர்கள் காரணம் இல்லை. பொறுமை இழந்த பொதுமக்கள் தான் காரணம்.சரிந்து விட்ட சகிப்புத்தன்மை, மரித்துப் போன மனிதநேயம் போன்றவை தான், இந்த கோளாறுகளுக்கு காரணம்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, கிராமங்களின் பிரச்னைகள், விவகாரங்கள், அந்த கிராமங்களுக்குள்ளேயே பேசித் தீர்க்கப்பட்டன. ஆனால், இப்போது பல கிராமத் தலைவர்களுக்கு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாம் நன்றாக தெரிகிறது.எப்படி வழக்கு தொடர வேண்டும்; 'வாய்தா' வாங்க வேண்டும் என்பதெல்லாம், அவர்களுக்கு அத்துபடி!இதற்கு காரணம், சகிப்புத்தன்மை குறைந்தது தான். எதற்கு எடுத்தாலும், மோதல், சண்டை, தகராறு, வழக்கு, நீதிமன்றம், வழக்கறிஞர்கள், வாய்தா என்ற மன நிலைக்கு பெரும்பாலானோர் வந்து விட்டனர்.
எனினும், இன்னமும் சில கிராமங்களில், பஞ்சாயத்துகள் சிறப்பான முறையில் தான் செயல்படுகின்றன.தாங்கள் செய்வது, பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் ஒவ்வாத செயல் என, பலர் யோசிப்பதே இல்லை. அமைதியான மன நிலையே பலருக்கு இருப்பதில்லை. அதனால் தான், வன்முறையில் இறங்கி, வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர்.கள்ளத்தனமான தன் காதலுக்கு, இடையூறாக இருப்பான் என கருதி, கணவனை கொல்லும் மனைவி; பெற்ற குழந்தைகளை கொல்லும் தாய் போன்றோரின் குற்றங்கள் பற்றிய செய்திகளை, சகிக்க முடியவில்லை.இத்தகையோரைப் பார்த்து, 'இத்தகைய முடிவை எடுக்கும் நீங்கள், உயிருடன் இருந்து, என்ன சாதிக்கப் போகிறீர்கள்...' என, கேட்கத் தோன்றுகிறது. இத்தகைய கொடூர எண்ணம் கொண்டவர்கள், மன நோயாளிகள். இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள்.அன்னியரிடம் இருந்து போராடி பெற்ற சுதந்திரம், அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதை, ஒருவருக்கொருவர், ஏதாவது ஒரு காரணத்திற்காக பறிப்பது, எந்த வகையில் நியாயம்?இத்தகைய நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக இயற்றப்பட்டவை தான், சட்டங்களும், விதிமுறைகளும். அத்தகைய சட்டங்களும், விதிமுறைகளும் தொடர்ந்து இயற்றப்படுகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் திருந்திய பாடில்லை!குற்றங்கள் நிகழும் போது, 'தண்டனைகள் போதாது' என்ற குரல் ஒலிக்கிறது. கடுமையான சட்டங்களை அமல்படுத்தினால், அராஜகம் என்கின்றனர்.
இதெல்லாம், தனி மனித கோளாறுகள் தானே தவிர, சட்டத்தின் தப்பில்லை.மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும், தனி மனிதர்களிடம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என, சட்டம் எந்த வரையறையும் வகுக்கவில்லை. ஆனால், அதற்கெல்லாம், நம் முன்னோர் எழுதிய அறநுால்கள் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்தாலே, அவற்றில் சிலவற்றை பின்பற்றினாலே, தனி மனிதர்கள் சரியாகி விடுவர்.குற்றங்களுக்கும், குழப்பங்களுக்கும், கல்வியறிவு தான் காரணம் என, சிலர் கூறுவர். அது தவறு. குற்றங் களுக்கு கல்வியறிவு தேவையில்லை. மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும் தான் அவசியம்.
கல்வியில் உயர்ந்தவர்களும், குற்றங்கள் செய்கின்றனர். கல்வியறிவே இல்லாத பலர், குற்றங்களே செய்யாமலும் இருக்கின்றனர். இந்த வேறுபாட்டில், முந்தி நிற்பது, மனிதாபிமானமும், சகிப்புத்தன்மையும் தான்; இரண்டும் இருந்தால், குழப்பம் ஏற்படாது.காரணமே இல்லாமல், ஒருவரை ஒருவர் சாடுவதும், சண்டையிடுவதும், பகைமையை வளர்ப்பதும் அதிகரித்துள்ளது. இது தனி மனிதர்களிடம் தான் என்றில்லாமல், இயக்கங்கள், அமைப்புகளிடமும் வளர்ந்து விட்டது.இதனால், அரசு இயந்திரத்தின் சுமுகமான செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுகிறது. ஆர்ப்பாட்டங்களும், அமளிகளும் அதிகரித்து, சமூகத்தில் அமைதி பறி போகிறது. மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய, சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.அரசில் அதிகாரிகளாக இருப்பவர்களில் பலர், தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, ஆட்சியாளர்களை திருப்திபடுத்தும் செயல்களிலேயே, தங்களின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். அத்தகையவர்கள், மனிதநேயத்தையும், சகிப்புத்தன்மையையும் மறந்து விடுகின்றனர்.
மொத்தத்தில், சமுதாயத்தில், மடிந்து விட்டது மனித நேயம்; சரிந்து விட்டது சகிப்புத்தன்மை. அதை சீர்செய்ய வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை. இதற்கு சட்டங்கள், விதிமுறைகள் வகுக்க முடியாது.ஒவ்வொருவர் மனதிலும், இந்த எண்ணங்கள் வளர வேண்டும். அதனால், நாடும் வளம் பெறும்; நாட்டு மக்களும் சுபிட்ஷம் பெறுவர்.இ - மெயில்: spkaruna@gmail.comமொபைல்: 98404 88111