பொது செய்தி

தமிழ்நாடு

தமிழாய் வாழ்ந்த பெருந்தகை!

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாத அய்யரின் வரலாற்றை, தமிழ் மொழியின் வரலாறு எனலாம். அவருக்கு சங்கீதம், சிவபக்தி மீதும், அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. எனினும், சங்கீதத்தின் மீது உள்ள ஈடுபாட்டை குறைத்து, தமிழ் மொழியின் மீது காட்டினார்.உ.வே.சா.,வுக்கு, ஓவியம் வரைவதிலும் திறமை இருந்தது. சித்திரக் கவிதைகளுக்கு, தானே படம் வரைவார். பேசுவதிலும் கெட்டிக்காரர்.இன்று நாம், பழைய தமிழ் இலக்கியங்களை படிக்கிறோம் என்றால்,அதற்கு முக்கியக் காரணகர்த்தா, தமிழ்த் தாத்தா தான். பழைய இலக்கியங்களை, ஊர் ஊராகப் போய்த் தேடி பதிப்பித்த பெருமை இவருடையது.திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகிய மூன்று நுால்களையும் ஒன்று திரட்டி, பன்னிரு திருமுறைகள் என்ற புதிய நுாலாக, செங்கல்வராயப் பிள்ளை வெளியிட்டார். அந்த நுாலின் பிரதியை, தமிழ்த் தாத்தாவிடம் அவர் கொடுத்தார்.நுாலைப் படித்துப் பார்த்த தமிழ்த் தாத்தா, மனம் உருகி, செங்கல்வராயப் பிள்ளையின் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டார். வயதில் குறைந்தவரான செங்கல்வராயப் பிள்ளை பதறி, 'என்ன காரியம் செய்கிறீர்கள்... என்னை நீங்கள் வணங்கலாமா... நான் இளையவன் இல்லையா...' என்றார்.'முருகனுடைய பெருமைகளை ஆராய்ந்த கைகளாயிற்றே. அதனால் தான் அந்தக் கைகளை, என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்' என்றார், தமிழ்த்தாத்தா.கடந்த, 1935ம் ஆண்டு, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு, 80 வயதானதால், சதாபிஷேக விழா, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை வகித்தவர், சர்.முகமது உஸ்மான் என்ற முஸ்லிம் பிரமுகர்.தன் இளமைக்காலம் தொட்டே, ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து வாழ்ந்தவர் அய்யர். அவருடைய ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே சிந்தனை எல்லாம் தமிழ் தான்.அந்த விழாவில் தான், எழுத்தாளர், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, 'தமிழ்த் தாத்தா' என, உ.வே.சாமிநாத அய்யரை அழைத்தார். 'தமிழுக்கு ஔவையார் பாட்டியாக இருப்பது போல், தமிழுக்கு தாத்தாவாக, உ.வே.சா., இருக்கிறார்' என்றார், கல்கி.திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் என்பவையே பத்துப் பாட்டுகள்.கடந்த, 1889ல், பத்துப்பாட்டை, உ.வே.சா., பதிப்பித்தார். அப்போது ஏற்பட்ட சுவையான சம்பவத்தை பார்க்கலாம்.திருநெல்வேலிக்கு அருகில், இப்போதைய துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஆழ்வார் திருநகரி என்னும் ஊருக்குச் சென்றார், உ.வே.சா., அங்கே லட்சுமணக் கவிராயர் என்ற புலவரை சந்தித்து, பத்துப்பாட்டு எனும் நுாலைத் தேடி வந்திருப்பதாக கூறினார்.லட்சுமணக் கவிராயர் இல்லத்தில் எத்தனையோ ஓலைச் சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேடிப் பார்த்தார். பத்துப்பாட்டு மட்டும் அகப்படவேஇல்லை.அப்போது, லட்சுமணக் கவிராயர், 'என் வேலைக்காரன், சில ஓலைச் சுவடிகளை எடுத்து, என் மாமனாரிடம் கொடுத்து விட்டான். ஒரு வேளை நீங்கள் தேடி வந்த நுால் அவரிடம் இருக்கலாம்' என்றார்.'வாருங்கள் போய்த் தேடுவோம்' என, கவிராயரை, உ.வே.சா.,அழைத்த போது, 'என் மாமனார் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்' என்றார்.'அப்படியானால் நான் மட்டும் போய்ப் பார்க்கிறேன்' என்றார், உவே.சா., 'வேண்டாம்... என், மாமனாருக்கு, தமிழறிஞர்களை மதிக்கத் தெரியாது; அவமானப்படுத்தி விடுவார்' என்றார், கவிராயர்.'அப்போ வேறு என்ன தான் வழி...' என்றார், உ.வே.சா., 'இன்னும் ஒரு நாள் பொறுங்கள்' என்று மட்டும் கூறினார், கவிராயர்.சோர்வோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார், உ.வே.சா., இரவு நேரம், நிலா வெளிச்சம். அப்போது, லட்சுமணக் கவிராயர், மேல் துண்டில் எதையோ சுற்றி எடுத்தபடி, ஓடோடி வந்தார்.அதன் உள்ளே இருந்த ஓலைச் சுவடிக் கட்டுகளை, உ.வே.சா.,விடம் நீட்டி, 'நீங்கள் தேடி வந்த நுால் இது தானா பாருங்கள்' என்றார் கவிராயர்.பிரித்துப் பார்த்த, உவே.சா., முகத்தில் மகிழ்ச்சி. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முதலில் இருந்தது. தொடர்ந்து பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு ஓலைச்சுவடிகள் இருந்தன. லட்சுமணக் கவிராயரை அப்படியே கட்டியணைத்து, 'இந்த ஓலைச் சுவடிகள் எப்படிக் கிடைத்தன?' என்றார். 'என் மாமனார் வீட்டிற்கு போய்த் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்தேன்' என, பதிலளித்தார் கவிராயர். 'நீங்கள் தான் அவர் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என, சத்தியம் செய்திருப்பதாகக் கூறினீர்களே?' என்றார், உ.வே.சா.'ஆமாம். சத்தியம் செய்தது உண்மை தான். ஆனால், தமிழுக்காக நான் என் மானத்தை விற்று விட்டேன்' என்றார், கவிராயர். அதை கேட்டு, சிலை போல நின்றார், உ.வே.சா.மஹாத்மா காந்தி சென்னைக்கு வந்த போது, அவருக்கு தமிழில் வரவேற்பு மடல் எழுதிக் கொடுக்க வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் முக்கிய அங்கம் வகித்த, கல்கி, 'தமிழ் வரவேற்பு மடலை, உ.வே.சா., எழுதினால் தான் சரியாக இருக்கும்' என்றார்.வாழ்த்து மடலுடன் மஹாத்மாவைப் பார்க்க வந்தார், உ.வே.சா.அவரை பார்த்ததும் மஹாத்மா, தன் இரு கைகளாலும் கும்பிட்டு, 'அடுத்த முறை எனக்கொரு பிறவி இருந்தால், தமிழனாகப் பிறந்து, இவரிடம் தமிழ் கற்க வேண்டும்' என்றார்.தஞ்சை வாணன் கோவை என்பது, 96 பிரபந்த வகைகளில் ஒன்று; தஞ்சையில் இருந்த வள்ளலைப் பற்றிய நுால் அது. தஞ்சை வாணன் கோவையைப் பற்றி, உ.வே.சா., ஆராய்ச்சி செய்திருந்தார். 'தஞ்சை வாணன் ஆட்சி நடத்திய தஞ்சை, சோழ மண்டலத்தில் உள்ள தஞ்சாவூர் இல்லை; பாண்டிய நாட்டிலுள்ள தஞ்சாக்கூர் தான் அது' என, அவர் முடிவு செய்திருந்தார்.மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில், திருப்பாச்சத்தி என்ற ரயில் நிலையம் இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தெற்கே போனால், தஞ்சாக்கூர் வரும்.இதே விஷயத்தை, சங்கர மடத்தில், காஞ்சிப் பெரியவர், சாமிநாத அய்யரிடம் விளக்கினார். அதை கேட்ட, உ.வே.சா., மஹா பெரியவரின் வரலாற்று திறனை வியந்தார்.பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச் சங்கத்தை நிறுவிய போது, உ.வே.சா.,வை தான், தலைமைப் புலவராக ஆக்கினார். பாண்டித்துரைத் தேவர் தான், ராமநாதபுரம் மஹாராஜாவிடம், உ.வே.சா.,வை அறிமுகப்படுத்தினார்.உ.வே.சா.,வுக்கு பெரிய வெகுமதி கொடுக்க, ராமநாதபுரம் ராஜா முடிவு செய்தார்.நான்கு கிராமங்களை, உ.வே.சா.,விற்கு பரிசாக, பட்டயம் எழுதித் தருவதாக ராஜா சொல்லி விட்டார். ராஜா சொன்னால் மறுக்கக் கூடாது எனக் கருதி, உ.வே.சா., எதுவும் பேசவில்லை. மறுநாள் நாள் காலையில், பாண்டித்துரைத் தேவரிடம், தன் நிலையை கூறி, 'அந்த கிராமங்களின் வரி வருவாயை நான் வசூலிக்கப் போவதில்லை. மன்னரிடமே அவை இருக்கட்டும்' என்றார்.உ.வே.சா.,வின் பெருந்தன்மையை, மன்னர் பாராட்டினார்.உ.வே.சா.,வையும், தமிழையும் பிரித்துப் பார்ப்பது கடினமான காரியம். தன் வாழ்க்கை முழுவதுமே, தமிழுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவர் பெருமையை, அவரின் நினைவு நாளான இன்று நினைவுகூர்வோம்!தொடர்புக்கு: 94442 73192

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201905:12:11 IST Report Abuse
Bhaskaran அவருடைய பிறந்தநாள் விழாவில் யாரும் அழைக்காமலேவந்து மகாகவிபாரதி தமிழ் உள்ளவரை உன்பெயர் pulavarnaavil நிலைத்துநிற்கும் என்று வாழ்த்திவிட்டுப்போனார்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-பிப்-201904:02:39 IST Report Abuse
Cheran Perumal இவர் ஆரிய வந்தேறிகளின் கூட்டம். தமிழே அழிந்திருந்தாலும் கவலையில்லை, இந்த ஆளைப்பற்றி எல்லாம் புகழ்வதை எதிர்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X