"Centre Decides To Stop India's Share Of Water Flowing To Pak": Nitin Gadkari | பாக்.கிற்கு நதிநீரை நிறுத்த இந்தியா முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்.கிற்கு நதிநீரை நிறுத்த இந்தியா முடிவு

Updated : பிப் 21, 2019 | Added : பிப் 21, 2019 | கருத்துகள் (50)

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு செல்லும் நதிகளில் நீரை நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா எடுத்து வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சமீபத்தில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.


திட்டம்இதையடுத்து, 'பயங்கரவாதத்தை துாண்டிவிடும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, 'மிக விரும்பத்தக்க நாடு' என்ற அந்தஸ்தை, மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான, சுங்க வரி, 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பொருளாதாரம், கிரிக்கெட், வர்த்தகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய இந்தியா இப்போ பாகிஸ்தானிற்கு அளித்து வரும் நதிநீரை நிறுத்தி அவர்களுக்கு பாடம் கற்பிக்க திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே பொருளாதாரம் வர்த்தகத்தை குறைத்து பாகிஸ்தானின் வருவாயில் கை வைத்தது இந்தியா. உலகம் முழுவதும் பாகிஸ்தானிற்கு எதிரான கருத்துக்களை உருவாகக்கி பல நாடுகள் பாகிஸ்தானை கண்டிப்பதற்கும் ஏற்பாடு செய்தது இந்தியா.

அடுத்தகட்டமாக, சிந்து நதி ஒப்பந்தம் வாயிலாக, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நீரை தடுத்து நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.கடந்த, 1960ல், இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட, சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம், சிந்து நதியின் துணை நதிகளான, பியாஸ், ரவி, சட்லஜ் ஆகியவற்றில் பாயும் நீரை, இந்தியா பயன்படுத்தலாம்.அதே நேரத்தில், சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளில் உள்ள நீரை, பாகிஸ்தான் பயன்படுத்தலாம்.

இந்த நதிகள், இந்தியா வழியாக, பாகிஸ்தானுக்கு பாய்கின்றன. ஆனால், இந்த ஒப்பந்தத்தில், எவ்வளவு நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.கடந்த, 2016ல், ஜம்மு - காஷ்மீரின் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதும், பாகிஸ்தானுக்கு செல்லும் இந்த நதி நீரை தடுத்து நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டது.


ஆலோசனைதற்போது, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாகி வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிதின் கட்கரி பேசியதாவது:

நம் நாட்டில் இருந்து, மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கு பாய்கின்றன. அதில், நமக்கு முழு உரிமை இருந்தும், தண்ணீரை, பாக்.,குக்கு வழங்கி வருகிறோம்.இந்த நதி நீரை திருப்பி, யமுனை நதியுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், யமுனை நதியில் எப்போதும் தண்ணீர் வரத்து இருக்கும்.இந்த மூன்று நதிகளையும், யமுனையுடன் இணைப்பதன் மூலம், நீர்வழி போக்குவரத்தும் இயக்க முடியும். இது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


பிரச்னைக்கு யார் காரணம்?ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரவரத்தில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா பேசியதாவது:காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாததற்கு, காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், ஜவஹர்லால் நேரு செய்த தவறே காரணம். விடுதலைக்குப் பின், நாட்டை ஒருங்கிணைக்கும் பணி நடந்தது.

மிகவும் சிக்கலாக இருந்த, ஐதரா பாதை, தன் சிறப்பான நடவடிக்கைகளால், சர்தார் வல்லப பாய் படேல், சிக்கல் இன்றி இணைத்தார்.அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீரை இணைப்பது குறித்த விஷயத்தை, நேரு கையாண்டார். அவர், சரியான முறையில், கையாளவில்லை. அதனால் தான், இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. இதைப் பயன்படுத்தி,பாகிஸ்தான், பயங்கரவாதத்தை துாண்டி விடுகிறது.

அப்போது, படேல் பிரதமராக இருந்திருந்தால், இந்தப் பிரச்னையே ஏற்பட்டிருக்காது. புல்வாமா தாக்குதல் உட்பட, ராணுவம் தொடர்பான பிரச்னைகளிலும், காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.


பாக்., அவசர ஆலோசனைபாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் தலைமையில், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.புல்வாமா தாக்குதலுக்குப் பின், இரு தரப்பிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில், ராணுவ தலைமை தளபதி, குமர் ஜாவத் பஜ்வா, மற்ற படைகளின் தலைவர்கள், உளவுத்துறை தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு முன், இம்ரான் கானும், பஜ்வாவும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அமைப்புகளுக்கு தடை

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி,ஹபீஸ் சயீத் தலைவனாக உள்ள ஜமாத் -உத்-தாவா மற்றும் பலாஹி இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றுக் தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கிரிக்கெட்டில் தனிமைகிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் உடன் ஆடுவதை தவிர்த்து தனிமை படுத்துகிறது இந்தியா. இந்தியா விளையாடாவிட்டால் சர்வதேச அளவில் கிரிக்கெட் வருவாய் பாதிக்கப்படும். கடைசியாக இந்தியா நதிநீரை கையில் எடுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X