கூட்டணி அறிவிப்புகள் காட்டும் திசை என்ன

Added : பிப் 21, 2019
Advertisement

தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, தன் கூட்டணியில் எந்தக் கட்சிகள், அவற்றின் இடங்கள் எத்தனை என்ற அறிவிப்பில் முந்திக் கொண்டிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., பக்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணையாதது திருப்பம். தொடர்ந்து தி.மு.க., கூட்டணி விவரமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படும் தமிழக அரசை, மிக மோசமாக விமர்சித்த தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைப்பதில் முந்த முடியாதது, அங்குள்ள கருத்துக் குழப்பங்கள் காரணம். மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கட்சிகளுடன் தனியாக பேசும் போது என்ன முடிவு செய்கிறார் என்பது, வெளியே அதிகம் தெரியாது. அதே போல ஜெயலலிதா கூட்டணி அமைத்தாலும், போட்டியிடும் தொகுதிகள் மட்டுமே தகவலாக வெளி வரும்.ஆனால், அரசியல் களம் மாறியதின் அடையாளமாக, சென்ற வாரத் துவக்கத்தில் இருந்தே, அ.தி.மு.க., கூட்டணிப் பேச்சுக்கள், பா.ஜ.,வுடன், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் நடப்பதாக வெளிவந்தன. அதற்கு முன்பாக, அ.தி.மு.க., போட்டியிட விரும்பும் வேட்பாளர் விருப்ப மனுக்களை வாங்கிய எண்ணிக்கை, பல நுாறுகளை தாண்டியிருக்கிறது. இது, அ.தி.மு.க.,வில் தினகரன் பிரிவு ஒரு பொருட்டல்ல என்பதின் அடையாளம்.தவிர, லோக்சபா தேர்தல் மட்டும் இன்றி, 21 தொகுதிகளில், எம்.எல்.ஏ.,க்களை வெற்றி முகம் கண்டாக வேண்டிய புதிய கட்டாயமும் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், இரு ஆண்டுகள் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் துணை முதல்வரும், வேறு சில சீனியர் அமைச்சர்களும் பணியாற்றி வருகின்றனர். அதிலும், இக்காலத்தில் அமைச்சர்கள் மாற்றமும் இல்லை. பட்ஜெட்டில் புதிய வரிகளும் கிடையாது. மாறாக சமுதாய நலன் என்ற கருத்தில், நியாய விலைக்கடை கார்டு உள்ள அனைவருக்கும், 1,000 ரூபாய், அதற்கு அடுத்ததாக, வறுமைக் கோட்டில் உள்ளவர்களுக்கு, 2,000 ரூபாய் தர முன்வந்திருக்கிறது அரசு.ஆளும், அ.தி.மு.க.,வை தனது கருத்துக்களின்படி விமர்சிக்க, தி.மு.,க.,வுக்கு உரிமை உண்டு என்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் அணி சேர்ந்து போட்டியிடும் போது, அக்கட்சியின் தலைவர் ராகுல் வீட்டில் இருமுறை பேசியும், தி.மு.க.,வின் பெண் தலைவர் கனிமொழி முடிவு செய்வதில், தாமதம் குறித்து, அதிக தகவல் வெளிவரவில்லை. இன்று ராகுல் தலைமையில், கூட்டணி ஆட்சி மத்தியில் அமையுமா என்பதைக் காட்டும் அறிகுறிகள் அதிகம் இல்லாத போது, காங்கிரஸ் கட்சிக்கு, பாண்டிச்சேரி உட்பட, 10 இடங்கள் கிடைத்தது, கவுரவமானதே. இனி விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்டுகளுக்கு, தி.மு.க., 'அளந்து படி போட' வேண்டிவரும்.ஏனெனில், இந்த விஷயத்தில், பா.ஜ., தனக்கு, ஐந்து சீட் என்பதை முடிவு செய்திருக்கிறது. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தெளிவாக, '21 சீட்களிலும் வெல்ல ஆதரவு தந்திருக்கிறார்; மத்திய அரசில், தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., அங்கம் என்றும் உறுதி கூறியிருக்கிறார். பா.ஜ., தமிழகத்தில் தன் சின்னத்தில் சீட் பிடித்தால், அது பெரிய திருப்பமாகும். பா.ம.க.,வைப் பொறுத்தளவில் அக்கட்சிக்கு மீண்டும் அரசியல் புனருத்தாரணமாக, இத்தேர்தல் அமையும்.தமிழக முதல்வராக, அன்புமணி வர வாய்ப்பில்லை என்பது வெளிப்படையானதுடன், ஜாதி அரசியல், தமிழகத்தில் எடுபடும் காலம் இனி இல்லை என்பதன் அடையாளமாகவும் இதைக் கருதலாம் . தந்தை முடிவை ஏற்ற தனயனாக அன்புமணி நிற்கிறார். அதே சமயம் அக்கட்சிக்கு விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட சில மாவட்டங்களில், பூத் அளவில் கட்சிப் பணியாளர்கள் உள்ளனர். அதனால், 21 சட்டசபை இடைத் தேர்தலில், அ.தி.மு.க., அரசுக்கு பெரிதும் உதவும் என்று கருதி, ராஜ்யசபாவில் ஒரு இடம் தர, அ.தி.மு.க., முன்வந்தது நல்ல பேரமாகும்.காங்கிரஸ் தன், 10 சீட்களில் யாரை வேட்பாளராக்கப் போகிறது, அதற்கு தொகுதிகளில் பணியாற்ற அதிக தொண்டர்கள் உள்ளனரா அல்லது பல்வேறு கோஷ்டிகள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.,தொண்டர் பலத்துடன் களம் இறங்கப் போகிறதா என்பதை அறிவது எளிதல்ல. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க.,தலைவர் வைகோ ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள், கம்யூனிஸ்டு கட்சிக்கு கிடைக்கும் தொகுதி, இதில் மோதும் வேட்பாளர் பலம் ஆகியவை, அடுத்து வரும் நாட்களில், தேர்தலை பரபரப்பாக்கும். நடிகர் விஜயகாந்த் தனக்கு, இதுவரை மக்கள் அளித்த ஆதரவை வலுவாக்காத தலைவராக காட்சியளிக்கிறார்.இத்தேர்தலில், அ.தி.மு.க., தன் பலத்தை நிரூபிக்க எடுக்கப்படும் உத்திகள், நிச்சயம் வலுவாக அமையும் என்பதுடன், தி.மு.க., தன் லோக்சபா எண்ணிக்கையை, கணிசமாக அதிகரிக்காத பட்சத்தில், அதன் எதிரொலி, தேசிய அளவில் பேசப்படும். தமிழகத்தில் தனிநபர் விமர்சனம் குறைந்து, கட்சிகள் இலட்சியம் பரப்புரையாக அமையும் சூழ்நிலையை, இத்தேர்தல் கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X