'தங்கத்தை விட, தமிழக மக்கள் பெரிதாக நினைப்பது, தன்மானத்தை தான்' என்ற கூற்றை பொய்யாக்கி விட்டோம். ஆம்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு இனாமாக வழங்கிய, 1,000 ரூபாயை வாங்கி, ஒரு வார விடுமுறையுடன், வெகு ஜோராக கொண்டாடி, மகிழ்ந்து போயுள்ளோம்.
அந்த பணத்தை வாங்க, விடியற் காலையிலேயே, ரேஷன் கடையில், வரிசையில் காத்திருந்து, சிறு துண்டு கரும்பையும் விடாமல், பொங்கல் கொண்டாடி விட்டோம்.தமிழக அரசு வழங்கிய அந்த பொங்கல் பரிசு, 1,000 ரூபாயை, 'வரப்போகும் லோக்சபா தேர்தலில், ஆளும், அ.தி.மு.க., அரசுக்கு சாதகமாக ஓட்டு போட, கொடுக்கப்பட்ட பணம்' என்கின்றனர் சிலர். 'அப்படியில்லை; ஏழைகள், பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட கொடுக்கப்பட்டது' என்பது, அரசு தரப்பு வாதம்.ஏழை, எளிய மக்கள் அதிகம் வாழும் நம் மாநிலத்தில், 1,000 ரூபாயை, பொங்கல் பரிசாக, தமிழக அரசு தந்தது, ஏழைகளுக்கு மகிழ்ச்சியான விஷயமே. அத்தகையோர், அரசு தரும் இலவச சலுகைகளை அனுபவிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை.ஆனால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், ஏழைகள் அல்லவே!'அனைவரும் உழைத்துப் பிழைக்க வேண்டும்' என்ற எண்ணத்தை, அரசின் இது போன்ற இலவசங்கள் செல்லரித்து விடுகின்றன.
அரசு தரும் இலவசங்கள் யாவும், தேவைப்படுவோரை சென்றடைந்தால், அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பொங்கல் பரிசு என்ற பெயரில், தமிழக மக்கள் அனைவரும் வாங்கி, 'இன்புற' வேண்டும் என, மாநில அரசு துடித்ததை தான், ஏற்றுக் கொள்ள முடியவில்லை.மொத்தம், 95 சதவீதத்திற்கு மேலானவர்கள், பரிசை பெற்று சென்றுள்ளனர் என்கிறது, புள்ளிவிபரம். அப்படியானால், மீதமிருக்கும், 5 சதவீத மக்கள் மட்டும் தான் வசதியானவர்களா... அவர்களால் தான், சொந்த பணத்தில், பொங்கல் பண்டிகை கொண்டாட முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது.
'நம் வரிப்பணத்தில் தானே கொடுக்கின்றனர்... தானாக கிடைப்பதை எதற்கு வீணாக, வேண்டாம் என, சொல்ல வேண்டும்... இதில் என்ன தவறு...' என்பது பலரின் கருத்து.இன்னும் சிலர், 'அந்த பணத்தை வாங்கி, வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுத்து விட்டோம்' என்கின்றனர்.
வாங்கா விட்டால், வேறு யாருக்கோ தான் அது போய்ச் சேரும் என்பது, அவர்கள் கருத்து.இதே கருத்து எனக்கு இருந்தாலும், எங்களின் கார்டுக்கும், பரிசு உண்டு என்ற போதும், நாங்கள் வாங்கவில்லை. பரிசு வாங்கியோர் பட்டியலில், எங்கள் கார்டு எண் பதிவாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.அதை அறிந்த சிலர், 'நீங்கள் ஒருத்தர் வாங்காததால், எல்லாம் மாறி விடப் போகிறதா...' என்றனர். கண்டிப்பாக... நிச்சயம் மாறும். வசதி படைத்த ஒவ்வொருவரும், அந்த இலவசத்தை வேண்டாம் என்று தவிர்த்து இருந்தால், தமிழக மக்களின் தலை நிமிர்ந்திருக்கும்.
அந்தப் பணம், வேறு ஏதாவது ஒரு, நீண்ட கால, நலத்திட்டத்திற்கு அல்லது உள் கட்டமைப்பு திட்டத்திற்கு, செலவழிக்கப்பட்டிருக்கும் என்பது என் எண்ணம்! எல்லாருக்கும் தெரிந்த கதை ஒன்றை, இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்... ஒரு அரசன், தன் அரண்மனை முன், பெரிய தொட்டி கட்டி, அதில், துாசி, துரும்பு விழாதபடி மூடி, பால் ஊற்ற மட்டும் இடம் விட்டிருந்தான்.குடிமக்கள் அனைவரையும், அந்த தொட்டியில், ஒரு குவளை பால் விட சொன்னான். எல்லாரும் பால் விட, பாத்திரங்களுடன் வந்தனர். அவர்களுக்கு ஒர் எண்ணம் மேலிட்டது.'நாம் ஒருவர் மட்டும், பாலுக்குப் பதில், தண்ணீர் விட்டால், இவ்வளவு பாலில் அது, தனியாக தெரியவா போகிறது' என, நினைத்தனர்!
இப்படியே, ஒவ்வொருவராக நினைத்து, மூடியிருந்த தொட்டியில், பாலுக்குப் பதில் தண்ணீரை ஊற்றினர். கடைசியில், மன்னன் வந்து பார்த்தான். பாலே இல்லை; அவ்வளவும் தண்ணீராக இருந்தது.அது போல, நாம் ஒவ்வொருவரும் மாறினால், உலகம் மாறி விடவா போகிறது என எண்ணி, தொடர்ந்து, இது போன்ற சமூக அக்கறையற்ற செயல்களுக்கு இடம் கொடுத்து வருகிறோம். இந்த மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.தமிழக அரசு தான் இப்படி என்றால், பார்லிமென்டில், சமீபத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், இலவச அல்லது கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வித்தியாசமான கட்சி என, பெயர் எடுத்திருந்த, பா.ஜ.,வும், ஓட்டுகளை அள்ள, கவர்ச்சி அரசியலுக்கு வந்து விட்டதை, அது காட்டுகிறது.இதுவாவது பரவாயில்லை... சில நாட்களுக்கு முன், தமிழக சட்ட சபையில், பட்ஜெட் மீதான பதிலுரையில், நிதியமைச்சர், பன்னீர்செல்வம் ெவளியிட்ட அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் இனாமாக வழங்கப்படும்.
அதுவும், இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என்பது தான் அது! இந்த அறிவிப்பால், 60 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர் என, தமிழக அரசு கூறினாலும், உண்மையான பயனாளிகள் எத்தனை பேர் என்ற கேள்வியும் எழுகிறது.உழைத்து முன்னுக்கு வர வேண்டிய தொழிலாளர்களுக்கு, இப்படி, இலவச பணம் கொடுத்து, சோம்பேறிகளாக ஆக்குவதா, என்ற, சமூக ஆர்வலர்களின் குரல், எடுபடவே இல்லை.இந்த ஒரு முறை மட்டும், 2,000 ரூபாய் கொடுத்து விட்டதால், ஏழை தொழிலாளர்கள் ஏற்றம் பெற்று விடுவரா அல்லது இதனால், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கி விடுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இது போன்ற இலவச அறிவிப்புகளால், உண்மையான பயன், தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு தான் கிடைக்கிறது.
ஆம்... அரசு தரும் இலவச தொகையை பெறும் பெரும்பாலானோர், அதை, மது பானங்களுக்கே செலவிடுகின்றனர்.தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த, மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து, அமைதியான முறையில், சென்னை, மெரினாவில் போராட்டம் நடத்தி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழகம், இலவசங்களை ஏற்கலாமா?'அரசு கொடுப்பதால் வாங்குகிறோம்' என நாமும், 'நீங்கள் வாங்குவதால் கொடுக்கிறோம்' என, அரசும், மாறி மாறி சமாதானம் செய்து கொள்ளலாமே தவிர, அதில் எவ்வித நியாயமும் இல்லை.மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது...'ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதம், 2,500 பிராங்க்ஸ் அதாவது, 1.50 லட்ச ரூபாய்; குழந்தைகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் தந்தால், அதை ஏற்றுக் கொள்ள சம்மதமா; அது சரியாக வருமா...' என, கேள்வி கேட்கப்பட்டது.வேலை செய்தாலும், செய்யா விட்டாலும், மிகப்பெரிய தொகை கிடைத்து விடும். ஆனால், அந்நாட்டின், 77 சதவீத மக்கள், 'வேண்டாம்' என, ஓட்டளித்தனர்.தொழில்கள் முடங்கி, மக்கள் சோம்பேறியாகி விடுவர் என்பதுடன், நாட்டின் பொருளாதாரம், மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்பது, அந்த நாட்டு மக்களின் திடமான கருத்தாக இருக்கிறது. அதனால், அரசு இலவசமாக தர நினைத்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்தனர்.
அரசு தரும் இலவசங்களை, குறைந்தபட்சம் பாதிக்குப் பாதி பேராவது, மறுத்திருந்தால், இலவசத்துக்கு மயங்காதவர்கள், நம் மாநிலத்தில் நிறைய இருக்கின்றனர் என்ற உண்மை, அரசுக்கு புரிந்திருக்கும்.அரசிடம் இருந்து, 1,000 ரூபாய் வாங்கியதற்கு, இவ்வளவு அக்கப்போரா... என்று நினைக்கலாம். மொத்தமாகப் பாருங்கள்... பகீரென்று இருக்கும். பொங்கல் பரிசுக்காக செலவிடப்பட்ட தொகை, 1,972 கோடி ரூபாய். இதை, பாலம் கட்டுவது, தடுப்பணை அமைப்பது, போக்குவரத்து வசதி என, எத்தனையோ திட்டங்களுக்கு செல விட்டிருக்கலாம்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி என்ற நெசவாளர், அரசு வழங்கிய பொங்கல் பரிசை, மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்து விட்டார்.
தங்கள் மாவட்டத்தில், விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலாற்றில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பல அமைப்புகள் அரசிடம் மனு அளித்து உள்ளன.அதற்கு, நிதி இல்லை என்று கூறிய அரசு, பொங்கல் பரிசாக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து உள்ளது. இந்தத் தொகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டி இருக்கலாம். அதை செய்யாததால், பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பி ஒப்படைத்ததாக, ரவி தெரிவித்துள்ளார்; அவருக்குத் தலை வணங்குவோம்.இதுவரை வாங்கிய இலவசங்களுக்கு, பிராயசித்தமாக, இனிமேல் இலவசங்களை வாங்க மாட்டோம் என, உறுதிமொழி எடுப்போம்.
அது போல, தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த, சாதாரண ஏழை பெண்கள் மூவர், 'அரசின் இலவச நிதியுதவி வேண்டாம்' என, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இத்தகைய மனநிலை, அனைவருக்கும் வேண்டும்.'விரைவில் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், ஓட்டுக்காக பணமோ, வேறு எந்த பொருட்களையோ வாங்க மாட்டோம்' என, இப்போதே மனதை தயார் செய்வோம்; உறுதி கொள்வோம்.கடந்த ஆண்டு, கேரளாவில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, நிவாரண நிதியாக, 700 கோடி ரூபாயை தர, துபாய் அரசு முன்வந்தது. அதை நம் பிரதமர் மோடி மறுத்து விட்டார்.
நம் தேவைகளை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு உடையவர்கள், அடுத்தவரிடம் அனாவசியமாக ஏன் சலுகை பெற வேண்டும்? 'தன் பசி தீர்ந்ததும், மீதமுள்ள உணவு, அடுத்தவனுக்கு சொந்தம்' என்ற, கம்யூனிச சித்தாந்தத்தை சிந்தித்து பாருங்கள்.இதுவே, புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம் என, அரசு நம்மிடம் நிதியுதவி கோரும் போது, நாம் அனைவருமா வாரி வழங்குகிறோம்... 2 சதவீதம் பேர் கூட, வழங்கியிருக்க மாட்டோம்!அத்தகைய நேரத்தில், 'இருப்பவன் கொடுத்து விட்டுப் போகிறான்' என, தொட்டியில் பால் விட்ட கதையில் கூறியது போல, சும்மா தானே இருந்தோம்... அது போல, இலவசங்களை அரசு வழங்கும் போது, 'இல்லாதவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்' என, பெருந்தன்மையுடன் மக்கள் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து.
அவ்வாறு செய்தால், ஏழைகளுக்கு கூடுதலாக, அடுத்த முறை, உதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.மத்திய அரசு அறிவித்த உடன், 'காஸ் மானிய சலுகை வேண்டாம்' என்று, மறுத்தவர்கள் எத்தனை பேர்? 300, 400 ரூபாய் சலுகையை மறுக்க நமக்கு மனம் வரவில்லை. விட்டுக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை, அனுபவித்து, உணர்ந்து பார்த்தால் புரியும்.சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், ஏராளமான சலுகைகள், இலவசங்களுடன், தேர்தல் அறிக்கை ெவளியிடும். அதில், நியாயமானவற்றை மட்டும் ஏற்போம்;
அந்த கட்சிக்கு மட்டும் ஆதரவளிப்போம்.மக்களை ஏமாற்றும் வகையில், அனாவசிய இலவசங்களை அளிப்பதாக, வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் கட்சிகளுக்கு, தேர்தலின் போது, 'நோ' சொல்வோம்.எந்த ஒரு நல்ல சமூக மாற்றமும் மக்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.இ-மெயில்:ikshu1000@yahoo.co.in