பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க எப்படி ரிஸ்க் எடுத்தார் மோடி

Updated : மார் 02, 2019 | Added : மார் 01, 2019 | கருத்துகள் (210)
Advertisement

பயிற்சியில் வியர்வை சிந்தினால், போரில் ரத்தம் சிந்த தேவையிருக்காது. இது ராணுவத்தில் புழங்கும் பழமொழி. பிரதமர் மோடி இதை பொன்மொழியாக மனதில் பதிய வைத்திருக்கிறார்.2016 யூரி அட்டாக்கை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி அழிக்க ஆணையிட்டார் மோடி.







இப்போது புல்வாமா அட்டாக்கிற்கு பதிலடியாக பாகிஸ்தான் உள்ளே பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமை அழிக்க ஏவுகணை தாக்குதலுக்கு உத்தரவிட்டார் மோடி.இரண்டுமே சிலர் சொல்வது போல் ஆத்திரத்தில் எடுத்த அவசர முடிவுகள் அல்ல. இது போன்ற தாக்குதலை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விரிவான வழிமுறைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தன. ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் ப்ரொசீஜர் என்பார்கள் ராணுவ பரிபாஷையில். SOP என்பது அவர்கள் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை. ராணுவத்தின் அதிரடியான நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் இத்தகைய SOP உண்டு.





தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தரை வான் கடல் ஆகிய முப்படை பிரிவுகளின் தலைமை தளபதிகள், மூன்று உளவு பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விரிவாக விவாதித்து உருவாக்கிய வழிமுறைகள் இவை. 2014 ல் பிரதமர் பதவிக்கு வந்ததும் மோடி எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று இந்த ஏற்பாடு.

IB என்கிற இன்டெலிஜன்ஸ் பீரோ தெரியும், RAW என்கிற ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங் தெரியும், மூன்றாவது உளவு பிரிவு எது என்று பலருக்கு தெரியாது. NTRO என்று குறிப்பிடப்படும் நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன்தான் அது.

இவ்வாறு முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு செய்தது தாக்குதல் வழிமுறைகள் மட்டும் அல்ல; எந்த எந்த இடங்களை தாக்க வேண்டும் என்பதுகூட மோடி ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே அடையாளம் காணப்பட்டவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?





எல்லைக்கோட்டில் இருந்து 80 கிலோமீட்டருக்கு மேல் உள்ளே இருக்கிற பாலக்கோடை இந்தியா எப்படி தேர்ந்தெடுத்து தாக்கியது என்று பாகிஸ்தான் தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கலாம். மோடி ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து நாலரை ஆண்டுகளாக அந்த முகாம் நமது உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்த உண்மை நம்மிலேயே சிலருக்கு மட்டும்தானே தெரியும்.

போரை தேடி அலைபவர் அல்ல மோடி. நமது பிரதான எதிரிகளான பாகிஸ்தான் மீதும் சீனா மீதும் கடுமையான வெறுப்பு கொண்டவரும் அல்ல.பதவிக்கு வந்த நாலாவது மாதத்திலேயே தனது குஜராத் மாநிலத்தின் தலைநகரான ஆமதாபாத்துக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவழைத்து, அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் மோடி.





ஆனாலும், அதே நேரத்தில் கிழக்கு லடாக்கில் உள்ள சும்மாரில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி தன் புத்தியை வெளிப்படுத்தியது சீன ராணுவம்.அதற்காக மோடி பயந்து பின்வாங்கவில்லை. சிக்கிம் எல்லை அருகிலுள்ள டோக்லாமில் நமது நட்பு நாடான பூட்டானை கபளீகரம் செய்யும் வகையில் செம்படையை குவித்து சீனா மிரட்டிய நேரத்தில், நண்பனுக்கு பாதுகாப்பாக இந்திய ராணுவத்தை முன்னோக்கி நிற்க ஆணையிட்டார் மோடி.

நம்மைவிட பல மடங்கு ஆயுத பலம் பொருந்திய படையை ஏவி விட்டு, இந்திய ராணுவமே பின்னால் போய்விடு; இல்லையேல் எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்று சீனா உரக்க குரல் எழுப்பியபோதும் ஒன்றல்ல இரண்டல்ல, 73 நாட்கள் அதே இடத்தில் இருங்கள்; சீனா என்ன செய்கிறது என்பதை பார்த்து விடுவோம் என்று கூலாக கட்டளையிட்டார் மோடி.நரேந்திர மோடி வெறும் வாய் சவடால் பிரதமர் அல்ல; உலகின் ஆகப்பெரிய வல்லரசின் மிரட்டலுக்கும் அசைந்து கொடுக்காத இரும்பு மனிதன் என்று அப்போதுதான் புரிந்துகொண்டது சீனா. அதன் விளைவாகத்தான் சீனாவின் வுஹானில் இந்திய பிரதமரை வரவேற்று உபசரித்ததோடு, இனிமேல் இப்படி பலப்பரீட்சை எல்லாம் நமக்குள் வேண்டாம் என்று ஒரு உடன்பாட்டுக்கும் வந்தார் சீன அதிபர்.

டோக்லாமில் சீனப்படையை இந்திய ராணுவம் எதிர்த்து நின்ற காட்சியை உலகம் திகைப்புடன் பார்த்தது. சீனாவுடன் நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் துணிச்சல் இந்தியாவுக்கு இருக்கிறதா என்று வாயைப் பிளந்தன பல நாடுகள். அது வெறும் அசட்டு துணிச்சல் அல்ல; அந்த துணிச்சலுக்கு பின்னால் நீண்டகால திட்டமிடலின் உறுதி இருந்தது என்பது இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆம். டோக்லாமில் போர் வெடித்தால் அது கிழக்கில் இருந்து வடக்காக மேற்கு வரை பரவினால் இந்தியா என்ன செய்ய வேண்டும்; எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு வடிவமைத்து கொடுத்திருந்தார் மோடி. வெறும் ராஜீய நகர்த்தல்களால் மட்டும் சுமுக முடிவுக்கு வரவில்லை, டோக்லாம் நேருக்கு நேர். இந்திய ராணுவத்தின் தயார் நிலையையும் இந்திய அரசியல் தலைமையின் நெஞ்சுறுதியையும் செஞ்சீனா துல்லியமாக புரிந்து கொண்டதன் எதிரொலிதான் டோக்லாம் பிரச்னையை தீர்வு நோக்கி தள்ளியது.

இன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு சீராக இருக்கிறது என்றால் பரஸ்பரம் பலம் என்ன, நோக்கம் என்ன, வழிகள் என்ன என்பதை இரு நாட்டு தலைவர்களும் உணர்ந்திருப்பதுவே காரணம். அதனால்தான் பாகிஸ்தானுக்கு நாம் பாடம் புகட்ட களம் இறங்கிய வேலையில், சீனா நமது எல்லைக்கோட்டில் எந்த சித்து விளையாட்டிலும் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்தது.

சீனா மட்டுமல்ல; பாகிஸ்தானுடனும் நல்லபடியாகத்தான் நட்பை தொடங்கினார் மோடி. அவரது பதவியேற்புக்கு பிரதமர் நவாஸ் ஷெரீபை டில்லிக்கு அழைத்து கவுரவித்தார். அடுத்த ஆண்டில் ராவல்பிண்டியில் நடந்த ஷெரீப் உறவினர் கல்யாணத்தில் திடீர் விருந்தாளியாக சென்று வாழ்த்தினார் மோடி.ஆனால், குஜராத்தில் சீன அதிபரை மோடி வரவேற்ற தினத்தில் சீன ராணுவம் நமது படை மீது தாக்குதல் நடத்தியதை போலவே, மோடி அந்த திருமணத்தில் கலந்து கொண்ட அதே தினம்தான் ஜெய்ஷ் அமைப்பு நமது பதன்கோட் விமான தளத்தை தாக்க முடிவு எடுத்தது. பதன்கோட்டில் வெடிகுண்டு தாக்குதலுக்கு அது பயன்படுத்திய வாகனத்தில் கிடைத்த குறிப்புகள் மூலமாக இந்த உண்மை அம்பலத்துக்கு வந்தது.

ஜெய்ஷ் அட்டாக் ஒன்று நடக்கப் போவதாக நமது உளவுப்படைக்கு தகவல் கிடைத்தது. எந்த இடம் என்பது மட்டும் தெரியாது. அந்த தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு முன் தினம்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரை தொடர்பு கொண்டு, ஜெய்ஷ் திட்டத்தை தடுக்க சொன்னார். ஆனால் தாக்குதல் நடந்தே விட்டது. பாகிஸ்தான் ராணுவம் உரிய முறையில் ஜெய்ஷ் தலைவன் அசாரை நிர்ப்பந்திக்கவில்லை என்பது புலப்பட்டது.

உடனடியாக பதிலடி தர நமது ராணுவம் ரெடியாக இருந்தது. ஆனால், பிரதமர் ஷெரீபுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்பினார் மோடி. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பாகிஸ்தான் அரசுக்கு வழங்கியதோடு நில்லாமல், உலகமே ஆச்சரியப்படும் விதமாக நமது புலனாய்வில் பாகிஸ்தான் அதிகாரிகளும் கலந்துகொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்தார் மோடி.இப்படி எல்லாம் விட்டுக் கொடுத்தும் சலுகை அளித்தும் பாகிஸ்தான் ராணுவம் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் பிறகுதான் மோடியும் பாதையை மாற்றினார். யூரி அட்டாக்குக்கு பதிலடி கொடுக்க மோடி ஆணையிட்டபோது, அதை தடுக்க பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் அணுகுண்டு வீசும். அதனால் பேரழிவு ஏற்படும் என அவர்கள் எடுத்து சொன்னார்கள்.

மோடி அந்த ஆலோசனைகளை காதில் வாங்கவே இல்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டு; அதையும் தாண்டிய பிறகு பொறுமை காப்பது புத்திசாலித்தனம் அல்ல என்றார் அவர். யூரி அட்டாக் நடந்த 11வது நாளில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பச்சைக்கொடி காட்டினார் மோடி. இப்போது புல்வாமா அட்டாக் நடந்த 12 ஆவது நாளில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க உத்தரவு பிறப்பித்தார் மோடி.

இரண்டிலுமே அப்பாவிகள் உயிர் பலி கிடையாது. இலக்குகள் மட்டும் துல்லியமாக அழிக்கப்பட்டன. நமது படைகளுக்கும் சேதம் கிடையாது.இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை அமெரிக்காவுக்கும் ஏனைய செல்வாக்கான நாடுகளுக்கும் மோடி குறிப்பாக தெரியப்படுத்தி இருந்தார்.

பார்லிமென்ட் அட்டாக்கிற்கு பதிலடி கொடுக்க அன்றைய பிரதமர் வாஜ்பாய் நமது படைகளை எல்லையில் குவிக்க ஆணையிட்டார். ஆனால் என்ன செய்ய போகிறோம் என்பதை வல்லரசுகளுக்கு அவர் சொல்லாமல் விட்டதால் அன்று இந்தியாவின் முயற்சிக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் வாஜ்பாயின் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போயிற்று. அந்த தவறு இப்போது நடக்காமல் பார்த்துக் கொண்டார் மோடி.

எல்லாம் சரி, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கோ பாலக்கோட் அட்டாக்கோ திட்டமிட்டபடி முடியாமல் சொதப்பி இருந்தால்..? நிச்சயமாக மோடி கடுமையான அம்புகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.ஆனால், ரிஸ்க் எடுப்பது மோடிக்கு புதிதல்ல. தலைவனாக இருப்பவனுக்கு அத்தியாவசியமான குணங்களில் ஒன்று, தேவையான நேரத்தில் ரிஸ்க் எடுக்க தயங்கக்கூடாது என்பது.மோடிக்கு அது நன்றாக தெரிந்திருக்கிறது.


இந்தியாவின் மிரட்டலான நடவடிக்கைகள்



* பாக்., எல்லைக்குள் பாராசூட் மூலம் அபிநந்தன் குதித்ததுமே நமது ராணுவமும் விமானப்படையும் சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டன.

* இந்திய ராணுவ முகாம்களை தாக்குவதற்கு எப் -16 ரக விமானங்களை பாக்., பயன்படுத்தியது என்பது அம்பலப்படுத்தப்பட்டது. ஏனெனில், பிப்.26ம் தேதி பாக்.,கில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தான் இந்தியா தாக்குதல் நடத்தியது.

* பாக்., துறைமுக நகரமான கராச்சியை இந்திய கடற்படை சுற்றி வளைத்தது; அந்நாட்டின் முக்கிய நிலைகள் மீது ஏவுகணைகளை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்தன; எல்லையில் நமது படைகள் குவிக்கப்பட்டன. இதைப் பார்த்து பாக்., மிரண்டுபோய், இப்பிரச்னையில் தலையிடுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனாவிடம் கெஞ்சியது.

*இந்தியாவின் போர் ஏற்பாடுகளைப் பார்த்து அதிர்ந்த முக்கிய நாடுகள், இந்தியாவுடன் பேசத் துவங்கின.

*போரை இந்தியா விரும்பவில்லை. பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்தது. ஆனால் பதிலுக்கு பாக்., இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது என்பதை அந்நாடுகளுக்கு இந்தியா தெளிவுபடுத்தியது.

* எல்லைக் கட்டுப்பாடு கோட்டைக் கடந்து 20 பாக்., போர் விமானங்கள் தான் நுழைந்தன என்பதும் அந்த நாடுகளுக்கு சொல்லப்பட்டது.

* ‛‛உண்மை நிலவரத்தை இம்ரான்கானுக்கு பாக்., ராணுவம் தெரிவிக்கவில்லை. இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்று வெளிநாடுகளுக்கு இந்தியாவால் சொல்லப்பட்டது.

* வெளிநாட்டு துாதர்களிடம் மேலும் சில விஷயங்களை இந்தியா தெளிவுபடுத்தியது. ‛‛பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்குவது தான் எங்கள் குறிக்கோள். அதை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். அபிநந்தனை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது பாக்.,கின் பொறுப்பு. 1949 ஜெனிவா ஒப்பந்தப்படி, மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டு, மீண்டும் எங்களிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று திடமாக கூறிவிட்டது இந்தியா.

* ‛‛இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அபிநந்தனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலோ திரும்ப ஒப்படைக்கப் படாவிட்டாலோ அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்'' என்றும் எச்சரித்தது இந்தியா. இந்தக் கருத்தை சவுதி அரேபியாவும் எமிரேட்சும் ஏற்றுக்கொண்டன.

* இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டைப் பார்த்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு பாக்.,கை வற்புறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

* இந்நாடுகள் சொல்வதைக் கேட்காவிட்டால், ‛ரவுடி நாடு' என்ற கெட்ட பெயர் பாக்.,கிற்கு ஏற்படும். இதனால், வெளிநாடுகளிடம் இருந்து நிதி உதவி, கடன்கள் கிடைக்காமல் போய்விடும்.

* இவ்வளவுக்கும் பிறகு தான், அபிநந்தனை விடுதலை செய்கிறோம் என அறிவிக்குமாறு இம்ரான்கானை அந்நாட்டு ராணுவம் கேட்டுக்கொண்டது. பிப்.28 ம் தேதி மாலையே ‛‛நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். நாங்களாக எதுவும் செய்ய மாட்டோம். வம்பு செய்தால் சும்மா விட மாட்டோம்'' என்ற தகவல் நமது ராணுவம், கடற்படை, விமானப்படை மூலம் பாக்.,கிற்கு தரப்பட்டது. ‛‛போர் ஏற்படாது'' என்று தெரிந்த பிறகு தான் பாக்.,கும், உலக நாடுகளும் நிம்மதி பெருமூச்சு விட்டன.

* அதே நேரம், அபிநந்தனை விடுவித்தால் மட்டும் போதாது; பயங்கரவாதிகள் மீது ஆணித்தரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் இந்தியா திடமாக எடுத்துரைத்தது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பற்றிய ஆவணங்களையும் பாக்.,கிடம் இந்தியா ஒப்படைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (210)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
05-மார்-201915:29:26 IST Report Abuse
ganapati sb இஸ்ரேல் அமெரிக்க விற்கு பின் தீவிரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்த நாடு பாரதமே
Rate this:
Share this comment
Cancel
venkates - ngr,இந்தியா
04-மார்-201921:39:32 IST Report Abuse
venkates எதிர்ப்பிலேயே வளர்ந்தவர், பண்பாளர்,அஞ்சாதவர் , மக்களுக்கு நன்மை செய்பவர்,,
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
04-மார்-201915:56:13 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் இதுக்கு முன்ன காண்+கிராஸ் ஆட்சியில ஒரு வீரர் பாக்கிகளிடம் பிடிபட்டார் அவரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை அப்போதைய கையாலாகாத காண்+கிராஸ் அரசு..... இதில் இருந்தே தெரியவில்லையா மோடியின் தந்திரம்...?? ஆகையால் தான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் மோடி வேண்டும் என்கிறோம்..... கையாலாகாத காண்+கிராஸ் ஆட்சியை எந்த இந்தியனும் விரும்பமாட்டான்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X