திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே, சமீபத்தில், கிராமங்களில் உள்ள விளைநிலங்களில், காட்டு யானை ஒன்று புகுந்தது. கடும் பசியுடன் காட்டிலிருந்து இறங்கிய அந்த யானை, மனிதர்களை எதுவும் செய்யவில்லை; இஷ்டத்திற்கு பயிர்களை தின்று, பசியாறிக் கொண்டிருந்தது.
அடிக்கடி அமைதியாக வந்து சென்றதால், அந்த யானைக்கு, 'சின்னத்தம்பி' என, அந்த பகுதி மக்கள் பெயரும் வைத்து, மாட்டை விரட்டுவது போல, அவ்வப்போது காட்டுக்குள் விரட்டி வந்தனர்.இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றதால், நீதிமன்ற உத்தரவு படி, சின்னத்தம்பியை அப்புறப்படுத்தும் பணிகளை, வனத்துறையினர் மேற்கொண்டனர்.
'கும்கி' எனப்படும், பயிற்சி பெற்ற யானைகள் வரவழைக்கப்பட்டன.அவற்றின் உதவியுடன், சின்னத்தம்பியை, காட்டுக்குள் அனுப்ப முயற்சி மேற்கொண்டனர்; ஆனாலும், உடனடியாக முடியவில்லை.
அப்படியே விட்டால், பசு மாடு போல, வீடுகளுக்குள் சென்று படுத்து விடும் என, அஞ்சிய வனத்துறையினர், அந்த யானையின் அருகே சென்று, அதன் கழுத்தில் கயிறுகளை மாட்டி, இழுத்து வந்து, லாரியில் ஏற்ற முயன்றனர்.அப்போதும் அது, வயல் வெளியை விட்டு வெளியே வர மறுத்து, சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தது. அந்த அளவுக்கு, பல நாட்களுக்கு அந்த யானை, காட்டில் பட்டினி கிடந்திருக்கும் போல!வேறு வழியில்லாமல், மயக்க மருந்து ஊசியை செலுத்தி, லேசான மயக்கத்தில், அந்த யானையை லாரியில் ஏற்றி, 100 கி.மீ.,க்கு அப்பால், அடர்ந்த வனத்தில் விட்டு வந்தனர்.
அப்போது, பத்திரிகைகளில் வெளியான, சின்னத்தம்பி செய்திகளை படித்த பிற பகுதி மக்கள், 'வனத்தை அழித்து விவசாயம் செய்கின்றனர்... யானைகள் வழித்தடத்தில் விவசாயம் செய்வதால் தான், யானைகள் ஊருக்குள் வந்து, பயிர்களை நாசம் செய்கின்றன' என, பேசிக் கொண்டனர்.
ஆனால், வனத்தில் யானைகளுக்கு போதிய உணவு, தண்ணீர் இல்லை. அதனால் தான் அவை, கூட்டம் கூட்டமாக, கிராமங்களுக்குள் புகுந்தது, என்பதை பொதுமக்கள் உணர்வதில்லை. வெளியே இருந்து பார்க்க, பச்சை பசேலென இருக்கும் வனத்தில், விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் இல்லை. இப்போது தான் என்றில்லாமல், பல ஆண்டுகளாகவே இந்நிலை காணப்படுகிறது.
ஒரு சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்பவே, கடும் சிரமப்பட்ட நிலையில், காடுகளில் உள்ள, பல ஆயிரம் சின்னத்தம்பிகளும், பெரிய தம்பிகளும் வெளியேறினால், நம் நிலை என்னவாகும்... யோசித்துப் பாருங்கள்!வன வளத்தை காக்கவும், வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், இயற்கை சூழலை பராமரிக்கவும், கோடி கோடியாக செலவழிக்கப்பட்ட பணத்திற்கு, பலனில்லையா... அந்த பணம், வீணாகத் தான் இதுவரை செலவழிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
கிராமம் மற்றும் நகரங்களில் இருக்கும் மக்கள், வனங்களுக்குள் புகுந்து, ஒரு சிறு கம்பை கூட வெட்ட முடியாது; வெட்டுவதில்லை. வனங்களுக்குள் வசிக்கும் மக்களும், தங்கள் இயற்கைச் சூழலை, எந்த சூழ்நிலையிலும் மாற்ற முயல்வதில்லை; இயல்பாக கிடைக்கும் வனப்பொருட்களை வைத்தே அவர்களின் வாழ்க்கை முறை உள்ளது.அப்படியானால் கோளாறு எங்கே இருக்கிறது... வனத்துறை மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகளை தான் குற்றம் சாட்டுவர்.
விவசாயிகளிடம் கேட்டால், வன விலங்குகளை குற்றம் சொல்ல மாட்டார்கள். 'இயற்கை வளம் உள்ள இடங்களில் தானே, விவசாயம் செய்ய முடியும்...' என, எதிர் கேள்வி கேட்பர்.இந்த பிரச்னைக்கு தீர்வாக, வனத்துறை கூறும் அறிவுரை, வேடிக்கையாக உள்ளது. 'வன எல்லையை ஒட்டிய பகுதிகளில், யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை, விவசாயிகள் பயிரிட வேண்டாம்' என்கிறது.நீர் மற்றும் மண் வளம் இருக்கும் இடத்தில் தானே, விவசாயம் செய்ய முடியும்.'கரும்பு, நெல், சோளம், கடலை, கம்பு, தென்னை, கிழங்கு வகைகள், வாழை மற்றும் காய்கறிகளை பயிரிடாதே' என்று வனத்துறை சொன்னால், எதை தான் பயிரிடுவது?
சிங்கவால் குரங்குகள் என்ற, அரிய வகை குரங்குகள், வனத்தில் உள்ள பழ வகைகளை உண்டு, பல இடங்களுக்கும் சென்று, எச்சங்களை இடும். அதிலுள்ள விதைகள், வனத்தில் பல இடங்களில், ஆங்காங்கே முளைத்து வளரும். அதனால், இந்த வகை சிங்கவால் குரங்குகள், 'விதை விதைப்பான்கள்' என, வன ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகின்றன.ஆனால், சிங்கவால் குரங்குகளுக்கு, வனத்தில் தேவையான உணவு கிடைக்காததால், ஊருக்குள் கூட்டம் கூட்டமாக வந்து, குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளை சாப்பிடுகின்றன.
இதனால், அந்த அரிய வகை விலங்கினத்திற்கு ஆபத்து மட்டுமில்லை; வனச் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.சமீப காலமாக, சிறுத்தை புலிகள், ஊர்களுக்குள் ஊடுருவி, உணவிற்காக அலைந்து, திரிவதை பார்க்கிறோம். ஏன் இந்த அவல நிலை... வனத்திற்குள், சிறுத்தைப் புலிகளுக்கான உணவுகளான மான், கேளையாடு, முயல்கள் போன்ற சின்ன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே காரணம்!
வனத்தில் இவற்றிற்கான உணவு, புல் மற்றும் இதர தாவர வகைகள் அழிந்து விட்டதால், மான், கேளையாடு, முயல்கள் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.இதற்கான காரணம், வனத்தில் அதிகரித்துள்ள களைகளே. குறிப்பாக, அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட, உண்ணிச்செடிகள் மற்றும் ஆமை இலை செடிகள் போன்ற களைகள், எப்படியோ ஊடுருவி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மிக வேகமாக வளர்ந்து, வனத்தை ஆக்கிரமித்துள்ளன.
பார்க்க பசுமையாக இருக்கும் இந்த செடிகள், புதர்களாக வளரும் தன்மை கொண்டவை; சிறு விலங்குள் அவற்றை உண்ணாது; அவை வளரும் இடத்தில் சூரிய ஒளியே படாது. அதனால், யானைகள், மான்கள், முயல்கள் மற்றும் காட்டு எருமைகளுக்கு, புல் பூண்டு கூட அந்த இடத்தில் முளைக்காது.இந்த செடிகளை, வனத்துறையினர் அகற்ற முன் வருவதே இல்லை. அதனால், வனத்திற்குள், விலங்குகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
இதன் பாதிப்பு, உணவு உயிர் சுழற்சியில் ஏற்பட்டு, கொடிய விலங்குகள் கூட, உணவுக்காக கீழே வருகின்றன.புலிகள் காப்பகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம், வன விலங்குகள் நகரும் இடம் என, வித விதமாக பெயரிட்டு, வனங்களை பொதுமக்கள் அணுக முடியாமல் செய்வதால் தான் இந்த குழப்பம்!நகர் புறங்களில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் முறைகேடுகள், பொதுமக்களால் அம்பலப்படுத்தப்படுவது போல, வனத்திற்குள் நடக்கும் முறைகேடுகள், பொதுமக்களுக்கு தெரிவதில்லை.வனம் என்றாலே பொதுமக்களுக்கு பயம்.
யாரும் அணுக முடியாத பகுதியாக வனங்கள் மாறியதால், குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளா, வன வளத்தை பேணுவதில் பாராட்டும் படி உள்ளது. காரணம், அந்த முயற்சியில், பொது மக்களின் ஈடுபாடு உள்ளது. ஆனால் இங்கு, வனம் என்றாலே, வன அதிகாரிகளுக்கு மட்டும் தான்; பொதுமக்களுக்கு அதில் பங்கில்லை என்ற நிலை காணப் படுகிறது.
வனத்தில் இரை கிடைக்காத விலங்குகள், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. விவசாய விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காத நிலையில், விலங்குகளாலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.இந்நிலை நீடித்தால், வனத்தை ஒட்டிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். விளைச்சல் பாதிக்கப்பட்டு, எதிர் காலத்தில், போதிய உணவு உற்பத்தி இல்லாத நிலை ஏற்படும்.
பொதுவாக, வனத்துறை, வன ஆர்வலர்கள், ஊடகங்கள், ஏன் நீதிமன்றங்கள் கூட, இந்த விவகாரத்தில் தவறான புரிதலை கொண்டுள்ளன. அதாவது, 'வன விலங்குகள் வாழ்விடத்தில், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்' என்ற எண்ணம் தான் பரவலாக உள்ளது.அது தவறு! வனம் அப்படியே தான் உள்ளது. அதன் உள்ளே உள்ள கோளாறுகளை சரி செய்ய வேண்டும். வன மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி, சரியாக செலவழிக்கப்பட்டுள்ளதா என, பொதுமக்கள் ஆராய வேண்டும். அதற்கு வசதியாக, வனச் சட்டங்களை திருத்த வேண்டும்.
வனத்தின் செழிப்பான மண்ணில், தாவரங்கள் முளைக்காத வகையில், பெருகி வரும் களைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஊர் பகுதிகளில், வீணான, கருவேலம் முள் செடிகள் வளர்வது போல, வனத்தில் பெருகும் களைகளை அகற்ற வேண்டும்.வீணாக விழும் அருவிகளை திருத்தி, வனத்திற்குள் நீர் பாயும் முறையில் அமைக்க வேண்டும். இந்த பணியில், அந்தந்த பகுதி விவசாயிகள் மற்றும் வனத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை ஈடுபடுத்தலாம்.
வனம் என்பது, யாரும் அணுக முடியாத பகுதி என்ற நிலையை மாற்ற வேண்டும். பொழுதுபோக்கவும், இயற்கை மற்றும் வன விலங்குகள் குறித்த அறிவை பெறவும், வனத்திற்குள் மக்கள் சென்று வர, பாதுகாப்பான சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.'யானை போன்ற, வன விலங்குகள் விரும்பும் பயிர்களை, வனங்களுக்கு அருகே பயிரிடக் கூடாது' என, அரசு கட்டுப்பாடு போடுகிறது. அதற்குப் பதில், வனத்தில், காலியாக இருக்கும் இடங்களில், வன விலங்குகளுக்கு தீனியாக, அவை விரும்பும் பயிர்களை விளைவிக்கலாம்.இது போன்ற நடவடிக்கைகளை, அறிவியல்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், வனத்தை ஒட்டிய கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களுக்கும், உணவுக்காக விலங்குகள் வந்து விடும் அபாய நிலை ஏற்படும்.
சில நாட்களுக்கு முன், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு அருகே உள்ள, தானே நகரில், பிரபல வணிக வளாகம் ஒன்றில், 6 வயது சிறுத்தைப்புலி நுழைந்ததே இதற்கு சாட்சி!வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளதால், பெரிய வன விலங்குகள் பல்கிப் பெருகியுள்ளன. ஆனால், அவற்றிற்கு போதுமான உணவு, வனத்தில் கிடைக்கவில்லை; கீழிறங்கி வருகின்றன; விவசாயி பாதிக்கப்படுகிறான்.வனத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால், சீனப் பெருஞ்சுவர் போல, மலையடி வாரத்தில் உயரமாக கட்டினாலும், யானைகளும், பிற விலங்குகளும் அவற்றை தகர்த்து விடும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள், இனி, விவசாயிகளை குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து, வனத்தில் உணவு ஆதாரங்களை பெருக்க வேண்டும்; வன வளத்தை பாதுகாக்க வேண்டும்.அவ்வாறு செய்தால், சின்னத்தம்பிகள், ஊருக்குள் வர மாட்டார்கள்; வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மோதல் ஏற்படாது. செய்வோமா!
தொடர்புக்கு, கைபேசி எண்: 94434 06641
இ -மெயில்: uthamvlp@gmail.com
வெ.உத்தமராஜ்
இயற்கை மற்றும் வன நலம் விரும்பி