எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போதாது!
அஞ்சலி மட்டும் போதாது!

கடந்த, 14ல், 'பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய, புல்வாமா தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உடல் சிதறி பலி' எனும் கொடூர செய்தி கிடைத்தது. உடனே, சென்னை அருகே உள்ள, ஆவடி பயிற்சி மையமெங்கும், 'இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தர வேண்டும்; உடனடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்' என்ற குரல் ஒலித்தது.

 அஞ்சலி மட்டும் போதாது!


நடந்து முடிந்த கொடூரத்தில் துாத்துக்குடி சுப்பிரமணியன் ஒரு வேளை தப்பி பிழைத்திருந்தால், அவரும் இதையே தான் சொல்லி இருப்பார். காரணம், பழி தீர்க்கும் வரை, காயத்தின் வலியை, தனக்குள்ளே உயிர்ப்புடன் வைத்திருக்கும் வீரனுக்குரிய குணம், அவரிடத்தில் நிரம்ப உண்டு.அதற்கொரு உதாரணம் இந்த சம்பவம்... சுப்பிரமணியனுக்கு இரண்டு சகோதரியர். விடுமுறையில் ஊருக்கு வந்து திரும்பும் போதெல்லாம், சென்னையில் இருக்கும் மூத்த அக்கா வீட்டிற்கு வருவது அவரது வழக்கம். அப்படி ஒருமுறை வந்த போது, எந்நேரமும் தொப்பி அணிந்தபடியே இருந்திருக்கிறார்.
அக்கா காரணம் கேட்க, 'முகாமில், மரப்பெட்டியை இடம் மாற்றும் போது தலையில் காயம் பட்டு விட்டது; அதற்காக போடப்பட்ட தையலை மறைப்பதற்காகவே தொப்பி அணிந்திருக்கிறேன்' என, கூறி சமாளித்திருக்கிறார்.அதை நம்பாத அக்கா, விடாப்பிடியாக கேட்க, 'காஷ்மீரில் பிரிவினைவாதிகள் கலவரம் செய்ததை அடக்க சென்ற போது, அவர்களின் கல் வீச்சில் காயம் ஏற்பட்டது' என சொல்லி, முகம் இறுகி இருக்கிறார்; கண்களில் கோபம் கொப்பளித்திருக்கிறது.

சென்னை, ஆவடி பயிற்சி மையத்தில், உடலையும் மனதையும் உரமேற்றிக் கொண்டு உஷ்ணமாகும் இத்தகைய, 'சுப்பிரமணியன்கள்' ஏராளம்.அந்தந்த நாளின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து, காலை, 5:30 அல்லது, 6:00 மணிக்கெல்லாம் அன்றாட பயிற்சிகள் துவங்கி விடும். இதற்காக, அதிகாலை, 3:30 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகும் வீரர்களுக்கு, காலை, 8:00 மணி வரை ஓட்டமும், உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

காலை உணவிற்குப் பின் ஆயுத பயிற்சியும், 'புட் டிரில்' பயிற்சியும் துவங்கும். படுத்த நிலையில், பல விதமான துப்பாக்கிகளை இயக்குவது, பக்கவாட்டிலிருந்து தாக்குதல் தொடுப்பது, மைதானத்தை பலமுறை சுற்றி வந்து, இடைவெளியின்றி துப்பாக்கிகளை கையாள்வது உள்ளிட்ட கடுமையான பயிற்சிகள் நாள் முழுக்க உண்டு.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்...

*மொத்தம், 20 கிலோ மண் அல்லது, அதற்கு இணையான எடை கொண்ட பொருட்களை சுமந்தபடி, 10 முதல் 40 கி.மீ.,க்கு நடக்கவும், ஓடவும் செய்ய வேண்டும்
* 10 அடி உயர சுவரில் கயிற்றின் உதவியுடன் ஏறி மறுபுறம் குதிப்பது, பெரிய வலை போர்த்தப்பட்ட, 20 அடி உயர கம்பத்தில் வளையங்களைப் பிடித்தபடி மேலேறி மறுபக்கம் இறங்க வேண்டும்
* முள் கம்பிகளால் சூழப்பட்ட கூரைக்கும் தரைக்குமான இடைவெளி, 2 அடி உயரம் மட்டுமே இருக்க, தரை முழுக்க பரவிக் கிடக்கும் சேற்றில் முழங்கை, உடல், கால் மூட்டுகளை உபயோகித்து, தவழ்ந்தபடி, குறிப்பிட்ட வினாடிகளில் மறுமுனையை அடைய வேண்டும்
* 9 அடி அகல கால்வாயை தாண்ட வேண்டும்
* கைகளை மட்டும் உபயோகித்து, 20 அடி உயரம் கொண்ட கயிற்றில் ஏற வேண்டும். கால்களை பின்னிக் கொண்டு, கயிற்றில் தொங்கியபடியே, ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல வேண்டும். இதோடு, துப்பாக்கிகளை சுமந்து கொண்டு, கயிறு ஏறும் பயிற்சியும் உண்டு.
வனவாசம்
கடுமையான, 44 வார பயிற்சியின் கடைசி நான்கு வாரங்களில், காடு மற்றும் மலைகளில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் கடுமையான பயிற்சிக்கு வீரர்கள் தயாராக வேண்டும். நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டமுள்ள பகுதிகள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை கையாளும் திறன், இப்பயிற்சிகளின் மூலம் கூர்தீட்டப்படுகிறது. இதற்காக, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஜவ்வாது மலைத்தொடர் பகுதி பயிற்சி களமாகிறது.
இப்பயிற்சியின் ஓர் அங்கமாக, கடைசி ஆறு நாட்களுக்கு, ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக காடுகளில் கூடாரம் அமைத்து தங்க வேண்டும். ரொட்டி, வாழைப் பழம், கொண்டை கடலை, நிலக்கடலை, அவல், பொரி, வெல்லம், மிக்சர், பிஸ்கட், சாக்லேட், அரிசி, பருப்பு இவற்றோடு மட்டும், பசியாறிக் கொள்ள வேண்டும். அடுப்பு மூட்டி சமைத்துக் கொள்வதென்பது அவரவர் திறன் மற்றும் சூழல் சம்பந்தப்பட்டது.
எல்.எம்.ஜி., - எஸ்.எல்.ஆர்., உள்ளிட்ட இலகு ரக துப்பாக்கிகளை கையாளும் பயிற்சிகள் முகாமிலேயே முடிந்து விட, இந்த கடைசி நான்கு வார பயிற்சியில், வெடிகுண்டுகளை கையாளும் திறனை வீரர்கள் பெறுகின்றனர்.உடல்திறன் மேம்படுத்தும் இப்பயிற்சிகளோடு, சி.ஆர்.பி.எப்., நடைமுறை விதிகள், சட்ட நுணுக்கங்கள் உள்ளிட்டவை வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகின்றன. எத்தகைய தருணத்திலும் சிதறாத மன உறுதி பெற, யோகா மற்றும் உளவியல் வகுப்புகளும் இப்பயிற்சியில் அடக்கம்.

வீரனின் கனவு
களத்தில் இருக்கும், ஒரு, சி.ஆர்.பி.எப்., வீரர், குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் வீரர், குளிர் காக்கும், 5 கிலோ எடை கொண்ட பூட்ஸ், ஆயுதம், சீருடை உள்ள உள்ளிட்டவற்றோடு எந்நேரமும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 25 கிலோ எடையை சுமந்த படியே தான், அவரது அன்றாடம் கழியும். இரவு முழுக்க, கடும் உடற்பயிற்சி செய்து, இமை கொட்டாமல் விழித்திருக்கும் சூழல், இவர்களின் வாழ்வில் தவிர்க்கவே முடியாதது. தசை நார்கள் கிழிய இப்படிப்பட்ட கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வீரர்கள் தயாராவது, எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்கத்தானே அன்றி, அவர்களிடம் சிக்கி, சிதைந்து போக அல்ல!

அரியலுார் சிவசந்திரனுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருந்த காரணத்தினாலேயே, தன் படிப்பை பாதியில் நிறுத்தி, நாட்டின் எல்லைக்கு விரைந்திருக்கிறார்.இன்று, அவரது தந்தை சின்னையனின் துக்கத்தில், அன்றைய நாளின் நினைவுகள் கண்ணீராய் வழிகின்றன.'அவன் சென்னையில எம்.ஏ., படிச்சுட்டு இருந்த நேரத்துல, அவன் முதுகு முழுக பழுத்துப் போய் கிடக்கும்யா!' - மகனின் நினைவுகளில் முகம் பொத்தி அழுகிறார் சின்னையன்.

'முதுகு பழுத்துப் போற அளவுக்கு என்னய்யா ஆச்சு?' என்றோம். மகனின் முதுகு பழுத்த நிகழ்வைச் சொல்லும் முன், நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்துக் கொண்டார் சின்னையன்.'சிவசந்திரனுக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம். பிளஸ் 2 வரை உள்ளூர்ல படிச்சுட்டு, திருச்சி அரசு கலை கல்லுாரியில, பி.ஏ., வரலாறு படிக்கப் போனான்.'குடும்ப பொருளாதார சூழலால, 'பெல்' கம்பெனியில பகுதி நேரமா வேலை பார்த்துக்கிட்டே படிச்சான். அடுத்து, எம்.ஏ., படிக்கப் போறேன்னு சொல்லிட்டு, சென்னை பச்சையப்பா கல்லுாரியில சேர்ந்தான்.

'என்னால செலவு பண்ண முடியாதுப்பா'ன்னு சொன்னேன். 'அதனால ஒண்ணும் பிரச்னையில்லைப்பா... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்'னு சொல்லிட்டு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுல மூட்டை துாக்கி படிச்சான்.'தினமும் காலையில, 7:00 மணி வரைக்கும் அங்கே மூட்டை துாக்கிட்டு லேட்டா தான் காலேஜ் போவானாம். ஒருநாள் காலேஜ் வாத்தியார் இவனை நிறுத்தி, 'ஏன் தினமும் லேட்டா வர்றே'ன்னு கேட்க, இவன் தன் முதுகை காட்டியிருக்கான். மூட்டை துாக்கியதால் பழுத்துப்போன முதுகை பார்த்த வாத்தியார், 'நீ தாமதமா வர்றது தப்பில்லைப்பா...'ன்னு சொல்லி, தட்டிக் கொடுத்துட்டு போயிருக்கார்.

தந்தைக்கு பெருமை
'எம்.ஏ., படிச்சிட்டிருக்கும் போதே, 2010ல, சி.ஆர்.பி.எப்.,பில் வேலை கிடைக்கவும், படிப்பை பாதியில விட்டுட்டு போயிட்டான். ஒருவேளை அவன் படிப்பை நிறுத்தமா இருந்திருந்தா, என் புள்ளை இன்னைக்கு எங்க கூட இருந்திருப்பான்.
'பரவாயில்லை... இன்னைக்கு நாடே என் பையனுக்கு மரியாதை செய்றதை பார்க்குறப்போ, அவனை புள்ளையா பெத்ததுக்கு பெருமையா இருக்குய்யா!'

சி.ஆர்.பி.எப்., வீரராக மரணித்து, தன் குடும்பத்தை பெருமைப்பட வைத்திருக்கிறார் சிவசந்திரன். இதே மனநிலையில் தான், துாத்துக்குடி சுப்பிரமணியன்

Advertisement

குடும்பமும் இருக்கிறது. ஆனால், களத்தில் மரணத்தை தழுவாமல் தப்பித்து, சி.ஆர்.பி.எப்., வீரராக ஓய்வு பெற்ற, 70 வயது பெர்னார்டின் மனநிலை எப்படி இருக்கிறது தெரியுமா...
'இந்திய ராணுவத்துக்கு இணையா வேலை பார்க்கிற துணை ராணுவப் படையினர் நாங்க! நாட்டை பாதுகாக்குற பணியில வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இறந்து போறாங்க. 'ஆனா, எங்களுக்கான அங்கீகாரம் இதுவரைக்கும் கிடைக்கலை. 40 பேர் ஒட்டுமொத்தமா பலியானதுனால மட்டும் தான் இந்த பரபரப்புங்கிறது மறுக்க முடியாத உண்மை.'அதேபோல, முன்னாள் ராணுவ வீரருக்கு இருக்கிற பணி வாய்ப்புகள், எங்களுக்கு கிடையாதுங்கிறது கசப்பான உண்மை.
'உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... ராணுவ கேன்டீனுக்கும், எங்களுக்குன்னு இருக்குற கேன்டீனுக்கும் கூட வேறுபாடுகள் உண்டு. அங்கே கிடைக்கிற பொருளுக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு உண்டு. ஆனா, எங்களுக்கு கிடையாது.'இது எல்லாத்துக்கும் மேல... ராணுவ வீரர் மரணத்துக்கு கிடைக்கிற, 'சாஹீத்'ன்னு சொல்லப்படுற, 'வீர மரணம்' அந்தஸ்து, சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கிடையாது! வருஷத்துக்கு, 75 நாள் விடுமுறையோட, 57 வயது வரைக்கும் வேலை பார்க்கலாம்னாலும், 20 வருஷம் வேலை பார்த்ததுமே, 'போதும்'ங்கிற மனசு வந்திடுது.
'இதுக்கு, நான் சொன்ன இந்த குறைகள் தான் முக்கிய காரணம்!'நம் முகத்தில் அறைகிறது பெர்னார்டின் பெரும் வருத்தம்.'பெர்னார்டின் இவ்வருத்தம் நியாயமே' என்கின்றன, சி.ஆர்.பி.எப்., நெடுநாளாய் மத்திய அரசிடம் வைத்திருக்கும் இக்கோரிக்கைகள்...
* முப்படை வீரர்கள் ஓய்வுபெற்ற பின் அளிக்கப்படும், 'முன்னாள் ராணுவ வீரர்' எனும் அந்தஸ்து, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட துணை ராணுவப் படையினருக்கும் வேண்டும்* முப்படைகளில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிலையில், துணை ராணுவ படையினருக்கும் இத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும்* சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கான ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்துவதை நீதிமன்றம் அனுமதித்து விட்ட நிலையில், இப்போதுள்ள, 57 வயது எனும் விதியை உடனே நீக்க வேண்டும்.இவை எதற்கும், மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என்கின்றனர் முன்னாள், இந்நாள் வீரர்கள்.'சங்கம் அமைத்து உரிமைகளை பெற வேண்டிய நிலையிலா துணை ராணுவப் படையினர் இருக்கின்றனர்...' எனும் சிந்தனை, நெஞ்சில் முள் பாய்ச்சுகிறது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டிலேயே கணவன் சுப்ரமணியனை தொலைத்திருக்கிறார், துாத்துக்குடி கிருஷ்ணவேணி. தாய் காந்திமதியின் கருவறையில் உருவம் பெறும் முன்பே தந்தையை தொலைத்திருக்கிறது, அரியலுார் சிவசந்திரனின் பிள்ளை.தன் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், விடுமுறை முடிந்து பணிக்கு கிளம்பும் போது, வாய் பேச இயலாத, தன் தங்கையிடம் சிவசந்திரன் இப்படி சொல்லிச் சென்றிருக்கிறார்...'என் மனைவி கர்ப்பமா இருக்குறா; அதிக வேலை கொடுக்காம அவள பத்திரமா பார்த்துக்கோ!'
குடும்பத்திற்கு ஆதரவாய் இருந்த, ஒரே ஆண்மகனையும் தற்போது இழந்து நிற்கிறது. குடும்பம். இக்குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு இருக்கிறது; நமக்கும் இருக்கிறது!உயிர் எடுத்தவர்களை, எல்லை தாண்டிப் போய், அழித்து விட்ட தற்போதைய செய்தி, கிருஷ்ணவேணிக்கும், காந்திமதிக்கும் தற்காலிக ஆறுதல் தந்திருக்கலாம். ஆனால், அவர்கள் காலம் முழுக்க பாதுகாப்பாய் உணர வேண்டும்.நம் பாதுகாப்புக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தை காலம் முழுக்க காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பிலுள்ள, https://bharatkeveer.gov.in இணையதளம் வாயிலாக நிதி அளித்து உதவலாம். இதன்மூலம், 'உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்' எனும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இது நடந்தால், நாடு காக்கும் பணி மீதான ஆர்வம், நம் இளைஞர்களிடம் இன்னும் அதிகமாகும்; நம் தேசம் பலம் பெறும்.
- நமது நிருபர் குழு -

Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X