கோவையில் போட்டி போட ஆசை : நடுராத்தியிரில் போட்டாங்க பூசை...| Dinamalar

கோவையில் போட்டி போட ஆசை : நடுராத்தியிரில் போட்டாங்க பூசை...

Updated : மார் 05, 2019 | Added : மார் 05, 2019
Share
வெயில் வாட்டி எடுப்பதால், வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சித்ரா, தேர்தல் கூட்டணி நிலவரங்களை, 'டிவி'யில் கவனித்துக் கொண்டிருந்தாள்.மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, தர்பூசணி பழம் வாங்கி வந்திருந்தாள். இருவரும் அதை ருசித்தவாறு, தேர்தல் நிலவரங்களை அசைபோட ஆரம்பித்தனர்.''என்ன மித்து, லோக்சபா தேர்தல் ரொம்ப 'டப்'பா இருக்கும்
 கோவையில் போட்டி போட ஆசை : நடுராத்தியிரில் போட்டாங்க பூசை...

வெயில் வாட்டி எடுப்பதால், வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சித்ரா, தேர்தல் கூட்டணி நிலவரங்களை, 'டிவி'யில் கவனித்துக் கொண்டிருந்தாள்.

மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, தர்பூசணி பழம் வாங்கி வந்திருந்தாள். இருவரும் அதை ருசித்தவாறு, தேர்தல் நிலவரங்களை அசைபோட ஆரம்பித்தனர்.''என்ன மித்து, லோக்சபா தேர்தல் ரொம்ப 'டப்'பா இருக்கும் போலிருக்கே.

ரெண்டு பக்கமும், கூட்டணி பலமா இருக்கே...'' என ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாக்கா, தி.மு.க., கூட்டணியில இ.கம்யூ.,வுக்கு, ரெண்டு தொகுதி ஒதுக்கியிருக்காங்க. அதுல, கோவையை முக்கியமா ஒதுக்கணும்னு சொல்லியிருக்காங்க. மா.கம்யூ.,வும் நம்மூரைத்தான் கேக்குது. மா.கம்யூ.,வுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடியலை; அநேகமா, இன்னைக்கு பேசி முடிப்பாங்க போலிருக்கு...'' என்றாள் மித்ரா.

''மாநாடு நடத்துனதுனால, இ.கம்யூ.,வுக்கு ஒதுக்குவாங்கன்னு நெனைக்கிறீயா...'' என, விடாமல் வம்புக்கு இழுத்தாள் சித்ரா.

''எதிர்பார்த்த அளவுக்கு, மாநாடு பிரமாண்டமா இல்லையே. கூட்டணி தலைவர்கள் ஒண்ணா நின்னு, கைகோர்த்து, முழங்குனாங்களே தவிர, மக்களை கவர்ந்திழுக்குற அளவுக்கு, விஷயத்தோட யாருமே பேசல... தி.மு.க., ஓட்டு, கம்யூ., ஓட்டு, பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை கூட்டி கழிச்சு, கணக்கு போட்டிருக்காங்க''

''2014 எலக்ஷன்ல, பா.ஜ., கூட்டணியில பொள்ளாச்சி தொகுதியில போட்டியிட்ட, கொ.ம.தே.க., இந்த வருஷம் தி.மு.க., கூட்டணியோட கைகோர்த்துருக்கு. கோவை வட்டாரத்துல ஜெயிக்கிறது கஷ்டம்ங்கிறதுனால, நாமக்கல் கேட்டுக்கிட்டு இருக்காராம். காங்கிரசும் விரும்பாததால, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதியில தி.மு.க., நேரடியா களத்துல இறங்க வாய்ப்பிருக்குன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...'''

'ஆனா, திருப்பூர்ல இளங்கோவன் போட்டியிட ஆர்வமா இருக்கறதா கேள்விப்பட்டேனே...''

''அவருக்கு ஆர்வம் இருக்கு; கட்சி மேலிடத்துல இருந்து, தி.மு.க.,கிட்ட கொடுத்த பட்டியல்ல, ஈரோடுதான் கேட்டுருக்காங்க; ஈரோடு ஒதுக்கலைன்னா, திருப்பூர் கேட்பாங்கன்னு சொல்றாங்க...'' என, விளக்கினாள் சித்ரா.

''ஆளுங்கட்சி கூட்டணி எப்படி இருக்கு...'' என, நோண்டினாள் மித்ரா.

''இப்போதைக்கு, அவுங்க கோட்டை தானே; கோவையை மட்டும், பா.ஜ., கேட்குது; மத்த தொகுதியில அ.தி.மு.க., போட்டியிடும் போலிருக்கு. வேட்பாளர் யாருன்னு முடிவெடுக்குறதுதான் பாக்கின்னு சொல்றாங்க...'' என்ற மித்ரா,

''கோவை தொகுதியில தேசிய கட்சிகளும், மற்ற தொகுதிகள்ல சூரியனா... இலையான்னு நேரடி போட்டி வரும்னு பேசிக்கிறாங்க... '' என்றாள் சித்ரா.

''ஓ... அப்ப, போட்டி கடுமையாதான் இருக்கும்னு சொல்லுங்க...''

''ஆமா, எலக்ஷன் கமிஷனும், வேலைய படுமும்முரமா செஞ்சுக்கிட்டு இருக்கு. ஓட்டுச்சாவடிக்கு தேவையான மெஷின்; ரசீது கொடுக்கற இயந்திரங்களை தயார் செஞ்சுக்கிட்டு இருக்காங்க...''

''ஆனா... இந்த தடவை, 'பூத் சிலிப்' காட்டி, ஓட்டுப்போட முடியாதாமே...''''ஆமா, அப்படித்தான் சொல்லியிருக்காங்க... பூத் சிலிப் காட்டி ஓட்டுப்போட முடியாதுன்னு சொன்னா, ஏகப்பட்ட பேரு ஏமாற்றத்தோட திரும்பி வர வேண்டியதுதான்...''

''ஏன்... ஏன்... ஏன்... அப்படிச் சொல்ற...'' என, வேகப்படுத்தினாள் சித்ரா.

''அக்கா, எலக்ஷன் கமிஷன் தரப்புல, 14 விதமான ஐ.டி., சொல்வாங்க. பட்டியல்ல பேரு இருக்கறவங்கள்ட்ட, வோட்டர் ஐ.டி., இருக்கறது கஷ்டம். பூத் சிலிப் கொடுத்தா, ஓட்டுப்பதிவு அதிகமாகும். கடைசி நேரத்துல, உத்தரவு மாறுறதுக்கு வாய்ப்பு அதிகம்னு சொன்னாங்க...''

''எலக்ஷனுக்காக அவசர, அவசரமா பூமி பூஜை போடுறாங்களாமே...''

''ஆமாக்கா, ரெண்டே நாள்ல, எட்டு கோடி ரூபாய் மதிப்புக்கு, வேலை செய்றதுக்கு பூமி பூஜை போட்டுருக்காங்க. குடிநீர் தொட்டி கட்டுறதுக்கு, நைட், 11:00 மணிக்கு பூஜை போட்டாங்கன்னா... பார்த்துக்கோங்களேன்...'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி... கவுண்டம்பாளையத்துல அரசு ஊழியர் குடியிருப்பு கட்டியிருக்காங்களே. எப்ப, ஒதுக்கீடு செய்யப் போறாங்க...'' கேட்டாள் சித்ரா.

''கட்டுமான பணி தான் முடிஞ்சிருக்கு; மத்த வேலை நெறைய்யா இருக்குக்கா. சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கு, 'அலாட்மென்ட்' இல்லைன்னு சொல்லணும். இல்லேன்னா, ஆர்.எஸ்.புரம் கதையாயிடும்...'' என்றாள் மித்ரா

.''அதென்ன, ஆர்.எஸ்.புரம் கதை...'' ஆர்வமானாள் சித்ரா.''சொந்த வீடு கட்டிட்டா, அரசு குடியிருப்பை ஊழியர்கள் காலி செய்யணுங்கிறது பொதுவான நடைமுறை. ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டுல இருக்கிற ஹவுசிங் யூனிட்டுல ஒதுக்கீடு வாங்குனவங்க, அரசு வீட்டை காலி செய்யாம, உள்வாடகைக்கு விட்டுருக்காங்க. 60க்கும் மேற்பட்ட வீடுகள்ல, வெளியாளுக குடியிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.'

'ஓகோ''''மாசா மாசம் வாடகை மட்டும் வசூலிச்சிட்டு போறாங்களாம். வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு ஆதாரத்தோட புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். புதுசா வந்துருக்கிற கலெக்டர், நடவடிக்கை எடுத்தா தேவலை...''

அதற்கு சித்ரா, ''புது கலெக்டர் சுறுசுறுப்பா இருக்காருன்னு சொன்னீங்க. கலெக்டர் ஆபீசுக்கு போனேன். டூவீலர் ஸ்டாண்ட் மாதிரி இருக்கே...'' என இழுத்தாள்.

''அதுவா, புதுசா கலெக்டர் ஆபீஸ் மட்டும்தான் கட்டுனாங்க. மத்த வேலை எதுவுமே செய்யலை. இன்னும் என்னென்ன வேலை பாக்கியிருக்குன்னு விசாரிச்சா, கலெக்டரே அதிர்ச்சியாகிடுவார். ஏன்னா, கருவூலம் செயல்படுற கட்டடத்தை இடிச்சிட்டு, 'பார்க்கிங்' ஏரியா ஒதுக்குறதா சொல்லியிருந்தாங்க. அந்த வேலைய செய்யவே இல்லை; நிதி என்னாச்சுன்னு தெரியலை'' என்றாள் மித்ரா.

அங்கிருந்த நாளிதழ் ஒன்றை சித்ரா புரட்டியபோது, ''டாஸ்மாக் மதுக்கடை செயல்படுற நேரத்தை குறைக்கணும்னு, கோர்ட் சொன்னதாக நியூஸ் வந்திருக்கு. நம்மூர்ல, 24 மணி நேரமும் மதுக்கடை செயல்படுது,'' என, அங்கலாய்த்தாள்.

''அப்படியா... எந்த ஏரியா...''

அதற்கு சித்ரா, ''சிட்டி லிமிட்டுக்குள்ளதான் வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப், வேலாண்டிபாளையம் மெயின் ரோடு, கோவில்மேட்டுல இருந்து கே.கே.புதுார் செல்லும் ரோட்டுல ரெண்டு கடை, தடாகம் ரோடு சிவாஜி காலனியில ஒரு கடையில, 'இல்லீகல் சேல்ஸ்' அமோகமா நடக்குது'' என்றாள்.

''எப்படி இதெல்லாம் நடக்குது''

''மாசம் தவறாம ஸ்டேஷனுக்கு மாமூல் போறதுனால, கண்டுக்காம விடுறாங்க. குடிகாரங்க தொல்லை தாங்க முடியாம, அந்த ஏரியாக்காரங்க, கலெக்டர் ஆபீசுல முறையிட்டு இருக்காங்க. இனியாவது நடவடிக்கை எடுக்குறாங்களான்னு பார்ப்போம்,'' என்று பதிலளித்தாள் சித்ரா.''கார்ப்பரேஷன் மேட்டர் எதுவுமில்லையா...''

''பொறு... இல்லாம இருக்குமா. மத்தியில காங்கிரஸ் ஆட்சி நடந்தப்ப, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., ஸ்கீம்ல, ரெண்டாயிரம் கோடி ரூபாய்க்கு 'திட்டம்' தயாரிச்சு, காலி பண்ணாங்க. இப்ப, 'ஸ்மார்ட் சிட்டி'ங்கிற பேருல நிதி ஒதுக்கியிருக்காங்க. இதுவரைக்கும் உருப்படியா ஒரு திட்டத்தை கூட துவக்கி வைக்கலை''

''உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளங்களை மேம்படுத்தப் போறதா ஏற்கனவே, ரூ.162 கோடி ஒதுக்கியிருக்காங்க. இப்ப, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம், சிங்காநல்லுார் குளத்தை கணக்கு காட்டி, ரூ.76 கோடி ஒதுக்கி இருக்காங்க'' என்றாள் சித்ரா.''அப்படியா...'' என, வாயைப் பிளந்தாள் மித்ரா.

''குயிக் வின் புராஜக்ட்னு ஏற்கனவே, ரூ.86 கோடி செலவழிக்க அனுமதி வாங்கியிருக்காங்க. குறிச்சி குளத்துக்குன்னு தனியா, ரூ.100 கோடிக்கு 'புராஜக்ட்' ரெடி பண்ணிட்டு இருக்காங்க...'' என, சித்ரா அடுக்கிக்கொண்டே சென்றாள்.

''அக்கா, போதும்... கேட்டாலே, நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்கு. கோடிக்கணக்குல கரன்சிய குளத்துல கரைக்கப் போறாங்கன்னு சொல்லுங்க,'' என, நொந்தபடி, மித்ரா சொன்னாள்.

''இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள, எட்டு குளமும் அழகான பொழுதுபோக்கு தலமா மாறும்னு, கார்ப்பரேஷன் அதிகாரிங்க சொல்றாங்க... செய்வாங்களா அல்லது, வழக்கம்போல பதிவேட்டுல கணக்கு எழுதிட்டு போவாங்களான்னு தெரியலை...''

''இதெல்லாம் விஜிலென்ஸ் அதிகாரிங்க பார்க்க மாட்டாங்களா...''

''நம்மூர்ல விஜிலென்ஸ் அதிகாரிகளே இல்லையாம்...'' என மித்ரா முடிப்பதற்குள், ''என்னது...'' என, சித்ரா அதிர்ச்சி அடைந்தாள்.

''இது விஷயமா சிறைத்துறை மேலிடத்துக்கு புகார் போயிருக்கு. உயரதிகாரிங்க விசாரிச்சப்ப, மழுப்பலா பதில் சொல்லியிருக்காங்க. அதனால, சீக்கிரமா விஜிலென்ஸ் பிரிவுக்கு போலீஸ் அதிகாரிங்க நியமிச்சிருச்சுவாங்கன்னு சொல்றாங்க...'' என்றாள் மித்ரா.

''பெட்டி கொடுத்து, பெங்களூருக்கு ரயில் விடாம முட்டுக்கட்டை போடுறாங்களாமே...''''அதுவா, நம்மூர்ல இருந்து பெங்களூருக்கு 'டபுள் டெக்கர்' உதய் எக்ஸ்பிரஸ் ஓடுது. திங்கள்கிழமை மட்டும் கெடையாது; அன்னைக்கும் ரயில் இயக்கணும்னு பயணிகள் கேக்குறாங்க. ஆனா, 'கலெக்ஷன் கட்' ஆயிடும்னு, பஸ்காரங்க ரயில்வே உயரதிகாரிகளுக்கு பெட்டி கொடுத்து தடுக்குறாங்களாம்,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் மித்ரா.அப்போது, ஈஷாவில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சி, 'டிவி'யில் ஒளிபரப்பானது; இருவரும் அதில் மூழ்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X