சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மஹாசிவராத்திரி - ஈசனுடன் ஓர் இரவு!

Added : மார் 06, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மஹாசிவராத்திரி - ஈசனுடன் ஓர் இரவு!

“சிவனின் அருள் நிறைந்த இரவு” என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழா! எதனால் மஹாசிவராத்திரி இரவிற்கு இத்தனை முக்கியத்துவம் என்பதையும் இந்நாளை ஒருவர் தன் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இங்கு சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:
முன்னொரு காலத்தில் நம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு வருடத்தில் 365 விழாக்கள் இருந்தன. இதையே வேறு விதமாக சொல்வது என்றால், ஒவ்வொரு நாளையும் கொண்டாட்டமாய் வாழ்வதற்கு அவர்கள் இப்படி ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த விழா ஒவ்வொன்றையும் ஏதோவொன்றின் பின்னணியில், வாழ்வின் ஏதோவொரு அம்சத்திற்கு ஏற்ப அமைத்தார்கள். வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள், வெற்றிகளை நினைவில் கொள்வதற்கு அல்லது சில முக்கியமான செயல்களில் ஈடுபடும் நாட்களை அவர்கள் விழாவாக உருவாக்கினார்கள். உதாரணத்திற்கு விதை விதைப்பது, நாத்து நடுவது, அறுவடை செய்வது இப்படி ஒவ்வொன்றையும் விழாவாக உருவாக்கி வாழ்வையே அவர்கள் கொண்டாட்டமாக நடத்திக் கொண்டார்கள். ஆனால் மஹாசிவராத்திரி விழா வேறுவிதமான முக்கியத்துவம் வாய்ந்தது.

நிலவின் சுழற்சிக் கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் 14வது நாள் (அ) அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில் மாசி மாதத்தில் (ஃபிப்ரவரி-மார்ச் மாதத்தில்) வரும் சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்பர். இந்த இரவு ஆன்மீக சாத்தியங்கள் நிறைந்த இரவு. அன்றிரவு பூமியின் வடக்கு அரைகோளம் ஏற்கும் நிலை, இயற்கையாகவே உங்கள் உயிர் சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. அதாவது இந்நாளில் ஒருவர் தன் ஆன்மீக சாத்தியத்தின் உச்சி நோக்கி செல்வதற்கு இயற்கை தானாகவே உந்துகிறது. இதை பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்தக் கலாசாரத்தில், மஹாசிவராத்திரியை இரவு முழுவதும் நீடிக்கும் விழாவாக உருவாக்கினார்கள். இயற்கையாக
மேலெழும்பும் சக்தி தடையின்றி மேல் நோக்கி செல்வதற்கு உதவும் விதமாக, அன்றிரவு முழுவதும் கண்விழிப்பது மட்டுமின்றி, முதுகுத்தண்டை செங்குத்தான நிலையில் நேராக வைத்திருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு மஹாசிவராத்திரி மிகமிக முக்கியமான நாள். குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும், உலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் கூட இது முக்கியமான நாள்.

குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் மஹாசிவராத்திரியை சிவனின் திருமண நாள் என்றும், உலகில் சாதிக்க நினைப்பவர்கள் இந்நாளை, சிவன் தன் எதிரிகளை எல்லாம் வென்ற நாள் எனவும் கொண்டாடுகிறார்கள். ஆனால் துறவிகளுக்கோ இந்நாள், சிவன் கைலாய மலையுடன் ஒன்றிக்கலந்த நாள். அன்று அவர் அசைவற்று ஒரு மலைபோல் மாறினார்.

யோகக் கலாச்சாரம் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதி குருவாக (அ) யோக விஞ்ஞானத்தை தோற்றுவித்த முழுமுதற் குருவாக அவரை வணங்குகின்றனர். பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தியானத்திலிருந்த சிவன் ஒருநாள் அசைவற்றவரானார். அந்த நாள்தான் மஹாசிவராத்திரி. துளிகூட அசைவின்றி முழுமையாய் அசைவற்றவராக அவர் ஆன நாள் என்பதால், ஞானிகள் சிவராத்திரியை அசைவற்ற தன்மை நிறைந்த நாளாகப் பார்க்கின்றனர்.

நவீன விஞ்ஞானம் பல நிலைகளைத் தாண்டி இன்று அடைந்திருக்கும் நிலையில் அவர்கள் ஊர்ஜிதம் செய்வது என்னவென்றால், உயிர் என நாம் அறிந்திருக்கும் அனைத்தும், பொருள்தன்மை, படைப்பு என்று நாம் உணர்ந்திருக்கும் அனைத்தும், பிரபஞ்சம் பால்மண்டலம் என்று நாம் அறிந்திருக்கும் அனைத்தும், இப்படி எல்லாமே ஒரே சக்தியின் பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடு என்பதுதான்.

விஞ்ஞானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் இந்த உண்மையை, ஒவ்வொரு யோகியும் அனுபவரீதியாக உணர்ந்து அறிகிறார்கள். “யோகி” என்று சொன்னாலே இப்பிரபஞ்சமும் படைப்பும் அனைத்தும் ஒன்றென தன் அனுபவத்தில் உணர்ந்தவர் என்று பொருள். “யோகா” என்று சொல்லும்போது ஏதோவொரு குறிப்பிட்ட பயிற்சியையோ அமைப்பையோ நான் குறிப்பிடவில்லை. எல்லையில்லா தன்மையை உணர வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் அனைத்து ஏக்கங்களும், பிரபஞ்சத்தின் ஒருமைநிலையை அறிந்திடவேண்டும் என்று தோன்றும் அனைத்து ஏக்கங்களும் யோகாதான். ஒப்பற்ற அந்த ஒருமைநிலையை உணர்வதற்கு இந்த மஹாசிவராத்திரி இரவு வாய்ப்பளிக்கிறது.

மாதத்தின் மிக இருளான நாள் சிவராத்திரி. மாதாமாதம் சிவராத்திரியைக் கொண்டாடுவதும், முக்கியமாக மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதும் இருளைக் கொண்டாடுவது போல் ஆகிறது. தர்க்கரீதியாக செயல்படும் எந்த மனமும் இயல்பாகவே இருளை எதிர்த்து, வெளிச்சத்தையே நாடும். ஆனால் “சிவா” என்றால் “எது இல்லையோ, அது” என்று பொருள். “எது இருக்கிறதோ” அது இப்பிரபஞ்சமும் படைப்பும். “எது இல்லையோ” அது சிவன். கண்களைத் திறந்து சுற்றும்முற்றும் பார்த்தால், குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் இங்கு நிகழ்ந்திருக்கும் படைப்பின் விஸ்தாரத்தைப் பார்ப்பீர்கள். ஆனால் விரிவான கண்ணோட்டத்துடன் நோக்கினால் இப்பிரபஞ்சத்தின் மிகப் பெரிய இருப்பு “ஒன்றுமற்ற வெறுமை” என்பதை உணர்வீர்கள். ஒன்றுமற்ற அந்த வெறுமைதான் “எது இல்லையோ அது”.
இதில் பால்மண்டலம் எனப்படும் ஒரு சில துளிகளைதான் நாம் அதிகம் கவனிக்கிறோம். அத்துளிகளை தாங்கிநிற்கும் பரந்துவிரிந்த ஒன்றுமற்ற வெறுமையோ பலரின் கவனத்திற்கு வருவதில்லை. இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்கிறோம். இன்று நவீன விஞ்ஞானமும்கூட “எல்லாம் ஒன்றுமற்ற வெறுமையிலிருந்து உருவாகி, மீண்டும் அதே வெறுமைக்குள் கரைந்து காணாமற் போகிறது” என்று நிரூபிக்கிறது. இந்த அடிப்படையில்தான் சிவனை (அ) பரந்துவிரிந்த ஒன்றுமற்ற வெறுமையை, கடவுளுக்கெல்லாம் கடவுள் என்று பொருள்படும் மகாதேவன் எனும் பெயரால் அழைக்கிறோம்.
உலகிலுள்ள எல்லா மதங்களும் கலாச்சாரங்களும், “இறைத்தன்மை” என்றால் அது “எங்கும் இருப்பது, எதிலும் இருப்பது” என்றே எப்போதும் வழங்கிவந்துள்ளன. இதை சற்றே உற்று நோக்கினால், எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய ஒன்றேவொன்று, எல்லா இடத்திலும் நிறைந்திருக்கக்கூடிய ஒன்றேவொன்று இருள் (அ) ஒன்றுமற்றது (அ) வெறுமை மட்டும்தான்.
பொதுவாக வாழ்வில் மக்கள் நலனைத் தேடும்போது, “தெய்வீகத்தை” வெளிச்சத்தின் ரூபம் என்று குறியிடுவோம்.

ஆனால் எப்போது நல்வாழ்வு என்பதைத் தாண்டி, வாழ்க்கை என்பதையும் தாண்டி முக்தி பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ; எப்போது அவர்களின் வேண்டுதலும் சாதனாவும் முக்தி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கில் இருக்கிறதோ; அப்போது “தெய்வீகத்தை” இருளின் ரூபமாக சித்தரிப்போம்.

நம் இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றபட்ட வழிபாட்டுமுறைகள் உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, பாதுகாத்துக் கொள்வதற்காகவோ அல்லது உங்கள் பிழைப்பை நல்லபடியாக நடத்திக்கொள்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை. அக்காலத்து வழிபாடுகள் எல்லாமே “கடவுளே, என்னை அழித்துவிடு. அப்போதுதான் நானும் உன்போல் ஆகமுடியும்” என்றுதான் இருந்தன. அதனால் சிவராத்திரி (மாதத்தின் மிக இருளான இரவு) என்பது ஒரு சாத்தியமாகக் கருதப்பட்டது. ஒருவர் தன் எல்லைகளைத் தகர்ப்பதற்கும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைப்பின் ஆதாரமான அந்த எல்லையில்லாத் தன்மையை உணர்வதற்கும் சிவராத்திரி ஒரு வாய்ப்பாக இருக்கிறது.


மஹாசிவராத்திரி - விழிப்புணர்வு மேலோங்கும் நாள்ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் படைப்பிற்கே மூலமான அந்தப் பரந்துவிரிந்த வெறுமையை நீங்கள் உணர்வதற்கான வாய்ப்பையும் சாத்தியத்தையும் மஹாசிவராத்திரி இரவு வழங்குகிறது. ஒருபுறம் பார்த்தால் சிவன் “அழிக்கும் சக்தி” எனப்படுகிறார், மறுபுறம் பார்த்தாலோ அவரை “கருணைக் கடல்” என்கின்றனர். அதுமட்டுமா? கொடுக்கும் குணம் கொண்ட வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் என்றும் அவரைப் போற்றுகின்றனர். யோகக் கலாச்சாரத்தில் சிவனின் கருணையை எடுத்துரைக்கும் கதைகள் பற்பல உள்ளன. கருணைக் கடலாய் அவர் ஊற்றெடுத்த தருணங்களும் சூழ்நிலைகளும் மலைக்க வைக்கும் அதேநேரம் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. அதனால் மஹாசிவராத்திரி இரவு உள்வாங்குவதற்கும் சிறந்த இரவு. இந்த இரவில் “சிவன்” என்று நாம் குறிக்கும் அந்தப் பரந்துவிரிந்த வெறுமையை ஒரு நொடியேனும் நீங்கள் உணர்ந்துவிடவேண்டும் என்பது எங்கள் ஆசை, ஆசி. இந்த இரவு வெறும் கண்விழிக்கும் இரவாக இல்லாமல், நீங்கள் விழித்தெழும் இரவாக ஆகட்டும்.

(ஈஷாவின் 25-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் 112 ஆதியோகி முன்பு வரும் மார்ச் 4-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது)

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
19-மார்-201911:57:15 IST Report Abuse
SENTHIL NATHAN பாரம்பரியமிக்க சிவாலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X