பாகிஸ்தான் என்றொரு தேசம், நம் அண்டை நாடாக இல்லாதிருந்தால், இந்தியா எப்போதோ, உலகின் கனவு தேசமாகி இருக்கும். காஷ்மீருக்காக நாம் சிந்திக் கொண்டிருக்கும் ரத்தம், இழந்து கொண்டிருக்கும் உயிர்கள், இறைக்கப்படும் பணம், கொஞ்ச நஞ்சமல்ல.இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதல் போக்குக்கு காரணமான காஷ்மீர், தொழில் வளம் மிக்க, செல்வம் கொழிக்கும் பகுதி கிடையாது; இயற்கை வனப்பு நிறைந்த பகுதி மட்டுமே.
அது போலவும், அதை விட சிறந்த பல இடங்கள், இந்தியாவிலும் இருக்கின்றன; பாகிஸ்தானிலும் உள்ளன.எனினும், காஷ்மீரை எப்படியாவது தன் வசப்படுத்தி விட வேண்டும் என, அந்நாடு துடிக்கிறது. அதற்காகவே, நம் மீது மறைமுக போர் தொடுத்து வந்த பாகிஸ்தான், சில நாட்களுக்கு முன், நேரடி போருக்கும் வந்து விட்டது. நம் விமானப் படையின் சரியான பதிலடியால், வாலை சுருட்டி, சும்மா இருக்கிறது.
நம் நாடு சுதந்திரம் பெற்ற, 1947ல் தான், பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைத்தது; ஒரு நாள் முன்னதாக கிடைத்தது அவ்வளவு தான். அழகு கொழிக்கும் காஷ்மீரை ஆண்ட, ஹிந்து மன்னர் ஹரி சிங், இந்தியாவோடு தான் இணைவார் என, இந்தியா கணக்கு போட்டது.அது போல,
முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர், முஸ்லிம்களுக்காக தனிநாடாக உருவாக்கப்பட்டுள்ள பாகிஸ்தானோடு தான் இணையும் என, பாகிஸ்தானும் கணக்கு போட்டது; ஆனால், இந்தியாவின் எண்ணம் தான் நிறைவேறியது.
அப்போது துவங்கிய பிரச்னை, 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. நான்கு நேரடி போர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறைமுக போர் நடத்தி
யும், பாகிஸ்தான் நம் மீது, தீரா பகைமையை கைவிடவில்லை.அந்த நாடு உருவான நாள் முதல், இப்போது வரை, பிரதமர்களாகவும், அதிபர்களாகவும் இருந்தவர்கள், வெளிப்படையாகவே, இந்தியாவுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்; சர்வதேச அரங்கில் அவர்களின் கொள்கை, இந்திய எதிர்ப்பாகவே இருக்கிறது.வெளியே வேஷம் போடவும், 'சமாதானம் விரும்பிகள்' என, காட்டிக் கொள்ளவும், அவ்வப் போது, பாகிஸ்தான் தலைவர்கள், இந்தியாவுக்கு வந்து சென்றாலும், பகைமை மட்டும் அவர்களிடம், வளர்ந்தபடியே தான் இருக்கிறது.பயங்கரவாதிகளை, மதக் கடமையாற்றும் போர் வீரர்களாக, பாகிஸ்தான் மக்கள் கருதுகின்றனர்; அவர்களை நேசிக்கின்றனர்; ஆதரவு அளிக்கின்றனர். அதனால் தான், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முயன்றால், மக்கள் கிளர்ச்சியில்
ஈடுபடுகின்றனர்.
வன்முறையை துாண்டி விடும் மத குருமார்களையும், பயங்கரவாதிகளையும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் தட்டிக் கேட்டால், 'காஷ்மீரை இந்தியாவிடம் அடகு வைத்து விட்டனர்' என, மக்களிடம் பொய்யை திரித்து விடுகின்றனர்.கலவரங்களை நடத்தி, பிரதமர் உட்பட மந்திரி
களை, வீட்டுக் காவலில் வைத்து, ராணுவம், ஆட்சியை நடத்தி விடுகிறது. இந்த யதார்த்தத்தை சரியாக புரிந்து வைத்துள்ளனர், பாகிஸ்தான் பிரதமர்கள். அதனால் தான், தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள, இந்தியாவுக்கு எதிரான, பயங்கரவாத செயல்களை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர்.
நம் நாடு மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள பயங்கரவாதத்தின் ஆணி வேர், பாகிஸ்தானில் இருந்து தான் புறப்
பட்டுள்ளது.ஏனெனில், பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களை ஆதரித்து, பாதுகாப்பது, அந்நாட்டு ராணுவமும், உளவுத்துறையும் தான்!ராணுவம், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு, மத குருமார்களை அனுசரித்து போகாமல், அங்கு யாருமே ஆட்சி நடத்த முடியாது.
காஷ்மீர் பிரச்னையை முன் வைத்து, காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் வளர்ப்பு பயங்கரவாத இயக்கங்கள், 'இந்தியா, நம் சகோதரர்களை
அடிமைப்படுத்தி வைத்துஉள்ளது. இந்தியாவிடம் இருந்து, காஷ்மீரை மீட்க போரிடுவது, இறைவனுக்கு ஆற்றும் தொண்டு' என கூறி, இளைஞர்களை, மூளைச்சலவை செய்கின்றன.அவர்களில் மதப்பற்று மிக்கவர்களை, பயங்கரவாதிகளாக மாற்ற, பயங்கரவாத பயிற்சிக்கு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு, பயங்கரவாதிகள் அனுப்புகின்றனர்.
அங்கு, பாக்., முன்னாள் ராணுவத்தினரால் நடத்தப்படும், பயிற்சி முகாம்களில், மத போதனையுடன், பயங்கர ஆயுதங்களை கையாளும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.தன் கையை வைத்தே, கண்ணை குத்தச் செய்வது போல, காஷ்மீர் மக்களை வைத்தே, இந்தியாவுக்கு
எதிராக செயல்படச் செய்வது, பாகிஸ்தானின் சகுனித்தனம். அந்த சதிக்கு வீழ்ந்த சில இளைஞர்கள், இந்தியாவுக்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக செயல்பட துவங்கி உள்ளனர்.இதனால் தான், புல்வாமா தாக்குதல் போல, காஷ்மீரில் ரத்தக்களரி தொடர்கிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு அளிக்கும், சிறப்பு அந்தஸ்து தான், சிக்கல்களுக்கு முக்கிய காரணம். இந்த சிறப்பு அந்தஸ்தால், காஷ்மீரில் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கவோ, தொழில் செய்யவோ
முடியவில்லை.இதனால், இந்தியாவில் பல இடங்களில் தொழிற்சாலைகள் இருப்பது போல, காஷ்மீர் மாநிலத்தில் கிடையாது. ஆப்பிள், குங்குமப்பூ, 'வால்நட்' கொட்டை எனப்படும், வாதுமை கொட்டை, குல்லா, உல்லன் போன்ற பொருட்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தி மட்டும் தான் அங்குள்ளது.
இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எட்டாக்கனியாகிப் போகிறது. எங்கு, வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறதோ, அங்கு
தீவிரவாதமும், பயங்கரவாதமும் எழும் என்பது உலகம் அறிந்த உண்மை.எனவே, பாகிஸ்தானின் சூழ்ச்சியில் காஷ்மீரும், அந்த மாநில முஸ்லிம் இளைஞர்களும் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் தொழில் வளத்தை பெருக்க வேண்டும்; அதற்கான சட்ட வழிகளை ஆராய வேண்டும்.
அமைதியான இடங்களில் தான், தொழில் செய்ய முடியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை பூமியாக மாறியுள்ள காஷ்மீரில் சுமுக நிலையை ஏற்படுத்த, மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இதுவரை தோற்று போயுள்ளன. காரணம், பாக்., துாண்டி விடும் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால், அவற்றை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகைய சமூக விரோதிகளால், நம் பிரசாரம், அம்மாநில இளைஞர்களின் காதுகளில் ஏறவில்லை.அந்த மாநில மக்களில் பெரும்பாலானோர், நம் நாட்டின் பிற மாநிலங்களை, தங்கள் சொந்த பகுதிகளாக கருதுவதில்லை.காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும், இந்திய அரசின் முயற்சிக்கு பெருந்தடையாக இருந்து வரும் பிரிவினைவாதிகளுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி செய்கிறது. இவர்களுக்கான உத்தரவுகள், பாகிஸ்தானிலிருந்து பிறப்பிக்கப்படுகின்றன.அவர்களுக்கு, அம்மாநில மக்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.
பிரிவினைவாதிகளின் பின்னணியில், எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வன்முறை கும்பலுக்கு, ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும்... உடனே பந்த், பேரணி, ஆர்ப்பாட்டம் என, வன்முறையில் இறங்கி விடுகின்றனர்.இவர்கள் நடத்தும் பந்த், பேரணியின் போது பாகிஸ்தான் கொடி மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளின் கொடிகளை ஏந்தி வருகின்றனர். மேலும், நம் வீரர்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.அந்த கும்பல் மீது, நம் பாதுகாப்பு படையினர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே, ஊடகங்கள் படம் பிடித்து காட்டுவதால், நடுநிலையான மக்களின் மனங்கள் கூட, அந்த கும்பல்களின் செயலில் நியாயம் இருக்குமோ என, எண்ணுகின்றன.
காஷ்மீரில் வன்முறையையே தொழிலாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு, அவர்களை வழி நடத்தும் தலைவர்களின் உண்மை முகம் தெரியாது.
அந்த தலைவர்கள், தங்களின் வாரிசுகளையும், உறவுகளையும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், பாதுகாப்பாக தங்க வைத்து, படிக்க வைப்பது இந்த அப்பாவி இளைஞர்களுக்கு தெரிவதில்லை.வேலையின்றி திரியும் காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே, அந்த மாநிலம் நம்முடன் இணைந்திருப்பதால் பலன் கிடைக்கும். அதற்காக சில திடமான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
அங்கு தொழில் வளத்தை மேம்படுத்த, திட்டமிட்ட, படிப்படியான நடவடிக்கைகள் அவசியம். அங்குள்ள இளைஞர்களில் சிலர், பிற மாநிலங்களில் தங்கி தொழில் செய்கின்றனர். அவர்களில் சிலரை, உத்தர பிரதேசத்தின், லக்னோ நகரில், ஒரு வன்முறை கும்பல், மூன்று நாட்களுக்கு முன் தாக்க முயன்றுள்ளது; அது தவறு!
வன்முறையை, வன்முறையால் தீர்க்க முடியாது. நம் பகுதிக்கு வந்துள்ள காஷ்மீரி இளைஞர்களை, நம் இளைஞர்களாக பாவிப்போம். அவர்களிடம், நம் நாட்டின் அருமை, பெருமைகளை கூறி, அவர்களின் உறவுகளை, அமைதி வழிக்கு திருப்ப முயற்சிக்க வேண்டும். காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள, ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின் கெடுபிடிகளுக்கு, அங்கு எதிர்ப்பு உள்ளது. அது தான், துணை ராணுவத்தினர் மீதான, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு காரணம் எனவும், கூறப்படுகிறது.
மாநிலம் முழுமைக்கும் உள்ள, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை, பயங்கரவாதத்தின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்த வேண்டும். பிற பகுதிகளில் அந்த கெடுபிடிகளை சற்று விலக்கும் போது, அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையை, நம் வீரர்கள் பெற முடியும்.மேலும், காஷ்மீரி இளைஞர்களுக்கு மூளை சலவை செய்யும் பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும். அவர்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் சலுகைகள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்டு உள்ளதாக கேள்வி... அதை அப்படியே பின்பற்ற வேண்டும்.
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, அரசு வாகனங்கள் போன்றவற்றை வாபஸ் பெற வேண்டும். அந்த சதிகாரர்களின் செயல்பாட்டை, உளவு அமைப்பினர் மூலம் கண்காணித்து, 'உள்ளே' தள்ள வேண்டும்.அந்த மாநில இளைஞர்களை நல்வழிப்படுத்த, ஊர் தோறும், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அடங்கிய நன்னெறி குழுக்களை ஏற்படுத்தி, காஷ்மீரி இளைஞர்களை திருத்த முயற்சிக்க வேண்டும்.
அதே நேரத்தில், சர்வதேச அரங்குகளில், பாகிஸ்தானின் சதிச் செயல்களை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி, அவர்களின் முதுகெலும்பை முறிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாகிஸ்தானுக்கு, வெளிநாட்டு நிதி கிடைக்காத வகையில், வழிகளை அடைக்க வேண்டும். 'காஷ்மீர், எந்த காலத்திலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான் இருக்கும்; அதை எந்த காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்பதை இன்னும் உறுதிபட, பாகிஸ்தானுக்கு சொல்ல வேண்டும்.
தொடர்புக்கு
எஸ்.லிங்கேஸ்வரன்
காவல் துறை அதிகாரி - ஓய்வு
இ - மெயில்:
lings.1143@gmail.com
கைபேசி: 94981 43282