கங்குலியை தடுத்த மம்தா!| Dinamalar

கங்குலியை தடுத்த மம்தா!

Updated : மார் 10, 2019 | Added : மார் 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
டில்லி உஷ், கங்குலி, மம்தா, திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., திமுக, அதிமுக, தி.மு.க., அ.தி.மு.க., காங்., தே.மு.தி.க., தேமுதிக,கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, டில்லி, ராகுல், தூதர்கள்

தேர்தல் நேரத்தில், சினிமா நடிகர் -- நடிகையர், கிரிக்கெட் வீரர்கள் என, பிரபலமானவர்களை அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் இழுத்து வேட்பாளர்களாக நிறுத்துவது வழக்கம். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் இப்படி பிரபலமான நடிகர்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.கிரிக்கெட் வீரர்கள் சேவாக், கவுதம் கம்பீர், சவுரவ் கங்குலி ஆகியோர், பா.ஜ., வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என, பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், கங்குலியை வேட்பாளராக நிறுத்த, பா.ஜ., முயற்சித்தது.கங்குலியின் குடும்பத்தினருக்கு இதில் விருப்பம். ஆனால், கடைசி நேரத்தில், பா.ஜ.,வின் வேண்டுகோளை, கங்குலி மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. 2014ம் ஆண்டும், கங்குலியை தன் பக்கம் இழுக்க, பா.ஜ., முயற்சி செய்தது; ஆனால், அப்போதும் மறுத்து விட்டாராம், கங்குலி.அவர், பா.ஜ., பக்கம் போகாமல் இருக்க காரணம், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தான் என சொல்லப்படுகிறது.கங்குலியும், மம்தாவும் நல்ல நண்பர்கள். அதோடு, மேற்கு வங்க மாநில நல்லெண்ண துாதராக, கங்குலியை, மம்தா நியமித்துள்ளார். 'இந்நிலையில், பா.ஜ., பக்கம் போவது சரியல்ல' என, கங்குலிக்கு, 'அட்வைஸ்' செய்தாராம் மம்தா.கங்குலி, பா.ஜ., வேட்பாளராக வராமல் இருக்க, வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. கோல்கட்டாவில் நிறைய தொழில் செய்து வருகிறாராம், கங்குலி. பா.ஜ., பக்கம் போனால் தன் தொழிலுக்கு பிரச்னை வரும்; தவிர, திரிணமுல் கட்சி தொண்டர்கள், தன் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டார்கள்; எனவே, அமைதியாக இருப்பது தான் தன் தொழிலுக்கு நல்லது என யோசித்து முடிவெடுத்து விட்டாராம், கங்குலி.


கடுப்பில் தி.மு.க.,வினர்


லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கூட்டணிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும், இரண்டு பக்கமுமே கொஞ்சம் மனக்கசப்பு உள்ளது. 'காங்கிரசுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கி, தலைவர் தவறு செய்து விட்டார்' என, சில, தி.மு.க., தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.இதுபற்றி கூறிய, தி.மு.க., தலைவர் ஒருவர், '10 சீட் காங்கிரசுக்கு அதிகம்; அவர்களுக்கு மக்களிடம் ஆதரவே இல்லை; தினமும், காங்கிரஸ் குடும்பத்தை, பிரதமர் நரேந்திர மோடி வறுத்தெடுத்து வருகிறார்; இதில் பாதிக்கும் குறைவாகவே வெல்ல வாய்ப்புள்ளது' என்றார்.'கூட்டணி விஷயத்தை சென்னையில் பேசியிருக்க வேண்டும்; தலைவர் உயிருடன் இருந்த போது, காங்கிரஸ் தலைவர்கள் கோபாலபுரத்திற்கு வந்து காத்திருப்பர். அவர் இருந்திருந்தால் காங்கிரசுக்கு, ஐந்து சீட் தான் கொடுத்திருப்பார். 'டில்லியில் கூட்டணி பேச்சு நடத்தியிருக்கக் கூடாது; கனிமொழியை ஏமாற்றி, 10 சீட் வாங்கிவிட்டனர்' என வருத்தப்படுகிறார், அந்த, தி.மு.க., தலைவர்.இன்னொரு பக்கம், 'கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் சீட் அள்ளி கொடுத்துவிட்டனரே' என்ற வருத்தமும், தி.மு.க.,வினரிடம் உள்ளது.அ.தி.மு.க., கூட்டணி விவகாரத்திலும் பிரச்னை தான். 'தே.மு.தி.க.,விற்காக காத்திருக்க வேண்டியதில்லை; அவர்களை, தி.மு.க., கை கழுவி விட்ட பிறகு, நாமும் கண்டு கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்க வேண்டும்' என அங்கலாய்க்கின்றனர், அ.தி.மு.க.,வினர்.




காங்., கூட்டணியை தடுத்தது யார்?


காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து, டில்லி முதல்வர் ஆனவர், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், இப்போது அவர் நிலைமை சரியில்லை. ஒரு சில நல்ல திட்டங்களை கெஜ்ரிவால், டில்லி மக்களுக்கு கொண்டு வந்திருந்தாலும், அவரது மற்ற
நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.இந்நிலையில், லோக்சபா தேர்தலில் தனியாக நின்றால் ஆம் ஆத்மி கட்சி தோற்றுவிடும் என்பதால், தன் எதிரியான காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தார், கெஜ்ரிவால்.டில்லியில், ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. 'இவற்றில், நான்கில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும்; மீதி மூன்றை, காங்கிரசுக்கு கொடுக்க தயார்' என, அக்கட்சிக்குதகவல் அனுப்பினார், கெஜ்ரிவால். ராகுலுக்கும் இதில் விருப்பம்; எப்படியாவது மோடியை தோற்கடிக்க வேண்டும்; அதற்காக, தன் எதிரியுடன் கை கோர்க்கவும் தயாராகி விட்டார் ராகுல்.தற்போது டில்லி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி முதல்வருமான ஷீலா தீட்சித்தும் சரி என சொல்லிவிட்டார்.காரணம், ஷீலாவின் மகன் சந்தீப்பும், கெஜ்ரிவாலும் நண்பர்கள்; மேலும் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறார், சந்தீப். இப்படியிருக்க, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டில்லிக்கு போன் செய்தார். 'கெஜ்ரிவாலோடு கூட்டணி வேண்டாம்; டில்லியில் கூட்டணி என சொல்லிவிட்டு, பஞ்சாபிலும் உங்களோடு வருகிறோம் என சொல்வார், கெஜ்ரிவால்; ஆனால், நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு தர மாட்டேன்; அதன் பின் உங்கள் விருப்பம்' என, ராகுலிடம் கறாராக சொல்லிவிட்டாராம் அமரீந்தர்.இதனால், கடைசியில், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி முறிந்து போனது. இதனால், 'காங்கிரசும், பா.ஜ.,வும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன' என, கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார், கெஜ்ரிவால்.


குழப்பத்தில் வெளிநாட்டு துாதர்கள்



'அனைத்து வெளிநாட்டு துாதர்களையும் கூப்பிடுங்கள்; அவர்களுடன் நான் பேச வேண்டும்' என, காங்., கட்சியின் சீனியர் தலைவர், ஆனந்த் சர்மாவிடம் சொன்னாராம், ராகுல். 'அனைவரையும் கூப்பிட முடியாது; பாகிஸ்தான் துாதரைக் கூப்பிட்டால் பெரும் பிரச்னை வரும்; மோடி இதை சொல்லி நமக்கு தலைவலியைக் கொடுப்பார்' என, சர்மா பதில் சொன்னாராம்.அதன் பின் பாகிஸ்தான் தவிர்த்து, சீனா, வங்கதேசம் என, மற்ற நாடுகளின் துாதர்கள், ராகுலின் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு வந்தனர். 'எதற்கு ராகுல் அழைத்திருக்கிறார்; எதைப் பற்றிப் பேசப்போகிறார்' என,எதிர்பார்ப்புடன் அவர்கள் வந்தனர். காங்கிரசாருக்கும், 'எதற்கு இந்த கூட்டம்' என, தெரிந்திருக்கவில்லை.
வந்திருந்தவர்களுடன் பேச ஆரம்பித்த ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். வந்திருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை; 'முக்கிய விவகாரங்களை பேச வேண்டும்' என கூப்பிட்டு, மோடியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டனர்.
'மோடி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அனைத்து விஷயங்களிலும்; ஆனால், காங்கிரஸ் அப்படியல்ல' என, பிரதமர் மோடியைப் பற்றி கடுமையாக விமர்சித்தார். 'எதற்கு மோடியை விமர்சிக்கிறீர்கள்' என, துாதர்கள் கேட்டனர்.'மோடி எந்த ஒரு விஷயத்தையும் அரசியலாக்குகிறார்; ஆனால் காங்கிரஸ் அப்படியல்ல' என, மீண்டும், பா.ஜ.,வையும் மோடியையும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாராம், ராகுல். வேறு வழியின்றி, ராகுலின் பேச்சைக் கேட்டுவிட்டு, சாப்பிட்டு திரும்பினர், துாதர்கள். 'காங்கிரஸ் - -பா.ஜ., அரசியலை எதற்கு இவர்களிடம் பேச வேண்டும்; ஏதோ கட்சி பிரசாரக் கூட்டம் மாதிரி நடத்திவிட்டாரே ராகுல். வெளிநாட்டிலும் நம்ம தலைவர், 'இமேஜ்' காலி' என, ராகுலுக்கு வேண்டப்படாத தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர்.





வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-மார்-201912:17:08 IST Report Abuse
Indhuindian இவிங்கள விட்டா காங்கிரஸ்க்கு வேறே வஷியே கிடையாது ஒன்னு ரெண்டு சீட்க்குடுத்தாலும் ஸலாம் போட்டு வாங்கிட்டு போயிருப்பாங்க தொண்டர்கள் நினைப்பது சரியே. முதல்லே அந்த பாத்து சீட்டுக்கு நிக்க ஆள் இருக்கன்னு பாக்கமாட்டாங்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X