மிருகங்களிடம் இரக்கம் காட்டாதீர் சிந்தனைக்களம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மிருகங்களிடம் இரக்கம் காட்டாதீர் சிந்தனைக்களம்

Added : மார் 13, 2019 | கருத்துகள் (4)

'அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா... நீங்க சொல்றதெல்லாம் செய்யறேண்ணா...' என, இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் அவலக்குரல் தான், இன்று எல்லார் மொபைலிலும் ஈன ஸ்வரமாக ஒலிக்கிறது; கேட்பவர் நெஞ்சில் இடியாய் விழுகிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் நெஞ்சு பதைபதைக்கிறது. 'யார் வீட்டுப் பெண்ணோ, கொடியவர் களிடம் இப்படி சிக்கிக் கொண்டாளே...' என்ற உணர்வில் மனம் அழுகிறது.ஆனால், இது தொடர்பாக வரும் அறிக்கைகளும், பேட்டிகளும், பேச்சு களும் சம்பவத்தை திசை திருப்பி விடுமோ என, சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது.

பெண்களை மிரட்டி, பணிய வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, 'வீடியோ' எடுத்த பொள்ளாச்சி கொடூரத்தால், நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.இது, பொள்ளாச்சியில் உள்ள, வேலை வெட்டியில்லாத பணக்கார பசங்களின் கொடூரம்; இருபதிற்கும் மேற்பட்ட முறை, குழுக்களாக நடத்திய பல ஆண்டு லீலை. 'பேஸ்புக்' எனப்படும், முகநுால் மூலம், பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழிப்பதே இவர்களது தொழில்.

இவர்களது வலையில் விழுந்த பெண்களில், பள்ளி, கல்லுாரி மாணவியர் முதல் திருமணமானவர்கள், வசதியானவர்கள் என, பலரும் உண்டு. கார், பண்ணை வீடு, ஆடம்பர உடை, ஆசை வார்த்தை போன்றவைகளால், பெண்களை தங்கள் வலையில் விழ வைக்க வேண்டியது, இவர்கள் நோக்கம்.

கடும் தண்டனைபின், நண்பர்களோடு சேர்ந்து, கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்வது. அதை வீடியோ எடுத்து, தங்கள் உடல் மற்றும் பணப்பசிக்கு அவ்வப்போது இரையாக்கிக் கொள்வது... இதில் இருந்து எப்படியோ தப்பிய ஒரு இளம்பெண்ணின் கதறல் தான், நடந்த அவலங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்துள்ளது; அனைவரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. நடந்த கொடூரத்தை முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அரசியல் அழுத்தத்திற்கு அப்பாற்பட்டு, இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.நடந்த கொடூரங்களுக்கும், உள்ளூர் அரசியல் பிரமுகருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, தகவல் பரப்பப்படுகிறது. போலீஸ் கையில் உள்ள குற்றவாளிகளை, 'முறைப்படி' விசாரித்திருந்தாலே இந்நேரம் எல்லா உண்மைகளும் வெளி வந்திருக்கும்.

'பாதிக்கப்பட்ட பெண்கள், தைரியமாக, போலீசிடம் தகவல் சொல்லலாம்; ரகசியம் பாதுகாக்கப் படும்' என்கிறது போலீஸ். ஆனால், பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த ஒரு பெண்ணின் பெயர், ஊர் போன்ற விபரங்களை தெரிவித்து, பத்திரிகை குறிப்பே அனுப்புகின்றனர்.பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், கடந்த ஆண்டில் மட்டும் காதல் தோல்வி, வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்ட, ஏழுக்கும் மேற்பட்ட பெண்களின் வழக்குகளை துாசு தட்டி எடுங்கள்; இந்த கொடூரன்களில் நிழல் அதில் நிச்சயம் படிந்திருக்கலாம்.நடவடிக்கை வேண்டும்

ஒட்டுமொத்த தமிழகத்திலும், பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயும், தந்தையும், குடும்பங்களும் உறைந்து கிடக்கின்றன. இந்த கடைந்தெடுத்த அயோக்கிய கழிசடைகளுக்கு, காமப்பிசாசுகளுக்கு, மனித மிருகங்களுக்கு, கொஞ்சமும் இரக்கம் காட்டாதீர்.அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர காவல் துறை உறுதியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்றதொரு கொடுமை, சில காலத்திற்கு முன், கோவையில் நடந்தபோது, அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த, சைலேந்திரபாபு எடுத்த கடுமையான நடவடிக்கையால், அவரது படத்தை ஊரெல்லாம், 'கட் - அவுட்' வைத்து, மக்கள் கொண்டாடினர்.போலீஸ் அதிகாரிகளே... பொள்ளாச்சி மக்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் உங்களையும் மதிக்க வேண்டும் என்றால், உங்களுக்குள் இருக்கும், 'சைலேந்திரபாபு'வை உசுப்பிவிடுங்கள்.

அதுபோல, பெண்களே... 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்காதீர்கள். அது ஒரு, மாயவலை; சிக்கினால் சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை. பொள்ளாச்சி கொடூரத்திற்கு பிரதான காரணமே, பேஸ்புக் தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்; அந்த பக்கமே, தலை வைத்து படுக்காதீர்கள்.

- எல். முருகராஜ்

பத்திரிகையாளர்

தொடர்புக்கு:இ- - மெயில்:murugaraj@dinamalar.inமொபைல் எண்: 9944309637

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X