அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாடு முழுவதும் சம வளர்ச்சி; அனைவருக்கும் அதிகாரம்!
கல்லூரி மாணவியரிடம், காங்., ராகுல், 'தெறி' பேச்சு

சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லுாரியில், 'மாற்றத்தை உருவாக்குவோர்' என்ற, தலைப்பில், நேற்று நிகழ்ச்சி நடந்தது. 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவியரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல், சரமாரியாக பதிலளித்து, அனைவரின் கைத்தட்டலையும் அள்ளினார்.

Congress,காங்கிரஸ்,காங்., ராகுல்,சம வளர்ச்சி,அனைவருக்கும் அதிகாரம்,கல்லூரி மாணவியரிடம்,தெறி பேச்சு


அதன் விபரம்:ராகுல்: தற்போது, நாடு முழுவதும், கொள்கை ரீதியான போர் ஏற்பட்டுள்ளது. ஒன்று, நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தவரும், இனத்தவரும், மொழியினரும் சமமாக கருதப்பட்டு, சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவரை, மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; அழுத்தம் தரக் கூடாது என்ற, கொள்கை உள்ளது.

இன்னொரு பக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையான, அனைத்து மாநிலத்தவர், இனத்தவர், மொழியினர், ஒரே மையத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். இந்த நிலையில், உங்கள் கேள்விகளை எதிர்கொள்கிறேன். எளிமையான கேள்விகளை விட்டு விட்டு, கடினமான கேள்விகளையே கேளுங்கள். பின், மாணவியர் கேள்விகளும், ராகுலின் பதிலும்:

அஸ்ரா: சார்...
ராகுல்: சார் என்று கூற வேண்டாம். ராகுல் என, பெயர் சொல்லி பேசுங்கள்.

அஸ்ரா: ஹாய் ராகுல்... நாட்டின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான, டாடா ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், சமீபத்தில், நிதி நெருக்கடிக்கு ஆளாகி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க, நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு, நம் நாட்டில் குறைந்த நிதியே செலவிடப்படுகிறது. நாங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கு, தேவையான நிதியை ஒதுக்குவோம். அனைத்தையும் கண்மூடித்தனமாக, தனியார் மயமாக்குவதற்கு பதில், அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவோம். அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும், ஒரே கொள்கை அமைப்போம்.

குஷி: பெண்களுக்கு சம உரிமை கிடைக்க, உங்கள் திட்டங்கள், எந்த அளவுக்கு உதவும்?
உத்தர பிரதேசம், பீஹார் போன்ற, வட மாநிலங்களை ஒப்பிட்டால், தென் மாநிலங்களில், பெண்களின் நிலை சிறப்பாக உள்ளது. இங்கு, பெண் அரசியல் தலைவர்களே உருவாகியுள்ளனர். இன்னும் மேம்பட வேண்டும். நாடு முழுவதும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளை பார்க்கும்போது, பெண்களின் பங்கு போதிய அளவில் இல்லை. இதற்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்லிமென்ட், சட்ட சபைகள் மற்றும் அரசு துறைகளில், பெண்களுக்கு முக்கிய இடம் கிடைக்க, சட்டம் ஏற்படுத்துவோம்.

பெண்களின் மீதான எண்ணங்களும், பார்வையும் மாற வேண்டும். ஆண்களுக்கு பெண்கள், எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. உண்மையில், ஆண்களை விட, பெண்கள் மேலானவர்கள்; 'ஸ்மார்ட்' ஆனவர்கள்.

விஷாலி: பண மதிப்பிழப்பை எப்படி பார்க்கிறீர்கள்? பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன செய்வீர்கள்? பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மாணவியர்: நாங்கள் விரும்பவில்லை.
ராகுல்: இதிலிருந்தே, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின், பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இந்த நடவடிக்கையை எடுக்கும் முன், பிரதமர் மோடி, உங்கள் முன் வந்து, கருத்து கேட்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், நாட்டு மக்களிடம், அமைதியான, மகிழ்ச்சியான சூழல் இருக்க வேண்டும். எப்போதும் பாரபட்சமாகவும், எதிர்மறையாகவும் சூழல் இருந்தால், பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.

முதலில், மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். மக்களுக்கு அதிகாரமும், நிம்மதியான வாழ்வையும் அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி, ஐந்து பிரிவுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள், நாடு முழுவதும், ஒரே வரி முறையையும், மிகவும் குறைந்த வரி முறையையும் கொண்டு வருவோம். நிரவ் மோடி, விஜய் மல்லையாவை பற்றி தெரிந்திருக்கும். அவர்கள், அரசின் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.

குறிப்பிட்ட செல்வந்தர்களுக்கான அரசாக, தற்போதைய அரசு உள்ளது. இளம் தலைமுறையினர், வேலைவாய்ப்புகளை பெறவில்லை.

நிரவ் மோடி, 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், கடன் பெற்று விட்டு, நம் நாட்டில், ஒரு வேலையை கூட உருவாக்கவில்லை. ஆனால், உங்களை போன்றவர்கள், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவர். ஒரு நாளில், சீனாவில், 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில், ஒரு நாளில், 450 வேலைகளே உருவாகின்றன. நாம், சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப, திட்டங்களை ஏற்படுத்துவோம்.

லியோனா: உங்கள் அம்மாவிடம், நீங்கள் பெற்ற நற்குணம் எது?
என் அம்மா, எனக்கு கற்று கொடுத்தது பணிவு. எவ்வளவு பெரியவராக இருந்தாலும், அதிகாரம் மிக்கவராக இருந்தாலும், அனைவருக்கும் சம அளவு மதிப்பு அளிக்க வேண்டும். பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற, பாகுபாடு கூடாது. அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும். அது சரி, நீங்கள், உங்கள் அம்மாவிடம் கற்றது என்ன?
லியோனா: என் அம்மா, அன்பை கற்று தந்துள்ளார்.

சுஷ்மிதா: தேர்தல் முடிவுகளின் படி, தென் மாநிலங்கள் தான், மத்திய அரசின் தலைவர்களை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளன. அப்போது, நீங்கள் தென் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்களா?
தற்போதைய அரசு, வட மாநிலங்கள் சிலவற்றின் மீது மட்டும், சிறப்பு கவனம் செலுத்தும் அரசாக உள்ளது. எங்களை பொறுத்தவரை, இந்தியா முழுமைக்கும் சமமான வளர்ச்சியுடன், அனைவருக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். யாருக்கும் பாகுபாட்டுடன், சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது. முன்னாள் அமைச்சர் சிதம்பரம், இங்கே இருக்கிறார். அவர், எங்கள் ஆட்சியில், பல ஆண்டுகள், நிதி அமைச்சராகவும், உள்துறை பொறுப்பிலும் இருந்துள்ளார். வட மாநிலங்கள் என்று இல்லாமல், தென் மாநிலங்கள், குறிப்பாக, தமிழகத்தின் குரல், டில்லியில் ஒலிக்க, தேவையான அதிகாரங்கள் வழங்குவோம். அனைத்து மாநிலங்களுக்கும், முக்கியத்துவம் வழங்கப்படும்.

கிருத்திகா: இந்தியாவின் வளர்ச்சிக்கு, எது தடையாக உள்ளது என, நினைக்கிறீர்கள்?
இந்தியாவின் வளர்ச்சிக்கு, முதலாளித்துவமும், ஊழலும் பெரும் தடையாக உள்ளன. இந்தியாவை, பல வகையில் பிரித்து பார்க்கின்றனர். பிரிவினைகள் இருந்தால், நாட்டை முன்னேற்ற முடியாது. உலக அரங்கில், இந்தியாவின் முகத்தை மாற்ற வேண்டியுள்ளது. சர்வதேச அளவில், இந்தியா மீதான நம்பிக்கை உயர வேண்டியுள்ளது. இந்தியா என்பது, வலது அல்லது இடது கொள்கை உடையதல்ல; நேர்வழியானது. இங்கு, உள்நாட்டுக்குள் போர் நடக்கிறது; ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், வட மாநிலம், தென் மாநிலம் என, பல பிரிவினைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். நாங்கள், இந்த நிலையை மாற்றி, அனைவரும் சமம்; இந்த நாடு, ஒரு தரப்பினருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற, நிலையை ஏற்படுத்துவோம். அப்போது தான் நிலையான வளர்ச்சி கிடைக்கும்.

மரியம்: சமீபத்திய பயங்கரவாத தாக்குதலை பற்றி, என்ன நினைக்கிறீர்கள். இதற்கு போர் மட்டுமே, ஒரு தீர்வாக இருக்காது. எனவே, நிரந்தர தீர்வுக்கு, என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், எனக்கு மிகுந்த அனுபவம் உண்டு. 2004 முதல், 2014 வரை, காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள், நிம்மதியாக வாழும் வகையில், அதிகாரங்கள் வழங்கினோம். அவர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், தொழில் செய்து வாழ உதவினோம். சுய உதவி குழுக்கள் வழியாக, அந்த பெண்களின் வாழ்க்கை நிலை உயர்த்தப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்த நடவடிக்கைகளை தொடராமல், தவறுகள் செய்துவிட்டார். அங்குள்ள கட்சியுடன், ஆட்சிக்காக கூட்டணி வைத்தார்; பின், ஆட்சியை கலைத்தார். காஷ்மீர் மக்கள், மீண்டும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களும், நாட்டின் குடிமக்கள் என, நினைக்க வேண்டும். துணை ராணுவ படையினர், 45 பேர் உயிர் தியாகம் செய்ததை மதிக்க வேண்டும். அதேநேரம், பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்னைகளை போக்க, மக்களின் கருத்தை பெறவில்லை. சரியான திட்டத்தை, மோடி அரசு வகுக்கவில்லை.

பால ஹர்ஷினி: நாட்டின் கல்வி முறையில், மாற்றம் கொண்டு வருவீர்களா?
உயர் கல்வியின் நிலையை, இன்னும் தரம் உயர்த்த வேண்டும். நவீன தொழில்நுட்ப கல்வியில், இன்னும் அதிக துாரம் போக வேண்டும்; அதற்கான மாற்றங்களை செய்வோம்.

சம்ரீன்: காஷ்மீர் விஷயத்தில், நீங்கள் எந்த கொள்கையை பின்பற்றுவீர்கள்?
காஷ்மீர் விவகாரத்தை, தற்போதுள்ள அரசை போன்று, அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம். அதை, மக்களின் ஒருமித்த எண்ணங்களின் படி, வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பயங்கரவாதத்தை வேரறுக்கவும், நடவடிக்கை எடுப்போம். இதற்கான பொறுப்புகள், எங்களுக்கு உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

வாத்ரா மீது மட்டும் நடவடிக்கை ஏன்?
லட்சுமி மேனன்: எதிர்க்கட்சியான நீங்கள், பல்வேறு ஊழல் பிரச்னைகளில், பெரும்பாலும் அமைதியாக இருந்துள்ளீர்களே? குறிப்பாக, ராபர்ட் வாத்ரா தொடர்பான பிரச்னையில், எதுவும் பேசவில்லையே?
ராகுல்: ராபர்ட் வாத்ரா விவகாரத்தில், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்தின் அடிப்படையில், யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அனைவர் மீதும், சட்ட நடவடிக்கை சமமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் மீது மட்டும், சட்ட நடவடிக்கை என்பது பாரபட்சமானது. ராபர்ட் வாத்ராவிடம் விசாரணை நடத்தட்டும். அதற்கு, முதல் ஆளாக, நான் ஆதரவு தெரிவிக்கிறேன். ரபேல் விமான தயாரிப்பு ஒப்பந்தத்தில், என்ன நடந்தது; பிரதமர் மோடி, அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கூறியதாக, பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். இதன்படி, வேண்டுமென்றே பிரான்ஸ் நிறுவனமும், மத்திய அரசின், ஹெச்.ஏ.எல்., நிறுவனமும் புறக்கணிக்கப் பட்டுள்ளன.

அரசு நிறுவனமான, ஹெச்.ஏ.எல்., இந்தியாவின் சுகோய், மிக், ஜாக்குவார் போன்ற போர் விமானங்களை தயாரித்துள்ளது. பாகிஸ்தானில் குண்டு போட்ட, மிராஜ் விமானத்தையும் பராமரிக்கிறது. மத்திய அரசின், 4,000 கோடி ரூபாய் நிதியில் செயல்படுகிறது. ஆனால், அம்பானி, தன் வாழ்நாளில், ஒரு போர் விமானத்தை கூட தயாரித்தது இல்லை. அவரது நிறுவனத்துக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 526 கோடி ரூபாய் மதிப்பிலான விமானத்தை, அதை விட, மூன்று மடங்கு அதிகமாக, 1,600 கோடி ரூபாய்க்கு வாங்குகின்றனர்.

இது குறித்து, மோடியிடம், யார் விசாரணை நடத்தியது? என்னை பொறுத்தவரை, வாத்ராவையும் விசாரிக்கட்டும்; பிரதமர் மோடியையும் விசாரிக்கட்டும். அது தான் சமமான நடவடிக்கை. இதைப்பற்றி, யாரும் மோடியிடம் கேட்கவில்லை; அவரும் வாய் திறக்கவில்லை. அவர், ஒரு நிமிடம் கூட பேசவில்லை. ஆனால், இந்த ஊழல் குறித்து, எண்ணற்ற ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. என்னை போல், மாணவ - மாணவியர் மத்தியில் வந்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல, மோடி தயாரா? அவரை, நீங்கள் இது போன்ற கல்வி நிறுவனங்களில் பார்த்து, கேள்வி கேட்டிருக்கிறீர்களா? பாதுகாப்பு காரணங்களை காட்டி, ஏன் அவர் ஓடி ஒளிகிறார்; அவர் பிரதமரான பின், மக்கள் மத்தியில் வரவேயில்லை.

மோடி மீது, 'லவ்' ராகுல், 'தமாஷ்!'

மாணவி: மோடியை, நீங்கள் கட்டி பிடித்தது ஏன்? ராகுல்: ஒவ்வொரு மதத்திலும், அன்பு தான் அடிப்படை. நான், பார்லிமென்டில் இருக்கும் போது, மோடி ஆக்ரோஷமாக பேசினார். என் தாய், தந்தை, குடும்ப உறுப்பினர்களை பற்றி, வெறுப்புணர்வுடன் பேசினார். அதனால் வருத்தப்பட்ட நான், இதற்காக, நாமும் கோபத்தை காட்டக்கூடாது என, நினைத்தேன். அவர் மீது, அன்பை காட்ட நினைத்தேன்; அதனால் கட்டி பிடித்தேன். மோடிக்கு, இந்த உலகில் உள்ள அழகான விஷங்களை பார்க்க முடியவில்லை. எப்போதும் கோபத்தையும், வெறுப்பையும் உமிழ்கிறார். நான், 2014 தேர்தலின் போது, இளைஞராக இருந்தேன்; இப்போதும், அப்படி தான் இருக்கிறேன். அந்த தேர்தலில், பல பாடங்களை கற்றோம். மோடியின் நடவடிக்கைகள், பல அனுபவங்களை, எங்களுக்கு தந்துள்ளன. சில நேரங்களில், கெட்ட விஷயங்களும் நல்லதுக்கே நடக்கும். மோடியின் வெறுப்புணர்வை மாற்ற, எனக்கு, ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீங்கள், உங்கள் ஆசிரியர்கள் பாடம் கற்று தரும்போது, கடினமாக இருந்தால், அவர்கள் மீது கோபப்பட மாட்டீர்கள். அவர் மீது, அதிக அன்பை செலுத்தினால், இன்னும் நிறைய கற்க முடியும். தமிழக மக்களை பற்றி, எனக்கு தெரியும். வெறுப்பை உமிழ்ந்தாலும், அவர்கள் மீது, நீங்கள் அன்பு செலுத்தக்கூடியவர்கள்; உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். எனவே, இந்த தேர்தல் வழியாக, வெற்றிகரமான, அதிகாரம் மிக்க, வலுவான நாட்டை கட்டமைக்க உதவுங்கள். எப்போதும் பணிவுடன் இருங்கள்.


'ஹாய் ராகுல், ஹவ் ஆர் யூ?'

ராகுல் பேச துவங்கியதும், 'சார்' என்று கேள்வி கேட்ட மாணவியிடம், ராகுல் என, பெயர் சொல்லி அழைக்கு மாறு கூறினார். இதற்கு, மாணவியர் கரகோஷம் எழுப்பினர். பிரியங்கா கணவர், ராபர்ட் வாத்ரா குறித்த கேள்வியை தவிர, மற்ற அனைத்துக்கும், மாணவியர் மத்தியில், சிரித்தபடியே பேசினார். ஒரு மாணவி கேள்வி கேட்கும்போது, 'ஹாய்' என்று பேசினார். அதற்கு ராகுலும், 'ஹாய்' என பதில் அளித்ததுடன், இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அப்போது, மாணவியர் உற்சாகத்தில் சத்தமிட்டனர். இறுதியாக, மாணவியர் தரப்பில், 'ஆல் தி பெஸ்ட்' என, ராகுலுக்கு வாழ்த்து கூறினர். நிகழ்ச்சியின் துவக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. 'யுத்தம் வேண்டாம்' என்ற, பொருள் தரும், சமஸ்கிருத பாடலுக்கு, மாணவியர் பரதநாட்டியம் ஆடினர்.


Advertisement

வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
18-மார்-201901:12:25 IST Report Abuse

k balakumaranநாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்று வரை அதிக காலம் இந்தியாவை ஆண்டது காங்கிரஸ் தான். இவ்வளவு காலமும் செய்யாததை இனி தான் செய்து காட்ட போகிறார் இளவரசர். அது என்ன இந்தியாவின் பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்தா?? ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சுழற்சி முறையில் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் இது வரை ஏன் வழங்கவில்லை?? குடும்ப கட்சி ஆயிற்றே. உங்கள் குடும்பம் வாழ எந்த வாக்குறுதியும் வழங்குவார், வென்றால் காற்றில் பறக்க விட்டு விடுவீர். இனி அது சாத்தியம் இல்லை மக்களை காந்திஜி பெயரை வைத்து எப்போதும் ஏமாற்ற முடியாது.

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-மார்-201903:27:18 IST Report Abuse

Manianஅட நீங்க ஒன்னு. இவரு சத்யம் பேப்பரில் எழுதி ரிஜிஸ்ட்டர் பண்ணி கொடுத்தாரா? வாய் வார்த்தையை மறதி என்று பின்னால் சொல்லலாமே. எப்படியும் ஓட்டுக்கு காசு கொடுத்தாகணும்னு அவருக்கு தெறியாதா? ...

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17-மார்-201902:07:23 IST Report Abuse

Aarkayநீங்கள் யார் எங்களுக்கு அதிகாரம் கொடுக்க? உங்கள் கட்சியை விரட்டியடிப்போம் இத்தேர்தலில்....

Rate this:
Rohin - jk ,இந்தியா
15-மார்-201914:32:36 IST Report Abuse

Rohinபப்பு, நீ இனிமே கிழிக்கறது அப்புறம் பார்க்கலாம், கடந்த எழுபது வருசமா உன் பரம்பரை நாட்டை காட்டி கொடுத்த மற்றும் நாட்டை மற்ற நாட்டுக்காரங்களுக்கு விற்றதை எல்லாம் முதல்ல சொல்லு, நீ வந்தா உன் பாட்ட கொஞ்சம் நஞ்சம் உட்டுட்டு போனதையும் முடுச்சு கட்டிடுவே

Rate this:
மேலும் 142 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X