அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுலை எதுவரை நம்பலாம்?

Updated : மார் 15, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (172)
Advertisement

காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒருநாள் பயணமாக தமிழகம் வந்து போனார். சென்னையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அடுத்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். மாணவிகளுடன் ராகுல் சந்திப்பு நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி.


என்னை சார் என்று அழைக்காதீர்கள்; ராகுல் என்றே அழையுங்கள். அதுதான் எனக்கு பிடிக்கும்..

கடினமான கேள்விகளைக் கேட்டு என்னை திணற வையுங்கள்..

அரசியல் தலைவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளவே இந்த சந்திப்பு..

பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புத்திசாலிகள்.. போன்ற ராகுலின் வசனங்கள் இளம் பெண்களை பெரிதும் கவர்ந்ததில் வியப்பில்லை.

வழக்கமான குர்தா, பைஜாமாவுக்கு விடை கொடுத்துவிட்டு ப்ளூ ஜீன்சும், கிரே டி-ஷர்ட்டுமாக ராகுல் மேடையில் ஏறியபோதே பலருக்கு புரிந்திருக்கும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மக்கள் தொடர்பு முயற்சி என்பது. ”கன்னத்தில் குழி விழச்செய்த புன்னகையாலும் எளிமையான உடல்மொழியாலும் வருங்காலத் தலைவிகளின் கேள்விக்கணைகளுக்கு நேராக, நேர்மையாக பதில் அளித்தார் இளம் தலைவர் ராகுல்” என்ற விமர்சனம்கூட அந்த திட்டமிடலின் ஓர் அங்கமாகத்தான் தோன்றுகிறது.


சீனியர் சிட்டிசன்களையே தலைவர்களாக பார்த்துச் சலித்த கண்களுக்கு ஐம்பதை எட்டாத அரசியல்வாதி அழகாகத் தெரிவதில் ஆச்சரியம் கிடையாது. ஆனால், நேராக நேர்மையாக பதில்களைத் தந்தார் என்கிற மதிப்பீடுதான் ஆய்வுக்கு உரியது. அடுத்த பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளவர் என்று சொல்லப்படும் ராகுல் உண்மையிலேயே அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான, நேர்மையான பதில்களைச் சொன்னாரா.. அல்லது, சாமர்த்தியமாக வார்த்தைகளை பிரயோகித்து உண்மை அல்லாதவற்றை பொட்டலம் கட்டி வினியோகித்தாரா என்பதை சந்திப்பின் தாக்கம் விலகியபின் மாணவிகள் நிச்சயம் தமக்குள் விவாதித்து உணரத்தான் போகிறார்கள்.

முதல் கேள்வி. டாடா ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சுட்டிக் காட்டி, உயர் கல்வியின் நிலை குறித்து கேட்கிறார் அஸ்ரா.ராகுல் அளித்த பதில், உயர் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்குவோம்; தனியார் மயமாக்காமல் அரசு கல்வி நிலையங்களை வலுப்படுத்துவோம் என்பது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 வருட ஆட்சியில் அதை செய்தார்களா என்றால் இல்லை. உயர் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரால் புதிய கொள்கையை அப்போதைய மனிதவள அமைச்சர் கபில் சிபல் அறிவித்த சில நாட்களிலேயே, பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை 15 சதவீதம் குறைத்தார் கபில். அது மட்டுமல்ல. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவது, பரிசோதனை கூடங்களுக்கு ரசாயனங்கள் வாங்குவது முதலான செலவுகளுக்கு அரசு இனி நிதி தராது. நீங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறது அவரது உத்தரவு.


எப்படி ஏற்பாடு செய்வதாம்?கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் எல்லாவற்றையும் படிப்படியாக உயர்த்துங்கள். இலவசமாக கொடுக்கும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலியுங்கள். தேசிய, சர்வதேச கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவதை குறையுங்கள்.. என்கிறார். இப்படி கட்டணங்களை உயர்த்தி உயர் கல்வியை ஏழைக்கு எட்டாக் கனியாக்கி, அரசு நிதியை குறைத்து பல்கலைக்கழகங்களை தள்ளாட வைத்த காங்கிரசின் தலைவர்தான் முற்றிலும் மாறான பதிலைச் சொல்கிறார்.

பெண்களுக்கு சம உரிமை கிடைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்ற குஷியின் கேள்வி அடுத்தது.பார்லிமென்ட், சட்டசபைகள் மட்டுமின்றி அரசு வேலைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் ஆக்குவோம் என்கிறார் ராகுல். பார்லிமென்டிற்கும் சட்டசபைகளுக்கும் நிறுத்தும் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை இதுவரையில் 13 சதவீதத்தைக்கூட எட்டியது இல்லை என்ற உண்மையை ராகுலுக்கே எவரும் சொல்லவில்லையா, அல்லது தெரிந்தும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாரா தெரியாது.

பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்கிற விஷாலியின் கேள்வி அடுத்து வந்தது.விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வங்கிகளில் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியதை ராகுல் தன் பதிலில் சுட்டிக் காட்டுகிறார். ஓடிப்போனது மோடி ஆட்சியில் என்றாலும், கணக்கு வழக்கு இல்லாமல் இவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என்பதும்; மேலிருந்து வந்த நிர்பந்தம் காரணமாகவே விதிகளுக்கு முரணாக வங்கிகள் கடன் வழங்கின என்பதும் ராகுல் சொல்லாமல் விட்ட உண்மைகள். மோடி அரசு பிரிட்டன் அரசுடன் பேசி விஜய் மல்லையாவை நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளது, அரைகுறை உண்மையை சொல்வது அப்பட்டமான பொய் சொல்வதைவிட ஆபத்தானது என்பது ராகுலுக்கு தெரியவில்லை, பாவம்.

கிருத்திகாவின் கேள்வி, இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது எது?கார்ப்பரேட் க்ரோனியிசம் என்கிற பெரு முதலாளித்துவ சார்புத் தன்மையை முதல் காரணமாக குறிப்பிடும் ராகுல், அதோடு ஊழலையும் சேர்த்துக் கொள்கிறார். சென்ற தேர்தலில் காங்கிரசை இந்திய மக்கள் தண்டித்ததே ஊழலுக்காகத்தான் என்பதை வசதியாக மறந்து விட்டார் அதன் இன்றைய தலைவர். ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் பட்டப்பகலில் பகிரங்கமாக நடத்திய அசகாய ஊழல்களை அவ்வளவு சீக்கிரமாக மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை ராகுலுக்கு. மன்மோகன் சிங் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்று காங்கிரஸ்காரர்கள் பெருமையோடு சொல்வதை யாரும் எதிர்க்கவில்லை. அவர் ஒருத்தராவது அந்தக் கட்சியில் சுத்தமாக இருக்கிறாரே என்ற தாராளபுத்தி. அதே சமயம், ஒரு குற்றத்தை கண்டும் காணாமல் இருப்பதுகூட உடந்தை என்ற பிரிவில் வரும் ஒரு குற்றமே என்பது சிலருடைய சிற்றறிவுக்கு எட்டாது போலும். தவிரவும், தொழிலதிபர்களுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்த நெருக்கம் நாடறிந்த ரகசியம். இன்று அதானி, அம்பானி என்று நான்கைந்து தொழிலதிபர்களை மோடிக்கு நெருக்கமானவர்களாக அடையாளம் காட்டும் காங்கிரஸ், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைக் கோடீஸ்வரர்களுடன் எத்தனை நெருக்கமான உறவு கொண்டிருந்தது என்பதை மூத்த தலைவர்களிடம் ராகுல் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். க்ரோனி கேப்பிட்டலிசத்தின் மூதாதையரே தலையில் கதர் குல்லா அணிந்தவர்கள்தான்.

பயங்கரவாதம் குறித்தும், புல்வாமா அட்டாக் பற்றியும் மரியம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் அளித்த பதில்தான் டாப்.காங்கிரஸ் கட்சியின் பத்தாண்டு ஆட்சியில்தான் பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டது என்கிறார் ராகுல். அவ்வாறு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும். விட்ட குறை தொட்ட குறையாக நாடு விடுதலை அடைந்த காலம் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் செய்து வரும் தொடர் தவறுகளால் அழகான அந்த மாநிலம் அடியோடு சீரழிந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. எனக்குள்ளும் ஒரு காஷ்மீர் இருக்கிறது என்று தனது வம்சாவழியை மாணவிகளுக்கு கோடிட்டுக் காட்டிய ராகுல், அந்த மாநிலத்தின் வரலாற்றை முறையாகப் படிக்காமல் விட்டது துரதிர்ஷ்டம்.

லட்சுமி மேனன் எதிர்பாராத விதமாக ராபர்ட் வாத்ரா மீதான ஊழல் புகார் குறித்து கேட்டபோது சற்று ஆடித்தான் போனார் ராகுல்.அதுவரை அவர் முகத்தில் படர்ந்திருந்த புன்னகை சட்டென விடைபெற்று, இறுக்கம் குடியேறியது. என்றாலும் சமாளித்தவர், ரபேல் குறித்தான பழைய புகார்களை மீண்டும் வாசிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். எனினும், ரபேல் விவகாரத்தில் மோடி சிறை செல்ல நேரிடும் என்று எச்சரிக்கத் தெரிந்த ராகுலுக்கு, தப்பித்தவறி காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று சொல்லத் தோன்றவில்லை. அதனால்தான் அவரது மிரட்டலை பிரதமர் வேட்பாளர் பேச்சாக எடுத்துக் கொள்ள இயலவில்லை; ஒரு வண்டு முருகனின் வாய்ச் சவடாலாக பார்க்கத் தோன்றுகிறது.

மோடி மீதான அன்பை வெளிப்படுத்தவே, பார்லிமென்டில் அவரை கட்டித்தழுவியதாக ஒரு கேள்விக்கு பதிலளித்த ராகுல், அன்பு பாசம் பற்றி மாணவிகளுக்கு ஒரு பாடமே நடத்தி விட்டார். எல்லாம் சரிதான் ராகுல், அன்பின் வெளிப்பாடாக பிரதமரை கட்டிப் பிடித்தது உண்மை என்றால், அது முடிந்து உங்கள் இருக்கையில் போய் அமர்ந்ததும் உலகமே பார்க்கும் வகையில் கேமராவைப் பார்த்து கண்ணடித்தீர்களே, அதன் உட்பொருள் என்ன என்று எந்த மாணவியும் கேட்க வாய்ப்பில்லாமல் போயிற்று.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ராகுல் எப்போதுமே பாதி உண்மையை மட்டுமே பேசும் பழக்கம் கொண்டவர் என்பது தெளிவாகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் பளபளப்பாக தோன்றும் பல விஷயங்கள் ஆழமாக ஆராயும்போது அருவருப்பாக தெரிவதைப் போல், ராகுலின் பதில்கள் எல்லாமே சத்திய சோதனையில் தோற்றுப் போகின்றன. ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார்: அதோ போகிறாரே, அவரை ஐந்து லட்சம் வரை நம்பலாம் என்று. ராகுல் பதில்களைக் கேட்டால் அந்த நண்பர் இப்படி சொல்லக்கூடும்: இவரை பாதி வரை நம்பலாம்!


மசூத் அசாரை விடுவித்தது பா.ஜ., அரசு செய்த குற்றமா?

மசூத் அசாரை 1999 ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் விடுதலை செய்ததால்தான், அவன் இன்று இந்தியாவை மிரட்டும் அளவுக்கு பாகிஸ்தான் ஆதரவில் வளர்ந்திருக்கிறான்.. என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராகுல்.

இதுவும் அவரது மற்ற பதில்களை போலவே பாதி உண்மை மட்டுமே. சம்பவத்தின் பின்னணி தெரிந்தால் இது புரியும். நாள் 1999, டிசம்பர் 24. நேபாளத்தின் காத்மாண்டு நகரில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814. பயணிகள் 178 பேருடன் ஊழியர்கள் 11 பேரும் இருந்தனர். சற்று நேரத்தில் ஐந்து பயணிகள் முகமூடி அணிந்து தாங்கள் பயங்கரவாதிகள் என்பதை அறிவித்தனர். கடத்தப்பட்ட விமானம் டெல்லி செல்லாமல் அமிர்தசரஸ், துபாய் என அலைக்கழிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் இறங்கியது. அங்கே தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய நேரம் அது. இந்திய சிறைகளில் உள்ள தங்கள் இயக்க உறுப்பினர்கள் 103 பேரை விடுவித்தால்தான் விமான பயணிகளை உயிருடன் விடுவோம் என்றனர் கடத்தல்காரர்கள்.

துபாயில் விடுவிக்கப்பட்ட 26 பேர் தவிர 163 பேர் விமானத்தில் இருந்தனர். அமெரிக்கா உட்பட எந்த வல்லரசும் நமக்கு மீட்புப் பணியில் உதவ முன்வரவில்லை. இன்று உள்ளதுபோல அன்று தகவல், தொழில்நுட்ப, போக்குவரத்து வசதிகளும் கிடையாது. ஒரு வாரம் தாண்டியும் தீர்வு வராததால், நாடே பதட்டத்தில் ஆழ்ந்தது. பயணிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் எழுப்பிய குரல் நாடெங்கும் எதிரொலித்தது. பயணிகள் உயிரை காப்பதுதான் முதல் வேலை என்று உறுதியாக சொல்லிவிட்டார் பிரதமர் வாஜ்பாய். எதிர்க்கட்சிகளும் அதையே வலியுறுத்தின. பயங்கரவாதியை விடுவிக்க மறுத்திருந்தால் 163 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். பிரதமரின் துாதர்களாக சென்ற அதிகாரிகள் இரவுபகலாக பேச்சு நடத்தியதால், 103 கைதிகள் என்பதை 36 ஆக குறைத்த கடத்தல் ஆசாமிகள், அதன் பிறகும் அதிகாரிகள் பேரம் பேசியதில் இறுதியாக 3 பேருக்கு இறங்கி வந்தனர்.

அதற்கு மேல் அவர்கள் விட்டுத்தர தயாராக இல்லை. பொறுமை இழந்து பயணிகளை ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லும் நிலைக்கு வந்து விட்டனர். எனவே, வேறு வழியில்லாமல் இந்திய சிறையில் இருந்த மசூத் அசாரையும் அவனது கூட்டாளிகள் இருவரையும் விடுதலை செய்தது அரசு. இந்த உண்மையை மறைத்து அல்லது மறந்து, அசாரை விடுதலை செய் என்று யாரோ செல்போனில் சொன்னதை கேட்டு வாஜ்பாய் அவனை விடுவிக்க ஆணையிட்டது போலவும் பேசியிருக்கிறார் ராகுல்.


யாரும் சொல்லவில்லையா?

பார்லிமென்ட், சட்டசபைகள் மட்டுமின்றி அரசு வேலைகளிலும் பெண்களுக்கு, 33 சதவீதம் கட்டாயம் ஆக்குவோம் என்கிறார் ராகுல். பார்லிமென்டுக்கும், சட்டசபைகளுக்கும் நிறுத்தும் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை இதுவரையில், 13 சதவீதத்தைக்கூட எட்டியது இல்லை என்ற உண்மையை ராகுலுக்கே எவரும் சொல்லவில்லையா, அல்லது தெரிந்தும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாரா தெரியாது.


சீரழிந்த காஷ்மீர்:

காங்கிரஸ் கட்சியின் பத்தாண்டு ஆட்சியில்தான் பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டது என்கிறார் ராகுல். அவ்வாறு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும். விட்ட குறை தொட்ட குறையாக நாடு விடுதலை அடைந்த காலம் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் செய்து வரும் தொடர் தவறுகளால் அழகான அந்த மாநிலம் அடியோடு சீரழிந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை.

Advertisement
வாசகர் கருத்து (172)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.swaminathan - COIMBATORE,இந்தியா
19-மார்-201912:36:57 IST Report Abuse
s.swaminathan ராகுலை எதற்கு நம்பனும் .அவங்க குடும்பம்தான் நாட்டை ஆளணும்மா . ஆண்டு என்ன சாதித்தார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
s.swaminathan - COIMBATORE,இந்தியா
19-மார்-201912:29:09 IST Report Abuse
s.swaminathan ஏன் பெண்கள் கல்லூரிலதான் பொய் பேசணுமா. எத்தனை ஆண்கள் கல்லூரிகள் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
17-மார்-201919:18:19 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி பொதுவாக ஆண்களை விட பெண்கள் புத்திசாலி. அப்போ உன்னை விட ஸ்மிரிதி இரானி மற்றும் நிர்மலா சீதாராமன் புத்திசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X