மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும்!

Added : மார் 15, 2019
Advertisement
மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும்!

லோக்சபா தேர்தல் என்பது, நாட்டு மக்களின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா. சமூக மேம்பாடு, இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிநிதியை, தாங்களே, சுதந்திரமாக தேர்ந்தெடுக்க கிடைக்கும் வாய்ப்பு என்பதால், இந்த நடவடிக்கை, திருவிழாவாக மக்களுக்கு உள்ளது.

'அணுகுண்டு செய்யக்கூடாது' என, அமெரிக்க அதிபருக்கு, ஐன்ஸ்டீன் கடிதம் எழுதினார். போரால், ஐரோப்பிய வரைபடத்தை, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே வந்ததால், ஏற்பட்ட அழிவுகளை உணர்ந்தவராக, அவர் அதை எழுதினார். பின், மக்களே, போரில்லாத ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கினர். மக்களின் சீரான வளர்ச்சிக்கு அமைதி தேவை. ஆனால், ஆயுத சந்தைக்கு, போர் தான் தேவை. இதை, பொருளாதார மேதைகள் கூட கூறுவதில்லை. அதை, படிப்பறிவால் மட்டுமே உணர முடியும். அதனால் தான், மக்களின் கல்வி அறிவை பொறுத்து தான், மக்களாட்சியின் வெற்றி அமையும் என்பர்.

நாட்டை பற்றி, பகுத்தறியும் தன்மை உடையவர்கள் தான், தேர்தலில் நல்ல முடிவு எடுப்பர். அதற்கு, கல்வி அவசியம். கல்வி, எளிதிலும், தாய் மொழியிலும் அமைய வேண்டும். அது தான், நாட்டை முன்னேற்றும். படிக்காததால், தான் பட்ட கஷ்டத்தை, தன் சந்ததி படக்கூடாது என்பதற்காகவே, தாங்கள் சம்பாதிப்பதில் பெரும் பகுதியை, குழந்தைகளின் கல்விக்காக, பெற்றோர் செலவு செய்கின்றனர். பலர், தங்களின் சக்தியை விட அதிகம் செலவு செய்வதை, கவுரவமாகவும், எதிர்காலத்துக்கான உத்தரவாதமாகவும் நம்புகின்றனர். கல்வி வியாபாரமாகி இருப்பது அவமானம்.

விழிப்புணர்வு அவசியம்:
இந்திய அரசியல் சட்டத்தில், அரசிற்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற பகுதியில், 38, 39, 41 ஆகிய உப்பிரிவுகளில் உள்ளவற்றை, யாரும் விவாதிப்பதில்லை. லோக்சபா உறுப்பினராகும் ஒவ்வொருவரும், 'இந்திய அரசியல் சட்டத்தின்படி செயல்படுவோம்' என, உறுதி ஏற்கின்றனர். அதை, அவர்கள் செய்கின்றனரா என்பதை அறிய, மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு அவசியம். மக்களாட்சி மகத்தானது. மக்களை ஏமாற்றினால், சர்வாதிகாரம் தலைதுாக்கும். அதற்கான சாட்சி தான், ஜெர்மனியில் ஹிட்லரும், இத்தாலியில் முசோலினியும் தோன்றி, நாட்டை அழித்தது.

அதாவது, நேர்மையான அரசியல் வாக்குறுதி என்பது, சாத்தியமானதை மட்டும் கூறி, மக்களிடம் ஓட்டு கேட்பது; பின், அதை, செயல்படுத்துவது. ஆனால், பல கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிக்கும், செயல்பாடுகளுக்கும், சம்பந்தமே இருப்பதில்லை. இந்திய அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் தான், மாநில அரசுகளின் பங்குடன், நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. மாநிலங்களுடன் இணைந்த நாட்டின் வளர்ச்சிக்கு, 'நிடி ஆயோக்' உதவாது. அதற்கு பதில், மத்திய - மாநிலங்களுக்கான திட்ட குழுக்கள் தான் தேவை. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது. நகர மக்களை விரட்டியடித்து, நகரத்தை மேம்படுத்தாமல், அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை, அரசு வகுக்க வேண்டும்.

இவற்றை உணர்த்தும் கல்வியை, மாநில பட்டியலில் இடம்பெற வேண்டும். மாநிலங்களின் அறிவு வளர்ச்சிக்கு, அது தான் உதவும். ஜோதிபா பூலே முதல், பல கல்வியாளர் கள், கல்வியை அரசின் பொறுப்பில் வைக்க வேண்டும் என்கின்றனர். குழந்தைகளின் இருப்பிடத்திற்கு அருகில், பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும். அதில், தாய்மொழி கல்வியை, மேல்நிலை வகுப்பு வரை வழங்க வேண்டும். ஆங்கிலத்தை சிறப்பாக கையாளும் வகையில், எழுத, படிக்க, பேச கற்பிக்க வேண்டும். விருப்பப்பட்ட மொழிகளை கற்கும் வாய்ப்பை, மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

உண்மையான மக்களாட்சி:

உலகளவில், விளையாட்டில் ஜொலிக்க, கல்வி துறையும், விளையாட்டு துறையும் இணைந்து செயல்பட வேண்டும். போதிய உணவு, நுாலகம், விளையாட்டு என்ற, அடிப்படை வசதிகள் உள்ள விடுதிகள், மாணவர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். ஊக்கத்தொகை வழங்கி, மாணவர்களின் ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி வளாகத்தில், ஜாதி, பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்க கூடாது. இவற்றை, அரசே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட கல்வி கிடைத்தால், தனி மனிதனுடன் இணைந்து, நாடு முன்னேறும். செலவு செய்தால் மட்டுமே உயர்கல்வி கிடைக்கும் என்ற, நிலை மாற வேண்டும். இது போன்ற மக்களுக்கான திட்டங்களை வலியுறுத்த, மக்களிடம் கருத்து கேட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், அது தான், உண்மையான மக்களாட்சி; தேர்தல் கொண்டாட்டம்; திருவிழா எல்லாம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X