'பெண் அறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை' என்றான் பாரதி. அவன் வாழ்ந்த நாளில், இந்த வரிகளே ஒரு புரட்சி தான். காரணம், அன்றைய கால கட்டத்தில், பெண்களை ஆண்கள் பார்த்த விதமே வேறு!
அன்றைக்கு, மனை பேணுதல் எனப்படும், வீட்டிலேயே இருந்து, சமைத்து போட்டு, குழந்தைகளை கவனித்து, மாமனார், மாமியாரை பேணி, கணவனை மகிழ்விப்பதே, பெண்களுக்கு அறமாக போதிக்கப்பட்டது.ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டாள் என்ற காலம் அது. ஆனால், இன்று அப்படியில்லை. பெண்களை தோழியாய், சகோதரியாய் பாவிக்கும் பல அற்புதமான ஆண்கள் இருக்கின்றனர்.
இன்னொரு புறம், அதே ஆண் மகனை - கல்வி, கேள்வி என, பிற எல்லாவற்றிலும் தேறின ஒருவனை - நண்பனாய், சகோதரனாய் நம்பமுடியாதது, எத்தனை பெரிய கேவலம்...அந்த நம்பிக்கையை, இனி எப்போதும் சந்தேகத்தோடு தான் பெண் குலம் பார்க்கும். அப்படியொரு திருப்பத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் பிழை தான், பொள்ளாச்சியில் நடந்த அவலம்.
எத்தனை வலியோடு அந்த பெண்ணின் குரல், 'உன்ன, 'பிரெண்டு'ன்னு தானடா நம்பி வந்தேன்...' என, ஒலிக்கிறது. அந்த நம்பிக்கையை, அந்த கொடூரனால் எப்படி அசட்டை செய்ய முடிந்தது?
கண் முன்னே, ஒரு பெண், 'அண்ணா... என்ன விட்டுரு' என, கதறுவதை காதிலேயே வாங்காமல், அவளின் உடலை, மொபைல் போனில் படமெடுத்த அந்த கொடூரனுக்கு அப்படியொரு துணிச்சலை கொடுத்தது எது அல்லது யார்?
ஒரு குழந்தை, தான் சார்ந்த சமூகத்தின் அத்தனை பேர் தாக்கத்தையும் தாங்கியே, தன் குணத்தை அமைத்து கொள்கிறது; இது, உளவியல் உண்மை.முப்பது வயதை தாண்டாத இந்த வக்கிர மிருகங்கள், இந்த குற்றங்களை துவக்கும் போது, அவர்களுக்கு, 18 - 20 வயது தான் இருந்திருக்கும். அப்போதே அவர்களுக்கு, இணைய வசதி ஏற்படுத்தி கொடுத்த பெற்றோர்,
கண்காணிக்காமல் விட்டது பெரிய குற்றம்.
இரண்டாவது, ஆசிரியர்கள். கண்டிப்பாக, இந்த கொடூரன்களின், 'டீன் ஏஜ்' பருவம், பிரச்னைக்குரியதாக தான் இருந்திருக்கும். அந்த நேரத்தில், ஆசிரியர்கள் அவர்களை கண்டித்திருப்பர் அல்லது ஒரு சூழலில் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பர்.இன்றுள்ள சட்டங்கள் மற்றும் கல்வித்துறை விதிமுறைகளின்படி, ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது. கடுமையாக கண்டிக்கும் ஒரு சில ஆசிரியர்களின் நடவடிக்கை, அத்துமீறல் என்ற பட்டியலில் வெளிச்சத்திற்கு
வந்துள்ளன.
ஆனால், அந்த அளவிற்கு, இந்த மாதிரி பிசாசுகள், ஆசிரியர்களை உதாசீனம் செய்தது வெளியே வரவில்லை. அதன் விளைவை, இனி மேல் தான் சமூகம் பார்க்கும்.உளவியல் ஆலோசகராக நான் சொல்கிறேன்... இந்த தலைமுறையின் அத்தனை பிழைகளுக்கும், ஆசிரியர்களின் கையை கட்டி போட்டது தான் காரணம். மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர் ஏற்பதில்லை; பெற்றோர் கண்டிக்க, பிள்ளைகள் ஏற்பதில்லை.சமூகத்தின் பெரியவர்கள் தான் அவர்களை கண்டிக்க முடியுமா... சக நண்பர்கள் தான் அவர்களை கண்டிக்க முடியுமா... யாராலும் முடியாததன் விளைவு தான், பொள்ளாச்சி கொடூரம். கண்டிப்பற்ற ஒரு தலைமுறையின்
அவலம் தான் இது!
கண்டிப்பு என்ற பெயரில், சில ஆசிரியர்கள் கர்ண கொடூரமாக, மாணவர்களிடம் இப்போதும் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இத்தனை கெடுபிடிகள் இருக்கும் காலத்திலேயே, அத்துமீறும் ஆசிரியர்களுக்கு, கையை கட்டாமல் சுதந்திரமாக விட்டிருந்தால், என்னவாயிருக்கும் என்ற எண்ண ஓட்டமும் எழத்தான் செய்கிறது.
மூன்றாவது முக்கிய காரணம், உறவினர்கள்.இந்த கொடுமைக்கார இளைஞர்கள், கொடூரங்களை நிகழ்த்தி வரும் இந்த, ஏழு ஆண்டுகளில், ஒரு முறையாவது, இவர்களது நடவடிக்கைகளை உறவினர்களால் அறிந்திருக்க முடியும். குறைந்தபட்சம், சந்தேகமாவது அடைந்திருக்க முடியும்.அப்போது, நெருங்கிய உறவினர்களான, மாமன், மச்சான், அத்தை, சித்தி போன்றவர்கள், இந்த கொடூரன்களின் தவறுகளை, தட்டிக் கேட்டிருக்க முடியும்; தடுத்திருக்க முடியும்.
தன் மகன் என்ன செய்கிறான்; அவன் நடவடிக்கையில் மாற்றம் தென்படுகிறதே என, கண்டுபிடிக்க முடியாதவர்கள், அந்த இளைஞர்களின் பெற்றோராக இருக்கவே முடியாது அல்லது அவர்கள் பேச்சை, இந்த அயோக்கியன்கள் உதாசீனப்படுத்தி இருக்க வேண்டும்.
நான்காவது, அனைவருக்கும் திறந்து விடப்பட்ட இணையம். பணம் கொடுத்தால், யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், இணையத்தில் பார்க்க முடியும். அதில், யார் என்ன பார்க்கின்றனர்; என்ன, 'அப்லோடு' செய்கின்றனர் என்பதை கண்காணிக்க, இணைய காவலர்கள் இல்லை.'தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியால், இணையம், அநேகமாக, இலவசமாக மாறிப் போனதால், 'போர்னோகிராபி' எனப்படும், பாலியல் சார்ந்த வக்கிர காட்சிகளை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது' என, புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
வீட்டிற்கு, ஏழெட்டு பிள்ளைகள் இருந்த காலத்தில் கூட, அப்பா வருகிறார் என்றால் அலறின குழந்தைகள். அம்மா கண்டித்தால், அப்படியே அமர்ந்திருந்தன பிள்ளைகள். ஆனால் இன்று,
வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான். அவர்களை கூட, கட்டுப்பாட்டுடன் வளர்க்கத் தவறிய பெற்றோரை என்ன செய்வது...
ஏழெட்டு பிள்ளைகளை பெற்றால், நன்றாக வளர்க்க முடியாது என கருதி, ஒன்றிரண்டொடு நிறுத்தி விட்ட பெற்றோர், அந்த குழந்தைகளை சரிவர வளர்த்திருக்க வேண்டாமா?வீடுகளில் இன்று, 20 வயதுகளில் இருக்கும் பல பிள்ளைகள், தங்கள் சொல்படி பெற்றோரை ஆட்டும், குட்டிச்சாத்தான்கள் தான் என்றால் மிகையில்லை.
தவறு செய்யும் பிள்ளைகளை பெற்றோர், பெரும்பாலும் கடுமையாக கண்டிப்பதில்லை அல்லது
அவர்கள் செய்யும் தவறுகள், பெற்றோருக்கு தெரிவதில்லை.பெண் பிள்ளைகளை எந்த அளவுக்கு பக்குவமாக, பாதுகாத்து வளர்க்கிறோமோ, அதை விட பல மடங்கு, ஆண் பிள்ளைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும்.
ஏனெனில், பாலியல் அத்துமீறலில் ஆண் பிள்ளைகள் தானே ஈடுபடுகின்றனர்!ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரே... உங்கள் பிள்ளைகள், 'டீன்ஏஜ்' பருவத்தை அடைந்ததும், அவர்களை தள்ளி வைக்காதீர்கள்; கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டுங்கள். மனம் விட்டு பேசி, நல்ல உறவை, நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
உங்கள் மகனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனியுங்கள். குறிப்பாக, அவர்களது நட்பு வட்டம் மீது உங்கள் நோட்டம் இருக்கட்டும். தயவுசெய்து, அவர்களது ஆசிரியர்களின் குற்றச்சாட்டுகளை, கண்டிப்புகளை புறக்கணிக்காதீர்கள்.வெளி நபர்கள் நம் பிள்ளைகள் குறித்து, ஏதேனும் குறையாக சொன்னால், அதையே நம்பி, நடவடிக்கை எடுக்கவும் செய்யாதீர்கள். அதே நேரத்தில், அந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக புறக்கணிக்காதீர்கள்; அதை ஆராய்ந்து பாருங்கள்.
கண்ணியமுள்ள ஆண் மகனை உருவாக்க, அன்னையர்கள் சபதமேற்க வேண்டிய காலம் இது!
பொள்ளாச்சியில் நடந்த கொடூரம், பல பெண்களுக்கான எச்சரிக்கை. எங்காவது தனியே போக, பெற்றோர் தடை சொன்னால் போதும், இந்த கல்லுாரி பெண்களுக்குத் தான் எத்தனை கோபம்
வருகிறது... 'என்னை சந்தேகப்படுகிறீர்களா... என் தோழியின் பெற்றோர், அவளை எவ்வளவு நம்புகின்றனர் தெரியுமா... அவளுக்கு எவ்வளவு சுதந்திரம் தருகின்றனர் தெரியுமா... நீங்கள் மட்டும் தான் இப்படி...' என, பெற்றோரிடம் எகிறும் பெண் பிள்ளைகளை பார்க்கிறோம்.
'நாம் தவறு செய்கிறோமா...' என, யோசிக்கும் அளவுக்கு, மகளதிகாரங்கள் பற்றி கொஞ்சம் யோசிக்கும் நேரமிது. எந்நேரமும் போனையே பார்த்து கொண்டிருக்கும் பெண்ணை, கொஞ்சம் கடிந்து கொண்டால் போதும், 'உனக்கென்னம்மா தெரியும்... காலேஜ் நோட்ஸ் எல்லாம், இப்போ மொபைல்ல தான் வருது...' என, வாயடைக்கும் அதி புத்திசாலிகளெல்லாம் இனிமேல் அடங்குங்கள்!
'பின்னாடியே அப்பா வாராருன்னு, பிரெண்ட்ஸ் எல்லாம் கேலி பேசறாங்க...' என, ஆதங்கப்படும், 'சுயமரியாதை தேவதை'களுக்கு, இனியாவது அந்த பாதுகாப்பின் அவசியம் புரிந்திருக்கும் என, கருதுகிறேன்.சொந்த வீட்டாருக்கே தெரியாமல், எத்தனை, 'பேஸ்புக்' கணக்குகள்... அவசரத்துக்கு கூட உபயோகிக்க முடியாத படி, மொபைல் போனில் ஒவ்வொரு செயலிக்கும்,
ஒவ்வொரு, 'லாக்!'
இதெல்லாம் எங்கே கொண்டு வந்து விட்டது பார்த்தீர்களா... இப்போது ஊரே பார்க்கிறது.
உறவில்லாத நபர்களை கூட, அந்த பெண்ணின் அலறல் உலுக்கிப் போட்டு விட்டது. அந்த குரலை கேட்டவர் எல்லாம் கலங்கிப் போயுள்ளனர்.'அந்த அழுகை, எங்கள் வீட்டு பெண்ணின்
அழுகை' என்றே, தமிழ் சமுதாயம் கலங்கிப் போயுள்ளது. இனிமேலும், இது போன்றதொரு அநீதி நேராமல் காப்பது, அரசின் கையில் இல்லை; அன்பு பெண்களே... உங்கள் கையில் தான் உள்ளது.
நர மாமிசம் உண்ணும் மனித பேய்கள் நிறைந்த உலகில், உங்களை காப்பதற்கு நீங்களே துணை. அறியாமையை அகற்றும் நேரமிது. ஏழு ஆண்டு காலம், ஏராளமான பெண்கள், இந்த கொடியவர்களிடம் சிக்கியுள்ளனர். எனினும், ஒருவர் கூட, அவர்களுக்கு எதிராக புகார் அளிக்கவில்லை. இன்றைய பெண்கள் இவ்வளவு தைரியமற்றவர்களா?
இந்த பயத்திற்கு காரணம், 'பால் மணம் மாறாத பருவத்திலேயே, மீசை வைத்த, முரட்டு மனிதர்களிடம் போக குழந்தை அஞ்சுகிறதே, அப்போதே தோன்றி விடுகிறது' என்கிறது உளவியல்.
வாலிப வயதில், நண்பன் அழைத்தான் என்பதற்காக, எங்கு வேண்டுமானாலும் போகலாம் என, பொள்ளாச்சியில் சீரழிந்த பெண்கள் எண்ணியது அறியாமை.
நம்பிக்கைக்கும், குருட்டு தைரியத்திற்கும் வேறுபாடு தெரியாத பேதமை; காதலுக்கும், கல்விக்கும் உகந்த வயது எது என, யோசிக்காதது முட்டாள்தனம்.வயதின் கோளாறுகளை கையாளத் தெரியாமல், தான் சிதைக்கப்படுவதை, தானே அனுமதிப்பது மாபெரும் அறிவீனம். 'அச்சத்தால் மானத்தை கூட தொலைக்கலாம்' என, ஒரு புழுவைப் போல் வாழ்ந்தது அறிவற்றதனம் அன்றி வேறில்லை.பொதுவாக, மனநல ஆலோசனைக்கு வரும் பெண்களில், 'எதிர்க்க திராணியற்று பாதிக்கப்பட்டேன்' என்பர்.
அறியாமையால் தான், நிறைய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.பெண்களே... 21ம் நுாற்றாண்டின், 'மாடர்ன்' தலைமுறை என்பதில் தான் உங்களுக்கு எத்தனை பெருமை!நட்பை நான் பழிக்க மாட்டேன்; ஆனால், அதற்கொரு எல்லை உண்டு. யாரையும் நம்பும் முன், இரு முறை யோசியுங்கள்; பெற்றோருடன் உங்கள் நட்பு வட்டாரம் குறித்த விபரம் தெரிவியுங்கள்.
எந்த சூழலிலும் உன் சுயம் காக்க மறவாதே; உன்னை அறி; உன் பலம் உணர். உனது தேடலை விரிவாக்கி, சாதனையை நோக்கி சிறகு விரி; எங்கு சென்றாலும் உன் வீட்டாருடன் தொடர்பில் இரு.தற்காப்புக்கலை ஒன்றை இனியாவது கற்றுக்கொள். அப்படியே ஒரு தீங்கு நேர்ந்தாலும், சோர்ந்து கிடக்காமல், அக்கினி சிறகு கொண்டு மீண்டு வா. நீ அகிலம் காக்க பிறந்த அற்புத படைப்பு என்பதை மறந்து விடாதே.
தொடர்புக்கு:
அலைபேசி: 94861 81238
இ - மெயில்:
leenajustins@gmail.com