'சோனியாவுக்கு பிரசாரம் செய்யும் மோடி'

Added : மார் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
'சோனியாவுக்கு பிரசாரம் செய்யும் மோடி'

பொதுவாக நம் நாட்டு அரசியலில், இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று, ஆட்சியில் இருக்கும் கட்சி, மூன்றாவது முறை வெற்றி பெறுவது அரிதாக உள்ளது.

இப்படி ஆளும் கட்சியாக இருந்து, மூன்றாவது தேர்தலில் தோற்று போவதற்கு காரணமாக இருப்பது, ஆளும் கட்சியாகத்தான் இருக்கிறது. நம் பார்லிமென்ட் வழக்கத்தின் படி, 2004 - -2014 காலகட்ட, 10 ஆண்டுகளில், மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சிக்குப் பின், மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, பா.ஜ.,வின் நரேந்திர மோடி தான், இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால், மேலே சொன்னபடி, தான் பதவியில் அமர்ந்த முதல் நாளிலிருந்தே, சோனியாவுக்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார் மோடி.

இது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சென்ற தேர்தலில் மோடி அலை வீசியது. அதில், சந்தேகமே இல்லை. இந்தியா பூராவும், ஊழலுக்கு எதிராக, மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

எதிர்பார்ப்பு:
அந்தக் கோபம் எல்லாம், ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருந்த மோடிக்கு, ஓட்டுகளாக மாறின. சுதந்திரத்துக்குப் பின், ஒரு மாபெரும் மாற்றத்துக்குத் தயாரானது இந்தியா. வாஜ்பாயியின் ஆட்சியை போல் இருக்கும்; வருமான வரி சீர்திருத்தங்கள் நடக்கும்; கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்களில் மாற்றங்கள் நிகழும்; குறைந்த பட்சம், மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றெல்லாம், மக்கள் எதிர்பார்த்தனர்.

குஜராத்தில், மோடி முதல்வராக இருந்த போது, அந்த மாநிலத்தின் பெரும் பிரச்னைகளாக இருந்தவை, குடிதண்ணீர் பஞ்சம் மற்றும் மின்சார தட்டுப்பாடு. இரண்டையும் முழுமையாகத் தீர்த்து வைத்தார். அதனால் தான், கோத்ரா படுகொலைகளுக்குப் பிறகும், முஸ்லிம்களும் மோடிக்கே ஓட்டு போட்டனர். முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல், மோடி, 14 ஆண்டுகள் தொடர்ந்து, குஜராத்தின் முதல்வராக இருந்திருக்க முடியாது. கோத்ரா படுகொலைகள் நடந்தது, 2002ல் தான். அதற்குப் பின், இரண்டு பொதுத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, 2014 வரை குஜராத்தின் முதல்வராக இருந்தார். ஒட்டு மொத்த மக்களும், ஊழல் இல்லாத அரசையே விரும்பினர்.

குஜராத்தின் குரல், 2014-ல், இந்தியா முழுவதும் எதிரொலித்தது. பா.ஜ., வகுப்புவாத கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் எடுபடவில்லை; பிரமாண்டமான வெற்றியை பெற்றது. சென்ற லோக்சபா தேர்தலில், தேசத்தின் எல்லா எழுத்தாளர்களும் மோடியை எதிர்த்த போது, நானும், ஜோ.டி.க்ரூசும் மட்டுமே, மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து எழுதினோம். காங்கிரசுக்கு, 50 சீட்டுகளுக்கு கீழே தான் கிடைக்கும் என்று எழுதினேன்; 44 கிடைத்தது. தி.மு.க.,வுக்கு ஒன்று கூட கிடைக்காது என்று எழுதினேன்; அதன்படி, ஒன்று கூட கிடைக்கவில்லை.

எதிர்மறை விளைவு:
இப்படி ஒரு மகத்தான வெற்றியை பெற்று பதவிக்கு வந்த மோடி, தன் ஆட்சியில் என்ன செய்தார்? எதிர்க்கட்சிகள், அவர் மீது என்ன குற்றம் சாட்டியதோ, அதையே செய்தார். அதைக்கூட, ஒளிவுமறைவாகச் செய்யவில்லை; வெளிப்படையாகச் செய்தார். ஹிந்து சாமியார்களாக தேடிப் பிடித்து, அவர்களுக்கு, 'பத்மஸ்ரீ, பத்ம பூஷண்' பட்டங்களை கொடுத்தார். ஹிந்துத்துவத்தின் தீவிரமான செயல்வீரரைப் பிடித்து, உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கினார். ஏதோ, இன்னும், 20 ஆண்டுகளுக்கு தேர்தலே இல்லாமல், தானே பிரதமராக இருக்கப்போவது போல் நினைத்து, இந்தக் காரியங்களில் ஈடுபட்டார் மோடி.

நான் கூட விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு; 'சுதந்திரம் வாங்கியதிலிருந்தே காங்கிரஸ், நேருவின் குடும்பச் சொத்தாக இருந்து வருகிறது. இப்போது, மோடியும் சேர்ந்து, இந்தியாவை, சோனியாவின் கையில் கொடுத்து விடுவார் போலிருக்கிறது' என்று. அதுதான் நடக்கும் போல தெரிகிறது. திரும்பவும், நேருவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தியாவை ஆளப் போகிறார். என்ன காரணம்? மோடி செய்த இரண்டு காரியங்கள் மக்கள் மனதில், ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விட்டன.

வெறுப்பு அரசியல்:
தென் மாநிலங்களில் எப்படியோ; வட மாநிலங்களில், நிலைமை அப்படித்தான் இருக்கிறது. உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களின் கிராமப்புறங்களில், நான் சுற்றி அலைந்திருக்கிறேன். பல கிராமங்களில் மின்சாரமே இல்லை; சாலை வசதிகள் அறவே இல்லை. ஏதோ, மத்திய காலகட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டதை போல இருந்தது எனக்கு. அந்தந்த ஊர் பண்ணையார்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக யாருமே, எதுவுமே செய்ய முடியாது. போலீஸ் கூட, அவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும். ஜாதி வெறியும் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் எல்லாம் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், பசுவதை தடுப்புச் சட்டத்தை எடுத்து வந்தது, மோடி செய்த மிகப் பெரிய தவறு.

'மக்களே, மிருகங்களை போல வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், மாட்டை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?' என்று தான், அந்த மக்கள் கேட்டனர். மோடியின் மாட்டு அரசியல், ஹிந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உத்தர பிரதேசத்தில், கிராமத்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்வே, மாடு மேய்ப்பது, பால் கறந்து விற்பது என, மாட்டை பிரதானமாக கொண்டது தான். தலித்துகளின் வாழ்க்கை, மாட்டு இறைச்சி விற்பது. இப்போது, அவர்கள் எல்லாரும் எருமைகளை வளர்க்கின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாதவர்களான நம்மை போன்றவர்களுக்கு, எங்கோ உத்தர பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம்களும், தலித்துகளும் மாட்டிலிருந்து எருமைக்கு மாறுவதில் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், இதில் அடங்கியிருக்கும், 'பயம்' என்ற விஷயத்தை காணத் தவறாதீர்கள். உயிர் பயம். மாடு மேய்த்த ஓரிருவர் கொல்லப்பட்டதால், மாட்டை கண்டாலே அஞ்சினர். உ.பி., தலைநகர் லக்னோவில், பிரபலமான ஒரு ஓட்டலில், மாட்டு இறைச்சி பிரியாணி ரொம்ப பிரசித்தம். இப்போது அங்கே சிக்கன் பிரியாணி போடுகின்றனர் என்றால், அங்கே நிலவும் அச்ச உணர்வை புரிந்து கொள்ளுங்கள். இதுதான் மோடி ஏற்படுத்திய வெறுப்பு அரசியல். இதுவே, சோனியாவுக்கு ஆயுதமாகப் போயிற்று. அரசியல்வாதிகள், அரசியல் பேச வேண்டும். ஆனால், ராகுலோ, புத்தரை போல் அன்பு பற்றி பேசுகிறார் என்றால், மோடி எந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை வளர்த்திருக்க வேண்டும்.

வெற்றிடம்:
மோடியின் இரண்டாவது தவறு, பண மதிப்பு நீக்க நடவடிக்கை. இதனால் ஏழை, எளியவர்களும் மத்திய தர வர்க்கத்தினரும் தான், துயரம் அடைந்தனரே தவிர, கோடிக் கணக்கில், பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் யாருமே பாதிக்கப்படவில்லை. கடந்த கட்டுரையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடமிருந்து தொடங்கி, இந்த கட்டுரையில், மோடிக்கு வந்து விட்டதற்கு காரணம், இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்பதால் தான். ஆம்... சோனியாவுக்கு வேலை செய்கிறார் மோடி. அதி.மு.க.,வுக்கு வேலை செய்கிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதாவின் கடைசி நாட்களை, சசிகலா கோஷ்டி கையாண்ட விதமும், அதற்கு, அ.தி.மு.க., தலைவர்கள்; இப்போதைய முதல்வர், துணை முதல்வர் உட்பட சிலர், சத்தமே இல்லாமல் உடன்பட்டதும், மக்களிடையே, அ.தி.மு.க.,வின் மீது கடும் அதிருப்தியை உண்டாக்கி இருந்தது. அதோடு, ஜெ.,வின் மரணமும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. இந்த இரண்டையும் பயன்படுத்தி கொள்ளத் தவறிவிட்டார் ஸ்டாலின்.

வார்த்தைகள்:
தேர்தல் நெருங்கும் சமயத்தில், வாயை வைத்து சும்மா இருக்காமல், ஹிந்துக்களை புண்படுத்தியா பேச வேண்டும்? ஒரு இஸ்லாமியர் வீட்டுத் திருமணத்துக்கு போனவர், இஸ்லாம் பற்றி பாராட்டிப் பேசினால், யார் கேட்கப் போகின்றனர்... அங்கே போய், ஹிந்துக்களின் சடங்குகளைத் திட்டுகிறார்.'ஹிந்து திருமணங்களில் புகையைப் போட்டு மணமக்களை அழ வைக்கின்றனர்; புரியாத மந்திரங்களை சொல்கின்றனர். அந்த மந்திரங்களின் அர்த்தமோ கேவலமாக இருக்கிறது' - இது ஸ்டாலினின் வார்த்தைகள். இதைப் பற்றி, அடுத்த வாரம் அலசுவோம்.

-சாரு நிவேதிதா எழுத்தாளர்

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
20-மார்-201918:04:12 IST Report Abuse
Dr.C.S.Rangarajan தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் தங்களின் கட்சி நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பார்வை ஒன்றெ போதும் என்றில்லாமல் பல்லாயிரம் சொற்களால் வர்ணிப்பது ஒருபுறம். நாட்டு நல குழுமங்கள் என்ற போர்வையில் அரசியல் செய்வோர். இவர்களனைவரின் 'கண்களின் வழியாக' தமிழ்நாட்டிலிருந்து மோடியை பார்த்தால் 'அன்பை வளர்ப்பதாக' கூறும் விளம்பரப்பிரியர்கள் உட்பட வெறுப்பினைதான் உமிழ்கிறார்கள். தென்னக மாநிலங்களில், கர்நாடகம் நீங்கலாக மீண்டும் பிரதமராக போகும் மோடி அவர்களை வாழ்த்த யாருக்கு குறைகள் நிறைந்திருக்கின்றனவோ? இம்மாநிலங்களை தாண்டி மற்ற மாநிலங்களில் மோடியிடம் 'குறையொன்றுமில்லை' என மக்கள் கருதியதால் "மீண்டும் மோடி" என்ற நிலை உருவானது. வேண்டாத மோடியிடம் 'வேண்டிநிற்கத்தானே வேண்டும்' அவர் பிரதமர் ஆனபின்?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201911:45:54 IST Report Abuse
Malick Raja மோடி தேர்தலுக்கு பின் குஜராத் சென்று ஓய்வு எடுப்பது அவரின் உடைநிலைக்கு நல்லது .. ரொம்ப வேலைசெய்தால் பின்னர் மனோகர் பறீக்கருடன் செல்ல வேண்டிவரும் .. தற்கால உடல்நிலையில் மோடிக்கு ஓய்வு அவசியம் என்பதே வெளிப்படையான உண்மைதானோ ?
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
19-மார்-201920:02:30 IST Report Abuse
Sudarsanr திரு. சாறு நிவேதிதா அவர்களுக்கு, நன் மத்திய தர வர்கத்தை சேர்ந்தவன்தான்... எனக்கும் என்னை போன்ற பலருக்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை... இல்லாத ஒன்றை இருப்பது போல் கூறி மக்களை குழப்ப வேண்டாம்... அவ்வாறு செய்வது உங்களை போன்ற நல்ல எழுத்தாளருக்கு அழகல்ல... நன்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X