சங்கீத சரஸ்வதி பட்டம்மாள்! இன்று நூற்றாண்டு பிறந்த நாள்

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019
Share
Advertisement
சங்கீதத்தில் 'பாடுபட்டம்மாள்' என்று அன்பாக அழைக்கப்பட்ட பட்டம்மாளுக்கு இன்று 100 வயது. அவரின் காலம் சங்கீதத்தின் பொற்காலம். எண்பது ஆண்டு காலம் அவரின் சங்கீத உழைப்பு தான் இன்றும் அவரை நம் கண் முன் நிறுத்துகிறது.தாமல் கிருஷ்ண ஸ்வாமி பட்டம்மாள் (டி.கே.பட்டம்மாள்) 1919 மார்ச்19ல் காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் காந்திமதியம்மாள் (ராஜம்மாள்) தம்பதியினருக்கு
 சங்கீத சரஸ்வதி பட்டம்மாள்! இன்று நூற்றாண்டு பிறந்த நாள்


சங்கீதத்தில் 'பாடுபட்டம்மாள்' என்று அன்பாக அழைக்கப்பட்ட பட்டம்மாளுக்கு இன்று 100 வயது. அவரின் காலம் சங்கீதத்தின் பொற்காலம். எண்பது ஆண்டு காலம் அவரின் சங்கீத உழைப்பு தான் இன்றும் அவரை நம் கண் முன் நிறுத்துகிறது.தாமல் கிருஷ்ண ஸ்வாமி பட்டம்மாள் (டி.கே.பட்டம்மாள்) 1919 மார்ச்19ல் காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் காந்திமதியம்மாள் (ராஜம்மாள்) தம்பதியினருக்கு மகளாய் பிறந்தார்.பட்டம்மாளுக்கு இசைஞானம் என்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. அவருடைய இசை ஆர்வத்திற்கு வடிகாலாகவும் இசையுலகிற்குள் அவர் பிரவேசிப்பதற்கு திருப்பு முனையாகவும் அமைந்தது ஒரு சம்பவம். பட்டம்மாள் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் ஒரு இசை நாடகப்போட்டி நடைபெற்றது. அதில் பட்டம்மாள் பங்கெடுத்துக் கொண்டதோடு பரிசினையும் வென்றார். பட்டம்மாளின் இசைத்திறமையும் கணீரென்ற குரல் வளத்தையும் பாராட்டி, புகழ்ந்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பத்திரிகைச் செய்தியைப் படித்த கொலம்பியா ரிக்கார்டிங் கம்பெனி பட்டம்மாளின் பள்ளிக்கே சென்று அவரது குரலை கிராமபோனில் பதிவு செய்தது. இந்த கொலம்பியா
கிராமபோன் ரெகார்டு தான் பட்டம்மாளின் முதல் இசைப்பதிவு.

குருவை கண்டார்

நயினாபிள்ளை என்று அழைக்கப்பட்ட சுப்ரமணியபிள்ளை என்ற இசைமாமேதை காஞ்சிபுரத்தில் தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை மஹோத்ஸவத்தை நடத்தி வந்தார். பட்டம்மாளின் தந்தை அந்த கச்சேரிகளைக் கேட்க பட்டம்மாளை அழைத்துச் செல்வது வழக்கம். எனவே அக்காலத்தில் இசைமாமேதைகளாக விளங்கிய அரியகுடி ராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி ஸ்ரீனிவாசஐயர் போன்றவர்களின் கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்பு பட்டம்மாளுக்குக் கிட்டியது.பட்டம்மாளுக்கு நயினாபிள்ளையிடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அது நடக்காததால் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். மகளின் இசை ஆர்வத்தைக் கண்ட கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் “தெலுங்கு வாத்தியார்” என்பவரை வீட்டிற்கு வர வழைத்து மகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கச் செய்தார். அதன் பின்னர் நயினாபிள்ளையின் சிஷ்யரான நாராயணஸ்வாமி அய்யங்கார், அரியகுடி ராமானுஜ ஐயங்காரின் சீடர் வைத்தியநாதன், காஞ்சிபுரம் ஸ்ரீனிவாசன், சின்னம்மா போன்றவர்களிடம் சங்கீதம் பயின்றார்.கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர், மகள் பட்டம்மாளை சென்னையில் நடந்த ஒரு இசைத் தேர்வுக்கு அழைத்துப் போனார். முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பி வழி கொள்ளுப்பேரனான அம்பி தீட்சிதர் அந்தத் தேர்வின் நடுவர்களுள் ஒருவர். பட்டம்மாளின் இசைத்திறமையினைக் கண்டு வியந்த அவர் பட்டம்மாளுக்கு சில தீட்சிதர் க்ருதிகளைக் கற்றுக் கொடுக்க விரும்பி முன் வந்தார். ஆனால் பட்டம்மாளின் தந்தையாரால் 15 நாட்களுக்கு மேல் அங்கே தங்கியிருக்க இயலவில்லை. ஆனால் இந்த 15 நாட்களுக்குள்ளேயே பட்டம்மாள் அம்பி தீட்சிதரிடமிருந்து மட்டுமல்லாமல் அவருடைய சிஷ்யரான வெங்கடராமய்யரிடமிருந்தும் முக்கியமான சில தீட்சிதர் க்ருதிகளை அவர்கள் பாணியிலேயே அழகாகக் கற்றுக் கொண்டார். பின்னர் இசைக்காகவே, பட்டம்மாளின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.சென்னைக்குச் சென்றபின் பட்டம்மாளின் இசைப்பயிற்சியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சென்னை ரசிக ரஞ்சன சபாவில் 13 வது வயதில் முதல் மேடை கச்சேரியை நிகழ்த்தினார் பட்டம்மாள்.


இசைவாழ்க்கைபட்டம்மாளுக்கு கணீரென்ற குரலும் தெளிவான உச்சரிப்பும் இயற்கையாகவே அமைந்தது. இந்த சிறப்பம்சம் முத்துஸ்வாமி தீட்சிதரின் க்ருதிகளைப் பாடுவதில் அவருக்குப் பேருதவியாக இருந்தது. அவர் பாடுவதைக் கேட்டே நாம் அந்த க்ருதியை கற்றுக் கொண்டுவிடலாம். கற்றுக் கொள்ளும் நமக்கு, கையில் புத்தகம் அவசியம் இல்லை என்ற அளவிற்கு அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு அவரது பாட்டில் இருக்கும்.லய ஞானம் என்பது தெய்வாதினமாக பட்டம்மாளின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது என்று கூறலாம். இந்த லய ஞானம்தான் பட்டம்மாளை மனோதர்ம ஸங்கீதத்தின் உச்சநிலை என்று கருதப்படும் ராகம் - தானம் - பல்லவி பாட தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. ராகம் தானம் பல்லவியை முதன் முதலில் மேடையில் பாடியபோது விமர்சனங்கள் எழுந்தன. அந்த காலத்தில் ஆண்கள்தான் ராகம் தானம் பல்லவி பாடுவதற்கு தகுதிபடைத்தவர்கள். அதற்கான மூச்சுப்பிடித்துப் பாடும் சக்தியும் கம்பீரமான குரல்வளமும் ஆண்களுக்குத்தான் உண்டு என்ற கருத்து இசையுலகில் இருந்தது. அந்த எண்ணத்தை முறியடித்து ஒரு பெண் பாடகரும், ராகம் தானம் பல்லவி பாடமுடியும், லயசம்பந்தமான நுணுக்கங்களை திறமையாக கையாளமுடியும் என்று நிரூபித்தவர் பட்டம்மாள்.நயினாபிள்ளை வடிவமைத்த “நெஞ்சே நினை அன்பே” என்ற ஜகன்மோஹினி ராகப் பல்லவிதான் பட்டம்மாள் பாடிய முதல் ராகம் தானம் பல்லவி. அது கூட அவர் நயினாபிள்ளை. மேடைக்கச்சேரிகளில் பாடியதைக் கேட்டு அதை நினைவில் வைத்துக் கொண்டு தாமே சாதகம் செய்து பாடியதுதான். பல்லவி நிபுணராண நயினாபிள்ளையின் பல பல்லவி கச்சேரிகளைக் கேட்டதன் பயனாக பல்லவி பாடுவது மட்டுமல்லாமல் வடிவமைக்கும் திறமையும் அவருக்கு இருந்தது. பாபநாசம் சிவன் பாடல்களை அவரிடமே நேரிடையாகக் கற்கும் பேறு பெற்றவர் பட்டம்மாள். அதுபோல் திருப்புகழை அப்பாதுரை ஆசாரி என்பவரிடம் நேரிடையாகக் கற்றார்.


திரைஇசை பாடல்கள்பாபநாசம் சிவனால் “தியாகபூமி” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் “நாம் இருவர்” என்ற படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த படங்களைத் தொடர்ந்து பட்டம்மாளுக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் குவிந்தபோதிலும் அவர் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. சினிமாவில் விடுதலை போராட்ட பாடல்கள் இடம் பெறும் படங்களில் மட்டும் பாடுவதற்கு சம்மதம் தெரிவித்த பட்டம்மாள் திரைப்படங்களில் காதல் பாட்டுகள் பாடுவதை அறவே மறுத்து விட்டார்.தியாக பூமி படத்தின் இறுதியில் பட்டம்மாள் பாடிய “தேச சேவை செய்ய வாரீர்” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க விடுதலை இயக்க வீரர்கள் நமது தேசிய கொடியை ஏந்திக் கொண்டு செல்வது போல் காட்சி இடம் பெறும். இந்த பாடலை இயற்றியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இசையமைத்தவர் பாபநாசம் சிவன். “நாம் இருவர்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “வெற்றி எட்டுத்திக்கும்” “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்ற பாரதியாரின் விடுதலைப் பாடல்கள் இவர் பாடியதில் பிரபலமானவை. இன்னும் நிறைய பாடல்கள் பாடிய பட்டம்மாள், இந்திய அரசின் பத்ம பூஷன் (1971), பத்ம விபூஷண் (1998) பட்டங்கள் பெற்றவர்.அந்த 'சங்கீத சரஸ்வதி' 2009 ஜுலை 16ல் சங்கீத உலகினை விட்டு மறைந்தாலும், இன்னும் அவர் பாடல்கள், அவர் பெருமையை பாடிக்கொண்டு இருக்கின்றன.-முனைவர் க.தியாகராஜன்இணைப் பேராசிரியர்ஸ்ரீசத்குரு ஸங்கீத வித்யாலயம்மதுரை. 98430 76582

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X