வாக்காளர் வீடு தேடி வந்து சேரும் ஐநுாறு: மொத்த ஓட்டையும் அள்ளும் திட்டம் விறுவிறு| Dinamalar

வாக்காளர் வீடு தேடி வந்து சேரும் ஐநுாறு: மொத்த ஓட்டையும் அள்ளும் திட்டம் 'விறுவிறு'

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019
Share
வாக்காளர் வீடு தேடி வந்து சேரும் ஐநுாறு: மொத்த ஓட்டையும் அள்ளும் திட்டம் 'விறுவிறு'


பேங்க் கணக்குல சீக்கிரமே வந்து சேரும் ஐநுாறு மொத்த ஓட்டையும் அள்ள திட்டம் 'விறுவிறு''டிவி' பார்த்துக் கொண்டிருந்த சித்ராவின் போன் சிணுங்கியது. மறுமுனையில் பேசிய மித்ரா, ''உடனே கிளம்பி ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டுக்கு வா. பொள்ளாச்சி மேட்டரை கண்டிச்சு, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், பப்ளிக்லாம் சேர்ந்து இங்க ஒரு பேரணி அரேஞ்ச் பண்ணியிருக்காங்க,'' என்றாள்.
''அதை விட என்ன வேலை...இதோ வந்துட்டேன்,'' என்று கூறி போனை 'கட்' செய்து விட்டு, ஜீன்ஸ் - டாப்ஸ் சகிதம் கிளம்பினாள் சித்ரா.ஏற்கனவே நகரத் துவங்கியிருந்த பேரணி, கலெக்டர் ஆபிஸ் பக்கம் சென்று கொண்டிருந்தது. ஸ்கூட்டரை சேரன் டவர்ஸ் வாசலில் நிறுத்தி விட்டு, மித்ராவுடன் இணைந்து கொண்டாள் சித்ரா.

''சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிச்சதுல, பொள்ளாச்சி திருநாவுக்கரசு நிறைய 'பகீர்' மேட்டர்லாம் சொல்லியிருக்கானாம். அதனால, இந்த கேசை ஆரம்பத்துல விசாரிச்ச போலீஸ்காரங்க நடுங்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அப்புறம்...எலெக்ஷன்லாம் எப்படி போயிட்டிருக்கு?''''கேரளாவுல எதிரும், புதிருமா முறைச்சிக்கிட்டிருக்கற காங்.,- கம்யூ., நம்மூர்ல இந்த தடவை கைகோர்க்க வேண்டியதா போச்சு கவனிச்சியா...,'' என்றாள் சித்ரா.

''ஆமாமா...கூட்டணியில தொகுதியை கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கினாலும், தீவிரமா வேலை செஞ்சு அவங்களை ஜெயிக்க வைக்கணும்னு, காங்., மேலிடம் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்காம்,'' என்றாள் மித்ரா.

''தேர்தல் நடக்குறதை சாதகமாக்கி, நொய்யலாற்றில் செம்மேடு, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், மாதம்பட்டி ஏரியாகள்ல, மறுபடியும் மணல் திருட்டு துவங்கியிருக்காம்,'' என்றாள் சித்ரா.
''ஓகோ''
''வருவாய்த்துறை, போலீஸ்காரங்கள்லாம், எலெக்ஷன் டூட்டியில இருக்கறதால, மணல் கொள்ளைக்காரங்க ராத்திரி 12:00 மணியில இருந்து, அதிகாலை 3:00 மணிக்குள்ளே மணல் திருட்டுல புகுந்து விளையாடுறாங்க. இதுக்கு உள்ளூர் கட்சிக்காரங்க சிலபேரும் சப்போர்ட்டா இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

இதனிடையே பேரணி, கலெக்டர் அலுவலகத்தை அடைந்திருந்தது. பங்கேற்றவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளியே காத்திருக்க, முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு, திரும்பி வந்தனர். பேரணி மீண்டும் கல்லுாரியை நோக்கி புறப்பட்டது.

''எலக்ஷன் நேரத்துல வங்கி கணக்குல ரெண்டாயிரமும், தலைக்கு, ஐநுாறும் கொடுக்கப் போறாங்களாமே...'' என்று கேட்டாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கிறவங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்குறதுக்காக, ஏற்கனவே 'அப்ளிகேஷன்' வாங்கியிருக்காங்க. பொங்கல் காசு ரூ.1,000 வாங்குன ஆசையில, ஏகப்பட்ட பேரு, 'அப்ளிகேஷன்' குடுத்திருக்காங்க. நம்மூர்ல மட்டும், 2.40 லட்சம் 'அப்ளிகேஷன்' வந்துருக்காம். எதையுமே 'ரிஜக்ட்' பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்காங்களாம்,'' என்றாள்.

''எலக்ஷன் நெருங்குற நேரத்துல, வங்கி கணக்குல, தொகை வந்துரும்னு சொல்றாங்க. அப்புறம், தலைக்கு, ஐநுாறு கொடுக்குறதுக்கும், திட்டம் போட்டு இருக்காங்களாம். இப்படி, கரன்சிய கொட்டி, ஓட்டுகள அள்ளலாம்னு, கணக்குப் போட்டுருக்காங்க...''

அதற்கு மித்ரா,''ஆனா, தொகுதி, பி.ஜே.பி.,க்கு போயிருச்சே...''''பி.ஜே.பி.,யோ, கம்யூ., கட்சியோ, கூட்டணி கட்சிங்க தயவில்லாம, ஜெயிக்க முடியாது,'' என்றாள் சித்ரா.
அப்போது பாரதியார் பல்கலைக்கு சொந்தமான பஸ், பேரணியை கடந்து சென்றது. அதை பார்த்த சித்ரா, ''இந்த யுனிவர்சிட்டியில பதிவாளருக்கான கூடுதல் பொறுப்பை கவனிச்சுட்டிருந்த பெண் அதிகாரி, ராஜினாமா பண்ணலையாம்; கட்டாயமா எழுதி வாங்கினாங்களாம்,'' என்றாள்.
''அப்படியா....புதுசா வந்திருக்கறவர் எப்படியாம்''
''அவருக்கு பதிலா, திருவள்ளுவர் யுனிவர்சிட்டியில வி.சி.,யா இருந்தவரு வந்துருக்காரு. இவரு, அவரோட பதவிக்காலத்துல, உயர்கல்வி செயலர் கூட கொடுக்கல், வாங்கல்ல சுமூகமா இருந்ததால, இவர்கிட்ட கூடுதல் பொறுப்பை குடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''அப்ப அடுத்ததா புது வி.சி., பதிவாளர்னு, முக்கிய போஸ்ட்டிங் போடும்போது, நல்லா 'உதவியா' இருப்பார்னு சொல்லு,'' என்று கூறி கண்ணடித்தாள் மித்ரா.

''ஸ்டூடண்ட்ஸ் நிலையை நினைச்சாதான் கஷ்டமாயிருக்கு,'' என்றாள் சித்ரா.

''பஸ்சுக்காக நின்னுட்டு இருந்த, ரெண்டு கேர்ள் ஸ்டூடண்ட்சை, போலீஸ்காரங்க அரெஸ்ட் பண்ணி, மண்டபத்துல அடைச்ச கூத்து தெரியுமா...,'' என்று கேட்டாள் மித்ரா.

''அட பரிதாபமே...இது எப்ப?''

''ரேஸ்கோர்ஸ் பகுதியில போராட்டம் நடத்த முயற்சி செஞ்சதா சொல்லி, முந்தாநாள் 25 காலேஜ் பொண்ணுங்க உட்பட, 34 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் அரெஸ்ட் பண்ணி, லட்சுமி மில்ஸ் பக்கத்துல இருக்கற, ஒரு கல்யாண மண்டபத்துல தங்க வைச்சாங்க...ராத்திரி 8:00 மணிக்குதான் விடுதலை பண்ணுனாங்க,''

''ம்ம்ம்...அப்புறம்?'' ஆர்வமானாள் சித்ரா.

''இதுல ரெண்டு பொண்ணுங்க, சும்மா பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவங்களாம். ஒருவழியா ராத்திரி அழுதுக்கிட்டே ரெண்டு பொண்ணுங்களும், வெளியே வந்திருக்காங்க...

இந்த போராட்ட முயற்சியில ஈடுபட்ட அமைப்போட பெயர் கூட, இவங்களுக்கு தெரியாததுதான் 'ஹைலைட்'...' என்று சிரித்தாள் மித்ரா.இதற்குள் பேரணி மீண்டும் அரசு கல்லுாரியை வந்தடைந்திருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X