அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரைத்த மாவா தி.மு.க., தேர்தல் அறிக்கை?

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (62)
Advertisement
அரைத்த மாவா தி.மு.க., தேர்தல் அறிக்கை?

சென்னை: ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வளவு விளையாட்டுத்தனமாக தயார் செய்யப்பட்டதை தமிழ்நாடு பார்த்ததே இல்லை.
அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஜாலி மூடில் இருந்திருப்பார்கள் போல. அதனால்தான் இத்தனை மொக்கையாக ஒரு அறிக்கையை தயாரித்து இருக்கிறார்கள்.தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழப்பட்ட திமுகவின் தே.அறிக்கைக்கு இந்த கதியா என்றுதான் வருத்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு வாக்குறுதியாக பார்ப்போமா?
01. தமிழை இணை ஆட்சி மொழியாக்க சட்ட திருத்தம் செய்யப்படும்.
* பத்து வருடமாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்த திமுக அமைச்சர்கள் இதற்காக பத்து துரும்புகளை தூக்கி போட்டிருப்பார்களா? வெற்று வாக்குறுதி. மளிகை சீட்டு எழுதும்போது முதல் அயிட்டம் மஞ்சளாக இருக்க வேண்டும் என்ற மரபு மாதிரி, தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதி தமிழ் சம்பந்தப்பட்டதாக இருக்க செய்த ஏற்பாடு.

02. வேளாண்மை துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* கொள்முதல் விலை போதாமல், இயற்கை சீற்றம் ஏற்படுத்திய அழிவால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகங்கள் நாட்டு மக்களை உலுக்கியபோது, என்ன செய்து கொண்டிருந்தனர் திமுக மத்திய அமைச்சர்கள்? அப்போது ஏதேனும் அனுதாபமாவது தெரிவித்து இருந்தால் மேற்கோள் காட்டிவிட்டு இந்த வாக்குறுதியை வாசிக்கட்டும்.

03. மத்திய அரசு வருமானத்தில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு தர வேண்டும்.

* மாநில கட்சிகளின் பழைய கோரிக்கை. அவ்வப்போது நேரும் நெருக்கடிகளை சமாளிக்க மத்திய அரசின் உதவியை நாட மாட்டோம் என்று மாநிலங்கள் உறுதி அளித்தால், மாநிலங்களில் நிறைவேற்றப்படும் அனைத்து மத்திய திட்டங்களுக்கான செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முன்வந்தால், நிதி பங்கீடை அதிகரிப்பது குறித்து விவாதிக்கலாம் என வெவ்வேறு மத்திய ஆட்சிகள் முன்னரே தெரிவித்துள்ளன.

04. மத்திய நிதிக்குழுவின் பணிகள் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.

* அத்தகைய மன்றத்தால் நிதி நிர்வாகத்தில் எந்த ஒழுங்கையும் நிலைநாட்ட முடியவில்லை என்ற சூழல் ஏற்பட்டதன் விளைவுதான் மாற்று ஏற்பாட்டுக்கே காரணம். பொறுப்பில்லாத மாநிலங்களின் நிதி நிர்வாகத் தவறுகளால் நேரக்கூடிய இழப்புகளை சரிக்கட்ட வழி தெரியாமல், நாட்டின் ஒட்டுமொத்த நிதி மேலாண்மையை சீர்குலைத்து விடும் என்பதால், எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை.

05. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

* ஓட்டு வங்கியை குறிவைத்து கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி. ஆனால், கால மாற்றத்துக்கு பொருந்தாத அணுகுமுறை. அதிகமான ஊதியம், படிகள், சலுகைகள், பணிப் பாதுகாப்பு, காப்பீடு என்ற தாராள நடவடிக்கையால் அரசு ஊழியர் மற்றும் அரசு ஊழியர் அல்லாதோர் என்கிற இரு பிரிவுகளாக பொது சமூகத்தை தரம் பிரிக்கும் ஆபத்தான சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவது மேலும் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

06. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்படும்.

* நியாயமான கருத்து. பத்தாயிரம் என்பது இன்னும் வரவேற்கப்படும்.

07. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.

* இன்றைக்கும் பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக பொருளாதார வல்லுனர்களோடு ஒவ்வொரு நிதியமைச்சரும் ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார வல்லுனர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் விவாதிக்கின்றனர். இது தவிர அதிகாரம் கொண்ட வல்லுனர் குழுவை அமைப்பதால் கருத்து மோதல்கள் உருவாகி, திட்டமிடுதல் தாமதத்துக்கு வழி திறக்குமே தவிர, பெரிய பலன்கள் கிட்ட வாய்ப்பில்லை.

08. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689 ல் இருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சபாஷ். ஆனால், எப்படி செய்வீர்கள்? 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் தனி நபர் சராசரி வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது என்பது மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியம். அதற்கான வழிமுறை இதுதான் என்று வரைந்து காட்டி உறுதி செய்தால் ஒரு தமிழருக்கு பொருளாதார நோபல் நிச்சயம்.

09. பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மீண்டும் பழைய முறைப்படி நிர்ணயம் செய்வோம்.

* அன்றாடம் செய்தித்தாள் பார்த்து விலையை தெரிந்து கொள்ள அவசியம் இருக்காது என்பதை தவிர எந்த பலனும் கிடையாது.

10. கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல், முன்போல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
* முந்தைய திட்டத்தில் முறைகேடுகள் பெருமளவில் நடப்பதாக புகார்கள் வந்து, விசாரணையில் அவை ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அதன் பிறகு முறைகேடுகளை தடுப்பதற்காக கொண்டு வந்ததுதான் மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் ஏற்பாடு. இதில் தவறுகள் நடப்பதாக தகவல் இல்லாத நிலையில், மீண்டும் முறைகேடு நடக்க வழி வகுக்கும் இந்த வாக்குறுதி.

11. குறைந்தபட்ச தொகை வைக்காதவர்களிடம் வங்கிகள் வசூலித்த அபராதத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுப்போம்.

* நடுத்தர வர்க்கத்தின் கைதட்டலை பெற்றுத் தரும் வாக்குறுதி.

12. வருமான வரி வரம்பு 5 ல் இருந்து 8 லட்சம் ஆக்கப்படும். பென்சனுக்கு முழு வரி விலக்கு தரப்படும்.

* படிப்படியாக இந்த இலக்குகளை நோக்கிதான் மோடி அரசும் நகர்ந்து கொண்டிருந்தது. திமுக, காங். கூட்டணி அரசு அமையாவிட்டாலும், அடுத்த நிதியமைச்சரால் நிறைவேறப் போகும் வாக்குறுதிதான். கற்பனை வளத்துக்கு இடமில்லை.

13. ஜி.எஸ்.டி அதிகபட்சம் 28 சதவீதமாக இருப்பதை மாற்றி அமைப்போம்.

* எத்தனை சதவீதமாக என்பதை பகிரங்கமாக சொல்லியிருக்க வேண்டும். 12 சதவீதம் என்று கூட்டணிக் கட்சி காங்கிரஸ் சொல்வதை திமுக ஏற்கிறதா என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். தெளிவு இல்லாத வாக்குறுதி.

14. அனைத்து பயிர்க் கடன்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

* வங்கிகளுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட என்ன வழி என்பதை சொல்லி இருந்தால் வாக்குறுதியை நம்பலாம். கடன் என்பது திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளித்து அந்த நம்பிக்கையின் பேரில் பெறும் தொகை. வட்டியை ரத்து செய்வது, அசலை செலுத்த அவகாசம் தருவது ஆகியவை வேறு. கடனையே ரத்து செய்வது மேற்கொண்டு கடன் கிடைக்காமல் போவதில்தான் முடியும்.

15. முல்லை பெரியாறு. காவிரியில் அணைகள் கட்டுவது தடுக்கப்படும்.

* பேச்சால், சட்டத்தால், கோர்ட்டால் முடியாததை எப்படி சாதிப்போம் என்று சொல்லியிருக்கலாம். வெற்று வாக்குறுதி.

16. தென் இந்திய நதிகளை இணைப்போம்.

* பத்தாண்டு ஐ.மு ஆட்சியில் வட இந்திய நதிகளை இணைத்த மாதிரியா?

17. மத்திய பட்டியலில் உள்ள கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.

* இதற்கு தேவையான நாடாளுமன்ற ஆதரவு இப்போதைக்கு யாருக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

18. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* முந்தைய கேள்விக்கு சொன்னதைவிட அதிக ஆதரவு, அதிக பலம் நாடாளுமன்றத்தில் தேவைப்படும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி அரசு அமல்படுத்திய வழிமுறையை அத்தனை சுலபமாக கைவிட முடியாது. கடிகார முள்ளை பின்னால் தள்ளும் முயற்சி.

19. மாணவர்களின் கல்விக் கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

* சான்சே இல்லை. அறிவாலயத்தில் இருந்து வங்கிகளுக்கு மொத்த தொகை செட்டில் செய்தால் சாத்தியமாகலாம். வீணாக மாணவர்கள் மனதில் தவறான சிந்தனைகளை விதைக்கும் முயற்சி.

20. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 1 கோடி இளைஞர்கள் நியமனம்.

* சாலைப் பணியாளர் திட்டம் என்ற பெயரில் கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுத்த அனுபவத்தில் உதித்த யோசனை போலும். திமுக ஆட்சியில் அவர்களை நியமிப்பதும், ஜெயலலிதா வந்ததும் நீக்குவதுமாக எத்தனை முறை நாடகம் பார்த்திருக்கிறது தமிழகம். தேசிய நெடுஞ்சாலை என்பது பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. புது சாலைகளின் பராமரிப்பும் ஒப்பந்ததாரரின் பொறுப்பு என்கிற நிலையில், ஒரு கோடி நியமனம் எவ்வாறு சாத்தியம்? என்ன அடிப்படையில் உருவானது இந்த எண்ணிக்கை?

21. தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பிரச்னைகள் எழுந்து கோர்ட்டில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தனியார் நிறுவனங்களில் எப்படி திணிக்க முடியும்? குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட தொழிலாலர் நல சட்டங்களையே இன்னமும் முழுமையாக செயல்படுத்த மத்திய மாநில அரசுகளால் இயலவில்லை என்பதுதான் எதார்த்தம்.

22. மக்கள் நல பணியாளர்களாக 50 லட்சம் பெண்கள் நியமனம்.

23. கிராம பெண்கள் தொழில் தொடங்க 50,000 வட்டி இல்லா கடன்.

24. 1964 ஒப்பந்தப்படி இந்தியா வந்த இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை.

25. சாலை சுங்கவரி வசூல் உரிமம் முடிந்திருந்தால், கட்டணம் ரத்து.

* மேற்காணும் நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருந்தால், இனி ஆட்சிக்கு வந்து செய்வார்கள் என்று கொஞ்சம் நம்பலாம். பச்சையாக தெரிகிறது போலி வாக்குறுதிகள் என்பது.

26. மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ்.

* ஓட்டல்களில் இலவச சாப்பாடு என்றும் சொல்லி இருக்கலாம். அசாத்திய வாக்குறுதிகளில் இன்னொன்று.

27. மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில்.

* எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப் போகிறது. ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்கள்.

28. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்.

* வரவேற்போம்.

29. இயற்கை சீற்ற நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் அரை சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.

* முதல்வர் நிவாரண நிதி எதற்காக இருக்கிறதாம்?

30. கடலோர மக்களை புயலில் இருந்து காப்பாற்ற சட்டம்.

* புயலுக்கு தடை விதிப்பது புதுமையான முயற்சி. வாழ்த்துவோம்.

31. கம்பெனிகள் ரூ.10,000 சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை.

* முன் உதாரணமாக அரசு 5 கோடி பேருக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை கொடுத்தால், இதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதையும் மக்கள் நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு அபாரம்.

32. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்

* தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கிறது. ஒரு ட்ரையல் பார்க்கலாமே. நடக்குமா இது. காங்கிரஸ் ஏற்குமா.

33. காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

* காசா பணமா, அறிவிப்புதானே.. தாராளமாக செய்யட்டும்.

34. மீதேன், நியுட்ரினோ திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்.

* அதென்ன வலியுறுத்தல்? அவை நல்ல திட்டங்கள் இல்லை என்றால், கைவிட வேண்டியது தானே. அப்படியே சொல்ல என்ன தயக்கம்?

35. ஊரக வேலை திட்டத்தில் வேலை நாள் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
* பரந்த அளவில் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாகிறது என்ற ஆய்வுகளை பரிசீலனைக்கே எடுக்காமல், வேலை நாட்களை மட்டும் நீட்டிப்பது எதிர்பாராத சமூக, பொருளாதார சேதங்களுக்கு அடித்தளம் அமைக்கக்கூடும். அப்படி இல்லை என்றால், முன்பே செய்திருக்கலாமே.

36. மத்திய மாநில அரசுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

* தேவைக்கு அதிகமாக அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அடுத்தடுத்த அரசு நிர்வாக சீர்திருத்த குழுக்கள் மற்றும் ஊதிய நிர்ணய குழுக்களின் கண்டுபிடிப்பு. ஊழியர் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்ற நிபுணர்கள் பரிந்துரைக்கு முற்றிலும் முரணான வாக்குறுதி. நடைமுறை சாத்தியங்கள் மிகவும் குறைவு.

37. சேது சமுத்திர திட்டம் மீண்டும் தொடரப்படும்.

* கோர்ட்டில் உள்ள வழக்குகள் முடியாமல் எதுவும் செய்ய முடியாது. தெரிந்தே வீசும் நோ பால்.

38. மத நல்லுறவை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* முஸ்லிம் திருமணத்தில் இந்து சடங்குகளை கேலி செய்வது, கோயில் வாசலில் நெற்றி விபூதியை அழிப்பது.. என்று திமுக தலைமைக்கு தெரிந்த சகல வித்தைகளும் மத நல்லுறவை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.

39. இதுவரை 27 ஆண்டுகளை சிறையில் கழித்த ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.

* அந்த 27 ல் எத்தனை ஆண்டுகள் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக அதிகாரத்தில் இருந்தது? அப்போது ஏன் விடுதலை நடக்கவில்லை?

40. கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்.

* முகேஷ் அம்பானி புண்ணியத்தில் வீடுகளில் டீவியை ஆன் செய்வதே குறைந்துவிட்டது. கட்டணத்தை குறைத்து டிவியை காப்பாற்றலாம்.

41. மனித கடத்தலை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

* அடடா.. இப்போது அப்படி சட்டமே இல்லையா.. சரி சரி.

42. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுப்ரீம் கோர்ட்டே சொன்ன பிறகு அரசு செய்துதானே ஆக வேண்டும்.

43. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* நீண்ட இடைவெளிக்கு பிறகு காஞ்சிபுரம் ஞாபகம் வருகிறதோ?

-அழகிய நம்பி-

Advertisement


வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-மார்-201903:00:28 IST Report Abuse
meenakshisundaram அட கிறுக்கங்களா?வருமான வரி யை திருத்துவங்களாம் பென்ஷனுக்கு வரி கிடையாதாம் எங்கே செய்வீங்க?ஜப்பான் நாட்டிலா? சட்ட சபைக்குள்ளே நீ போறதே சன்தேகம் .இதுலே பார்லிமென்ட் லெவெல்லே பேசுறியே,அப்படியே ராணுவத்தில் தமிழனை சேர்ப்போம்னும் பீலா விடலாமே?
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
20-மார்-201916:44:14 IST Report Abuse
Dr.C.S.Rangarajan திமுக அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் இருந்த காலத்தில் ( காமராஜ் அவர்களின் காலத்தில்) பேசிய வீர வசனம்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி, கடல் பாசியிலிருந்து ஆல்வா செய்வோம்". நிறைவேறா, நிறைவேற்றமுடியா ஆசைகள்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-மார்-201916:28:19 IST Report Abuse
Natarajan Ramanathan திமுகவின் அழிவில் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றமே இருக்கிறது. This is the only fact.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X