புதுடில்லி : காங்.,கில் ஜனநாயகம் கிடையாது. காங்., ஓட்டு வங்கி அரசியலையும், வாரிசு அரசியலையும் முன்னிலைப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தனது புதிய வலைதள பக்கத்தில் (www.narendramodi.in) எழுதி உள்ள கட்டுரையில் காங்., மற்றும் ராகுல் குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர், 2014 ல் வாரிசு அரசியலுக்கு எதிராக நேர்மை, வளர்ச்சி, பாதுகாப்பு, ஓட்டுவங்கி அரசியலுக்கு மாற்றாக மக்கள் ஓட்டளித்தனர். அதன் விளவைாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2014 ல் வாரிசு அரசியல் இல்லாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஒரு குடும்பத்தை முன்னிலை படுத்தியதற்கு பதில் இந்தியாவை முன்னிலைப்படுத்தி அரசு பணிகள் நடந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

முந்தைய காங்., ஆட்சியில் அனைத்து அரசு இயந்திரங்களும் சிதைக்கப்பட்டது. பாதுகாப்பு துறையை வருமானம் ஈட்டும் துறையாக மட்டுமே காங்., பார்த்து வந்தது. ஒவ்வொரு இடைத்தரகருக்கும் ஒரு குடும்பத்துடன் தொடர்பு உள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கூட காங்., கேள்வி கேட்கிறது. காங்.,ன் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. காங்., கட்சியின் தலைமையே பெரிய ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளது. அவர்களை பொருத்தவரை காங்., மட்டும் தான் சரி. மற்ற அனைவரும் தவறானவர்கள். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE