மந்திரக்கோலை பயன்படுத்துங்கள்!
இந்த கோடையில், வழக்கத்தை விட அதிகமாக அனல் பறக்கிறது. காரணம், அதிகரித்துள்ள வெப்பம் மட்டுமல்ல... ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்போது வந்து
உள்ள, லோக்சபா தேர்தல் திருவிழாவும் தான்.நாட்டின் கடைக்கோடியில் உள்ள எளிய மனிதனுக்கும், ஓட்டு எனும் மந்திரச்சீட்டு அல்லது மாயப் பொத்தான், இதனால் வழங்கப்பட்டுள்ளது.
அதை எந்த அளவுக்கு பக்குவமாக பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு தான், நாட்டின், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தலையெழுத்து அமையும்.நுாற்றுக்கணக்கான சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்த தேசம், இந்தியா எனும் இழையில் பின்னியிருப்பதும், நம் கண் எதிரே எத்தனையோ நாடுகள் பிரிவதும், உடைவதுமாக இருக்கும் போது, நம் நாடு மட்டும் இணைந்தே இருப்பதற்கும் காரணம், ஜனநாயகம்; அதன்
அடித்தளம் ஓட்டுரிமை!சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில், எத்தனையோ தேர்தல்கள் வந்து போயின. இதோ இன்னும் சில நாட்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது.
முப்பது கோடி முகமாக இருந்த பாரத அன்னை, 130 கோடியை நெருங்கியிருக்கிறாள். நாடு எல்லா துறையிலும் மாறுதல்களை கண்டது போல, தேர்தல் முறைகளிலும் பல
மாற்றங்கள் வந்துள்ளன.நான் சிறுமியாக இருந்த போது, நடந்த தேர்தலை, இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...இப்போது போல, மொபைல் போன், 'டிவி' இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத காலம் அது. தேர்தல் அறிவிப்பு வந்ததுமே, இரண்டு, மூன்று மாதங்கள்,
மக்களுக்கு எளிதாக பொழுது போய் விடும்.
ஏனென்றால், காலையிலிருந்து நள்ளிரவு வரை, ஏதாவது ஒரு வேட்பாளர் அல்லது அவர் சார்பாக, யாராவது ஓட்டு கேட்டு வந்து கொண்டே இருப்பர்; அதனால், ஊரே கலகலப்பாக இருக்கும். காலையில் எழுந்துப் பார்த்தால், நம் வீட்டு சுவற்றில், கட்சியின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும்.
நமக்கு ஆதரவான கட்சியின் தேர்தல் சின்னங்கள் வரையப்பட்டு இருந்தால், விட்டு விடுவோம்; பிடிக்காத கட்சி என்றால், சத்தம் போட்டு, ஊரையே கூட்டி, களேபரம் செய்து விடுவோம்.அந்த கட்சியை சேர்ந்த நபர்கள் வந்து, 'அண்ணே... நம்ம பையங்க தான் வரைஞ்சுட்டாங்க; விட்டுருங்க...' என்றால், கோபம் எங்கோ போய் விடும். 'சரிய்யா... கேட்டுட்டு வரையச் சொல்லு...' என சொல்லி, தணிந்து விடுவோம்.வீடுகளின் உள்ளே இருப்பவர்கள், எந்த கட்சிக்கு ஆதரவானவர்கள் என்பது, அந்த வீட்டு பெண்கள், வாசலில் வரையும் கோலத்தில் தெரிந்து கொள்ளலாம். அதுபோல, கட்சிகளின் தீவிர அனுதாபிகளாக இருப்பவர்களின் வீடுகளில், 'சிம்பாலிக்காக' சில அம்சங்கள் இருக்கும். அதைப் பார்த்து, பிற கட்சியினர், அந்த வீடுகளுக்கு சென்று, ஓட்டு கேட்க மாட்டர்.
தேர்தல் பிரசாரம் செய்வதற்கான காலக்கெடு எதுவும் இல்லாத அந்த காலத்தில், இரவு, 8:00 மணிக்கு வருவதாக சொன்ன தலைவர், மறுநாள் விடியற்காலை, 4:00 மணிக்கு தான் வருவார். அது வரை, மேடைக்கு கீழே, நம் சொந்த பந்தங்கள் காத்து கிடக்கும். அந்த தலைவர் வந்து, பேசிப் போனதை, நம் உறவுகள் கேட்டு புல்லரித்துப் போவர்.
அப்போதெல்லாம், இரண்டே ஊடகங்கள் தான். ஒன்று, செய்தித்தாள்; மற்றொன்று, 'ரேடியோ!' இப்போது போல, 'பிரேக்கிங்' செய்திகள் எல்லாம் அப்போது கிடையாது. அதுபோல, காலையில் ஒன்றை சொல்லும் அரசியல் தலைவர், மாலையில் மாற்றிக் கொள்வதும் அப்போது கிடையாது.
ஒரு தலைவர், ஒன்றைச் சொன்னால், அதை பெரும்பாலும் மாற்றவே மாட்டார். சொன்னதை மாற்றிச் சொல்லி விட்டார் என்றால், அதுவே அவருக்கு எதிராக அமைந்து, அவரை தோற்கடித்தும் விடுவர், மக்கள்!
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், வானொலி தான் அறிவிக்கும். அதுவும், நான்கைந்து மணி நேரத்திற்கு ஒரு முறை தான். அதுவரை பொறுமையாக காத்திருப்பர்,
நம் வாக்காளர்.
மாலை, 5:00 மணிக்கு செய்தி அறிக்கை வெளியாகிறது என்றால், 4:30க்கே வானொலி முன் ஏராளமானோர் குவிந்திருப்பர். மின்சாரத்தால் இயங்கும் அப்பெட்டியை விட, பேட்டரியால் இயங்கும் வானொலிகளுக்கு மதிப்பு அதிகம்.தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாளில், அப்பெட்டியில் காதுகளை ஒட்டி வைத்திருப்பர். அதில் வரும் தகவலுக்கு ஏற்ப, வெளிப்படுத்தும் உற்சாக குரலுக்கு ஏற்ப, கூடியிருப்பவர்கள், தேர்தல் முடிவை சற்று தோராயமாக அறிந்து கொள்வர்.மொத்தமாக இல்லாமல், செய்தித் தாள்கள் பக்கம், பக்கமாக பிரிந்து கிடக்கும் உள்ளூர் தேனீர் கடைகளே, அரசியல் விவாத களம்.
டீ கடைகளுக்கு சென்று டீ குடிப்பவர்களை விட, நாளிதழ்களை படிப்பதற்காகவே பலர் செல்வர். காலை, 7:00 மணிக்கு வரும் செய்தித் தாள்களுக்கு, இரவு, 8:00 மணி வரை கிராக்கி இருக்கும்.ஒரு நாளிதழின், பக்கங்கள் பலவற்றை, பலர் தனித்தனியாக படிப்பதையும், ஒரே பக்கத்தை, இரண்டு, மூன்று பேர் உன்னிப்பாக படிப்பதையும் காண முடியும்.அதுபோல, அரசியலை அலச, டீ கடைகள், தளமாக இருந்த போதிலும், 'தயவுசெய்து அரசியல் பேசாதீர்' என்ற அறிவிப்பும் அங்கே இருக்கும். எனினும், அங்கு அரசியல் தான், அக்கு வேறு ஆணி வேறாக அலசப்படும்.டீயின் சூட்டோடு, விவாதங்களும் சூடு பறக்கும். எனினும், துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பும் போது, விவாத சுவடுகள் தெரியாமல்,
ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டு, செல்லும் காட்சிகளையும், சர்வ சாதாரணமாக பார்க்க முடிந்திருந்தது.ஆனால், இப்போது, வெளியிடத்தில், ஒரு கட்சியை பகிரங்கமாக கண்டித்து பேசியவர், உயிருடன் வீட்டுக்கு போக முடியாது; கும்பலால் அடித்து கொல்லப்பட்டு விடுவார்; அந்த அளவுக்கு, நிலைமை மாறி விட்டது.
எதிர்கட்சிகளை, எதிரிகளாக பார்க்கும் குணம், அப்போது இல்லை. அரசியல் தலைவர்களும் ஒருவருக்கொருவர் மரியாதையான வார்த்தைகளையே பரிமாறிக் கொண்டனர்.
பெரும்பாலும் தேர்தல், கோடை விடுமுறையில் தான் வரும். கிராமங்களுக்கு ஓட்டு சேகரிக்க வரும் நபர்கள், ஜீப் போன்ற வாகனங்களில் வருவர். அதன் பின், ஓட்டு போடும் வயதை அடையாத குஞ்சுகளும், குளுவான்களும், 'போடுங்கம்மா ஓட்டு-... இந்த-சின்னத்தைப் பாத்து...' என, கத்தியபடி செல்வதை காண முடியும்.ஓட்டு போடுவதற்கு, காரில் வந்து அழைத்துச் செல்பவர்கள், ஓட்டு போட்டதும், கண்டு கொள்ளாமல் இருப்பர்; அவர்களிடம், பெருசுகள் சண்டை போட்டு, தங்கள் வீடுகளில் இறக்கி விடச் சொல்வர்.'டிமிக்கி' கொடுக்கும் அந்த கட்சிக்காரரை திட்டிய படியே, வீடு வந்து சேருவர்!படுத்த படுக்கையாக இருக்கும் வாக்காளர்களை, ஓட்டுச்சாவடிக்கு துாக்கி வருபவர்களை பார்க்க முடியும். ஓட்டு போட்டதும், விரலில் வைக்கப்படும் அழியாத மையை, பல மாதங்களாக பெருமையுடன் பார்த்தவர்கள் அப்போது உண்டு.
அது போல, விரலில் வைத்த மையை, உடனடியாக அழித்து விட்டு, கள்ள ஓட்டு போட, வரிசையில் நின்று, உள்ளூர் நபர்களால் அடையாளம் காணப்பட்டு, ஓட்டுச்சாவடியை விட்டு, தலை தெறிக்க ஓடி வருபவர்களையும் பார்க்க முடிந்தது.உருண்டை, 'மைக்'குகளின் முன் நின்று, ஆவேசமாய் பேசும் தலைவர்களின் படங்கள்; சுவர்களில் சுண்ணாம்பு அடித்து, காவி அல்லது நீல வண்ணத்தில் வரைந்த சின்னங்கள், அழிக்கப்படாமல் விட்டால், பல ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும்.சில ஊர்களில், 20 ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்ட வேட்பாளரின் பெயரை கூட அழிக்காமல் அப்படியே வைத்திருப்பர். அந்த வேட்பாளர் வெற்றி பெற்றாரோ, தோல்வி அடைந்தாரோ தெரியாது... அவர் மீதான மரியாதையால், அப்படியே வைத்திருந்ததையும் காணலாம் அப்போது!ஆரம்ப காலத்தில் அரசியல்வாதிகள், பெரிய அளவில் வாக்குறுதிகளை தரவில்லை; மக்களும் அதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் ஓட்டளிப்பது தங்கள் கடமை என்ற எண்ணத்தில் மட்டுமே, ஓட்டு அளித்தனர்.
ஓட்டுச்சீட்டுகள், ஓட்டு இயந்திரங்களாக மாற ஆரம்பித்தன. தேர்தல் என்பது பணி செய்வதற்கு அல்ல; பணம் சம்பாதிக்கத் தான், என்ற எண்ணம் அரசியலுக்கு வந்தவர்கள் மனதில் உதிக்க ஆரம்பித்தது.'கடல் இல்லாத ஊரில், துறைமுகம் கொண்டு வருவேன்' என்று, நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளும், இலவச அறிவிப்புகளும், தேர்தல் என்பதை, ஜனநாயக கடமையாக இல்லாமல், திருவிழாவாக மாற்றி விட்டது.முன் ஒரு வேட்பாளர், ஒரு கட்சியின் சார்பாக தேர்தலில் நிற்கும் போது, அவர் நல்லவரா... அவரை ஜெயிக்க வைத்தால் நமக்கு நல்லது செய்வரா என்று நினைத்து ஓட்டுப் போட்டனர். அதனால் ஒரளவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையே வேட்பாளர்களாக, கட்சிகளும் தேர்ந்தெடுக்கும்.ஆனால் இப்போது, கட்சிகளின் வேட்பாளர்களை, அங்குள்ள பெரும்பாலான மக்களின் ஜாதியும், மதமுமே தீர்மானிக்கின்றன. கொள்கை, கோட்பாடுகள் எல்லாம், தேர்தலின் போது மட்டுமே. ஓட்டு போட்ட பின், சம்பாதிப்பதற்கான கொள்கை
மட்டுமே முன் நிற்கிறது.
காமராஜர், கக்கன் போன்ற தன்னலம் கருதாத தலைவர்களை, காலம் இனி ஒரு போதும் நமக்கு அளிக்காது என தெரிந்தும், ஒவ்வொரு முறை வாக்களிப்பதும் வாடிக்கையாகிப் போனது.இன்று அறிவியல் மிகவும் முன்னேறி விட்டது. அது தேர்தலிலும் பிரதிபலிக்கத் தான் செய்கிறது. ஓட்டுச் சீட்டுகளில் முத்திரையிட்டு பெட்டிகளில் மடித்து போடுவதற்கு பதிலாக, மிக எளிதாக, பொத்தானை அமுக்கி விட்டு வந்து விடலாம்.ஓட்டு எண்ணுவதற்கு இரவும், பகலும் விழித்திருந்த காலம் போய், சில மணி நேரங்களிலேயே ஓட்டுகளை எண்ணி விடுகிறோம்; முடிவுகளையும் உடனுக்குடன் சுடச்சுட தெரிந்து கொள்கிறோம். இந்த அறிவியல் முன்னேற்றத்தில் ஜனநாயகம் எத்தனையோ அடிகள் முன்னேறி விட்டது.
ஆனால், தேர்தலில் போட்டியிட்டு, பொதுமக்களின் எல்லா குறைகளையும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத தலைவர்களை கண்ணுக்கெட்டிய துாரம் வரை காண முடியவில்லையே!அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து, மறைந்து போன தலைவர்கள் இப்போது இல்லை. மயக்கும் வாக்குறுதிகள்; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு, 'பார்முலா'க்கள்; ஜாதிகளின் பின்னணியில் வேட்பாளர்கள்; கொள்கை ஏதுமில்லாமல் தொகுதிகளை பிரித்துக் கொள்ளும்
கூட்டணிகள்...அதே நேரத்தில், விடிய விடிய நடந்த தேர்தல் பிரசாரங்கள் இல்லை. நமக்குத் தெரியாமல், நம் வீட்டுச்சுவரில் சின்னம் வரைய முடியாது. இப்படி, தேர்தல் முன்பை விட, பல வகையில் மாறினாலும், நமக்கு தேவையான தலைவரை, நாமே தேர்தெடுக்கக் கூடிய உரிமை, அப்படியே தான் இருக்கிறது; அது மாறவில்லை.
அன்றும் இன்றும் தேர்தல் மாறினாலும், தேர்ந்தெடுக்கும் உரிமை நம் கைகளில் தான் உள்ளது. நம் கையில் உள்ள, ஓட்டு எனும் மந்திரகோலை பயன்படுத்தி, சரியான நபர்களை தேர்ந்தெடுப்போம்; ஜனநாயகத்தை காப்போம்.தொடர்புக்குஅலைபேசி: 98432 69178இ - மெயில்:
vagaiselvi@gmail.com