லோக்சபா தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக, பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்பை, காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, காங்., தலைவர் ராகுல், நேற்று அறிவித்தார். இதன் மூலம், நாடு முழுவதும், 25 கோடி பேர் பயனடைவர் என்றும், அவர் குறிப்பிட்டார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், முக்கிய அரசியல் கட்சிகள், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதிலும், நாட்டில் உள்ள ஏழை மற்றும் விவசாய குடும்பங்களின் ஓட்டுகளை வளைக்கும் வகையில், ஏற்கனவே சில கட்சிகள், உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளன.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, ஏற்கனவே அறிவித்தது. மூன்று தவணைகளாக வழங்கப்படும் இந்த உதவித் தொகையின் முதல் தவணை, சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், இந்த கவர்ச்சி அறிவிப்பு களத்தில் குதித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர், சிதம்பரம் தலைமையிலான குழு, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை தயார் செய்து முடித்துள்ளது. இதில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,
விவசாயத் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, காங்., தலைவர் ராகுல், சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு, குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும்' என, உறுதியளித்து இருந்தார்.
என்ன வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை குடும்பங்களுக்கு, குறைந்தபட்ச சம்பளமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை, அரசே வழங்குவது, சில நாடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. அது போன்ற திட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்தப் போவதாக, ராகுல் கூறியிருந்த நிலையில், அது குறித்த எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
இந்நிலையில், காங்கிரசின் உயர் மட்ட அமைப்பான, செயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. லோக்சபா தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் குறித்து, மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், நிருபர்களிடம், ராகுல் கூறியதாவது: 'ரபேல்' போர் விமானம் குறித்து, இப்போது எதுவும் கூறப்போவது இல்லை. மாறாக, அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.
மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும், வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாடும் ஏழைகளுக்கு, மாதந்தோறும், 6,000 ரூபாய் வழங்கப்படும். நன்கு சிந்தித்து, திட்டமிடப்பட்டு, வலுவான யோசனையுடன் தீட்டப்பட்டுள்ள திட்டம் இது. இது குறித்து, கடந்த சில மாதங்களாகவே, பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை செய்தோம். அதற்கு பின்னரே, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்; எனவே, இது சாத்தியமான திட்டம் தான்.
நாடு முழுவதும் உள்ள, ஐந்து கோடி ஏழை குடும்பங்களை உள்ளடக்கும் வகையில், இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 25 கோடி ஏழை மக்கள் பலனடைவர். நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, ஒவ்வொரு தரப்புக்கும், ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஏழ்மையை அடியோடு ஒழித்து கட்டுவதற்காக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, மக்கள் நிறைய அவதிப்பட்டு விட்டனர். அவர்களுக்கு, இந்த திட்டத்தால், இனி நியாயம் கிடைக்கும். இது போன்ற, குறைந்தபட்ச வருமான திட்டம், வேறு சில நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் வழங்கப்படவுள்ள தொகை தான், அதிகபட்சமானதாக இருக்கும்.
வறுமைக்கு எதிராக நடத்தப்படும் கடைசி கட்ட தாக்குதலாக, இந்த திட்டம் அமையும். இதன் வாயிலாக, ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கும் என்பதால், இந்த திட்டம், 'நியாய்' திட்டம் என, அழைக்கப்படும். இவ்வாறு ராகுல் கூறினார்.'
குறைந்தபட்ச வருமான திட்டம்' என்ற ஹிந்தி வாசகத்தை, ஆங்கிலத்தில் எழுதினால், Nyuntam Aay Yojana என வரும். இதில் உள்ள முதல் ஆங்கில எழுத்துகளின் சேர்க்கையே, 'நியாய்' என்பது. காங்கிரஸ் பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா, இந்த பெயரை தேர்வு செய்ததாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (98)
Reply
Reply
Reply