யார் என்ன அடிச்சாலும் பயத்த மட்டும் காட்டாதே...!

Added : மார் 26, 2019
Advertisement
யார் என்ன அடிச்சாலும் பயத்த மட்டும் காட்டாதே...!

ஒடிசாவில், முதல்வர், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அலுவலகத்தில் இருந்து, பா.ஜ., அலுவலகத்துக்கு, சிறப்பு போக்குவரத்து வசதிகள் தான் செய்யப்படவில்லை! மற்றபடி, தினமும் ஏதாவது ஒரு தலைவர், இங்கிருந்து விலகி, அங்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், எதுவுமே நடக்காதது போல், முகத்தில் எந்த ஒரு சலனத்தையும் காட்டாமல், நவீன் இருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்!

ஒடிசாவில் உள்ள, 21 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23, 29ல், நான்கு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் நடக்கிறது. தொடர்ந்து, ஐந்தாவது முறையாக முதல்வராகும் கனவில், நவீன் பட்நாயக் உள்ளார். ஆனால், பிஜு ஜனதா தளத்தில் இருந்து, பல முக்கிய தலைவர்கள், போட்டி போட்டு விலகி வருகின்றனர். கட்சியில் இருந்து இவர்கள் விலகுவதால், எந்தப் பிரச்னையும் இல்லை என, பிஜு ஜனதா தளம் கூறுகிறது. ஆனால், விலகியவர்கள் அனைவரும், நேராக, பா.ஜ.,வில் போய் சேருவது, அக்கட்சிக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காந்தமால் தொகுதியின், பெண், எம்.பி.,யான, பிரத்யுஷா ராஜேஷ்வரி சிங், பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகியுள்ளார். தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாததுடன், வேட்பாளர் தேர்வு குறித்து, ஒரு வார்த்தைகூட தன்னிடம் பேசப்படவில்லை என, அவர் கூறியுள்ளார். இதைத் தவிர, சமீபத்தில் கணவர் இறந்த பிறகு, கட்சியைச் சேர்ந்த சிலர், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அது குறித்து தலைமைக்கு தெரிவித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் கூறி, அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது, பிஜு ஜனதா தளத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.

லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், 33 சதவீத இடம், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என, முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ள நிலையில், பெண், எம்.பி.,யின் புகார், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், எதுவுமே நடக்காதது போல், முதல்வர், நவீன் பட்நாயக், முகத்தில் எந்த சலனத்தையும் காட்டுவதில்லை. 'இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்' என, அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். 'தேர்தலில் வெற்றி உறுதி என்று நினைத்தால், இரண்டு தொகுதிகளில் அவர் ஏன் போட்டியிட வேண்டும்? 'பயப்படாதது போல் நடிப்பதற்கு, அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X