தண்ணீர் குடிப்பதற்கில்லார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவு மில்லார்

கடுயையான வெயிலும் கொடுமையான தண்ணீர் பஞ்சமும் நிலவுகிறது.
எல்லோர் வீட்டிலும் பொழுது தண்ணீர் பிரச்னையுடன்தான் விடிகிறது அப்படியேதான் முடிகிறது.
வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் குளித்துவிட்டால் அதுவே ஒரு பெரிய அதிசயமாகவும்,சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.துணி துவைப்பது வீட்டை துடைப்பது என்பதெல்லாம் ஆடம்பரமான விஷயத்தில் சேர்த்தியாகிவிட்டது.
இந்த தண்ணீர் பிரச்னை இப்போதுதான் ஆரம்பித்துள்ளது இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கப் போகிறது என்பதை எண்ணும்போதே தலை கிறுகிறுக்கிறது.
தண்ணீர் பிரச்னைக்கான காரணத்தை தேடி மற்றவர்கள் மீது பழி போடுவதைவிட அதற்காக நம்மால் என்ன தீர்வு காணமுடியும் என்பதற்கான தீர்வையும் பொறுப்பையும் சொல்வதுதான் ‛தியேட்டர்காரன்' குரூப் வழங்கும் தண்ணீர் பிரச்னையை விவரிக்கும் வீதி நாடகம்.

சிறு துளி பெரு வெள்ளமாக மாறுவது போல சின்ன விஷயங்களில் நாம் வீணாக்கும் தண்ணீரை சேமித்தாலே நிறைய தண்ணீரை சேமிக்கலாம் என்பதை நாடகம் சுவராசியமாக சொன்னது.

கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் வாட்டர் பாட்டிலை பெரும்பாலோர் முழுவதுமாக குடிப்பது இல்லை. கொஞ்சமாக குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு செல்கின்றனர்.ஒன்று முழுவதுமாக குடித்துவிடுங்கள் அல்லது கவுரம் பார்க்காமல் தண்ணீர் பாட்டிலை மீதமுள்ள தண்ணீரோடு எடுத்துச் சென்று எப்போது தாகமெடுக்கிறதோ அப்போது குடியுங்கள்.

அடுத்ததாக ஷவரில் குளிப்பதை தவிருங்கள், ஒரு வாளியில் பிடித்துவைத்து குளியுங்கள் நிறைய தண்ணீர் மிச்சமாகும் ஷவரில்தான் குளிப்பேன் அதுதான் வழக்கம் என்றால் மூன்று நிமிடத்திற்கு மேல் குளிக்காதீர்கள்.
பாத்திரம் கழுவும் போது குழாயைத் திறந்துவிட்டபடி பாத்திரம் கழுவாமல் பிடித்துவைத்த தண்ணீரில் பாத்திரத்தை கழுவவும்.
இப்படி நாம் அன்றாடம் எப்படி எல்லாம் தண்ணீரை வீணாக்குகிறோம் என்கிற விஷயத்தை இருபது நிமிட நாடகமாக போட்டனர்.நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே இளைஞர்கள்தான்.பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மாணவர்கள்தான் நாடக கதாபாத்திரங்கள்.

நாடகத்தை குழந்தைகள் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ரசிக்கவேண்டும் என்பதற்காக ‛பப்பயா' என்ற நகைச்சுவை கதாபாத்திரம் வழியாக கருத்தைச் சொல்கின்றனர் இது மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அவர்களின் பலத்த கைதட்டல் மூலம் உணரவும் முடிகிறது.
நல்ல குடிநீர் கிடைக்காமல் உலகில் உள்ளோர் பலர் தவிக்கின்றனர்,வாந்தி பேதி காரணமாக குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் மோசமான குடிநீர்தான்,கர்ப்பகால பெண்கள் அதிகம் அவதியுறுவது தண்ணீர் பிரச்னையால்தான் என்று உலக சுகாதார நிறுவனத்தின் (who)எச்சரிக்கையும் நாகடத்தில் கருத்தாக சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு நாடகத்தை நடத்தச் சொல்லி துாண்டுகோலாக இருந்ததே எல் அண்ட் .டி.,நிறுவனம்தான் அவர்கள் இரண்டு முறை தங்கள் வளாகத்தி்ல் இந்த நாடகத்தை போட அனுமதித்தனர். இந்த நாடகத்தை தங்கள் அபார்ட்மெண்டில் நடத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்ட இடங்களிலும் நடத்தியுள்ளோம் ,இந்த நல்ல விஷயத்தை நிறைய பேரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்ற முபை்புடன் வீதி நாடகமாகவும் நடத்திவருகிறோம்.நீங்களும் உங்கள் இடத்தில் இந்த நாடகத்தை பார்க்கவிரும்புகிறீர்களா அப்படியானால் தியேட்டர்காரன் நாடக குழு தலைவர் சபரிவாசை தொடர்பு கொள்ளுங்கள் எண்:9884966613
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in