கோவை : லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வில்லன் யார் தெரியுமா? உச்சி முதல் உள்ளங்கால் வரை திகுதிகுக்கின்ற வகையில், கொளுத்துகின்ற கோடை வெயில்தான்!சில காட்சிகளை பார்ப்போம்... சமீபத்தில் கோவை தனியார் திருமண மண்டபத்தில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கோவை பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பா.ஜ., நிர்வாகி ஒருவர் ஏர்கூலர் அருகே ஆணியடித்தாற் போல் அமர்ந்து கொண்டார். கூட்டம் முடியும் வரையில் கொஞ்சம் கூட வேறு பக்கம் நகரவில்லை.
இத்தனைக்கும் கூட்டம் நடைபெற்றது, சூரியன் மறைந்த பின்னர்தான். முதன் முதலாக தேர்தலில் போட்டியிடும் கட்சியை சேர்ந்த வேட்பாளர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். 10 நிமிடங்கள் பத்திரிகையாளர்களிடம் பேசி முடிப்பதற்குள், பலமுறை கைக்குட்டையை எடுத்து வியர்வையை துடைத்துக்கொண்டார். பேட்டி முடிந்ததும் விட்டால் போதும் என்பதுபோல், அவசர அவசரமாக ஏ.சி., காருக்குள் ஏறியமர்ந்து கொண்டார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன், வெயிலில் அலைந்து பழக்கப்பட்டதால் தான் என்னவோ, பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பிரசாரம் செய்கிறார்.
அவருடன் பிரசாரத்துக்கு செல்லும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்தான் பாவம், 'முடியலடா சாமி' என்று கதறுகின்றனர்.ஆரம்ப கட்ட பிரசாரத்திலேயே இந்த நிலை என்றால், இன்னும் நாட்கள் செல்ல செல்ல, வெயில் இன்னும் உக்கிரமாகும்போது, இன்னும் என்னவெல்லாம் கூத்துக்கள் அரங்கேறுமோ?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE