ஓட்டுக்காக அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் பணம், ஆட்சி காலத்தில், எந்தெந்த வகைகளில், மக்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தமிழகத்தில், தேர்தலின் போது, ஓட்டுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகள், பல்வேறு நுாதன வழிகளில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முற்படுகின்றன.ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற எண்ணம், வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு என்பதால், தேர்தல் ஆணையம், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, முடுக்கி விட்டுள்ளது.
பல்வேறு தன்னார்வலர்களும், விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஏற்படும் பின் விளைவுகளை, வாக்காளர்களுக்கு சுட்டிக் காட்டும் வகையில், வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ பதிவில், அரசியல்வாதியை சுட்டிக்காட்டும் இரண்டு கைகளும், வாக்காளரை சுட்டிக்காட்டும் இரண்டு கைகளும் வருகின்றன. அரசியல்வாதியை பிரதிபலிக்கும் இரண்டு கைகள், வாக்காளருக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆதரவு கேட்கின்றன. வாக்காளரை பிரதிபலிக்கும் கைகள், பணத்தை பெற்று, ஆதரவு உறுதி என்பது போன்று, சைகை காட்டுகின்றன.தேர்தல் முடிந்த பின், அரசியல்வாதியை பிரதிபலிக்கும் கைகள், வாக்காளரின் கைகளில் விலங்கு போன்று கயிற்றை கட்டி, பணம் கேட்டு மிரட்டதுவங்குகின்றன.
வாக்காளரிடம் இருந்த பணம் அனைத்தையும் மிரட்டி பறிப்பதுடன், அவர்கள் கையில் இருந்த நகைகளையும் பறித்து செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஊழல் என, அப்போது, திரையில் வாசகங்கள் இடம் பெறுகின்றன.பணம் கொடுத்து ஓட்டு வாங்குவோர், பதவிக்கு வந்ததும், வாக்காளரை எந்தெந்த வகைகளில் சுரண்டுவர் என்பதை, எளிதில் புரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, 'பேஸ் புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
'இந்த வீடியோவை பார்ப்பவர்கள், தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறுவதை கைவிட வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE