அதிரடி திட்டம்!..

Added : மார் 30, 2019
Advertisement
அதிரடி திட்டம்!..


கோஷ்டி ஒழியுமா?

அனைத்து கட்சிகளிலும் கோஷ்டி சண்டை இருந்தாலும், காங்கிரசில் இது கொஞ்சம் அதிகம் தான். இப்படிப்பட்ட கோஷ்டி பிரச்னையால், கட்சி வேட்பாளர்களின் வெற்றி பறி போய்விடக் கூடாது என்பதில், காங்., தலைவர் ராகுல் எச்சரிக்கையாக உள்ளார்.கோஷ்டிகளை ஒன்று சேர்க்க, ஒரு அதிரடி திட்டம் தயார் செய்தார். ஒருவரை ஒருவர் திட்டி, குழி பறிக்கும் கோஷ்டி தலைவர்கள் அனைவரையும், ஒரு பஸ்சில் ஏற்றி, ஊரைச்சுற்றும்படி அனுப்பி வைக்கிறார், ராகுல். அனைத்து கோஷ்டியினரும், ஒரேபஸ்சில் பயணம் செய்தால் பிரச்னை தீரும் என நினைக்கிறார், அவர்.ஹரியானா காங்கிரசில், ஹூடா, செல்ஜா என, பல தலைவர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் ஒரே பஸ்சில் ஏற்றி, ஹரியானா தேர்தல் பிரசாரத்திற்காக அனுப்பி வைத்தார், ராகுல். ஆனால், கோஷ்டி சண்டை ஓய்கிற மாதிரி தெரியவில்லை.இதேபோல, 2017ல், உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், கோஷ்டி தலைவர்கள் அனைவரையும், ஒரு பஸ்சில் அமர வைத்து, டில்லி முழுவதையும் சுற்ற வைத்தார், ராகுல். மூத்த தலைவரான, ஷீலா தீட்சித், பாதியிலேயே பஸ்சிலிருந்து இறங்கி விட்டார். இதன் விளைவு, அந்த தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.'தமிழக, காங்., கோஷ்டிகளை ஒன்று சேர்க்க, இப்படி ஒரு பஸ் பயணத்துக்கு, ராகுல் ஏற்பாடு செய்வாரா...' என, எதிர்பார்க்கின்றனர், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள்.




அதிரடி திட்டம்!

தேர்தல் என்றாலே, தமிழக மக்களுக்குக் கொண்டாட்டம் தான். பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு அடுத்து, தேர்தலைத் தான், நம் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அனைத்து வேட்பாளர்களும், வாக்காளர்களை நன்றாக, 'கவனிப்பர்!'ஆரத்தி எடுப்பது, மலர் துாவுவது என, பணம், பாதாளம் வரைக்கும் பாயும். பண வினியோகத்தை கண்காணிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், அதை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், ஒரு பிரபல கட்சியின் தமிழக பிரமுகர், ஒரு வேட்பாளரைப் பற்றியும், அவரது தொகுதியில் நடக்கும் பிரச்னைகள் பற்றியும், தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.சர்சைக்குரிய அந்த வேட்பாளருக்கு, 'சீட்' கிடைப்பதிலேயே பெரும் பிரச்னை. ஒரு வழியாக, கட்சி தலைமை, 'சீட்' கொடுத்துவிட்டது. 'என்ன செலவானாலும் பரவாயில்லை; வெற்றி தான் முக்கியம்' என, அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார், அந்த நட்சத்திர வேட்பாளர்.தனக்கு நெருக்கமான கட்சியினரை அழைத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டார். ஒரு ஓட்டுக்கு, 8,000 ரூபாய் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விஷயத்தை, அதே கட்சியின் முக்கிய தமிழக பிரமுகர், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், 'போட்டு'க் கொடுத்துவிட்டார். ஆனாலும், பணப் பட்டுவாடா தொடர்ந்து நடக்கிறது. ஓட்டுப் பதிவுக்கு, 10 நாட்களுக்கு முன், மொத்த பணமும் வாக்காளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பது, வேட்பாளரின் திட்டம். தேர்தல் ஆணைய அதிகாரிகள், கண் கொத்தி பாம்பாக செயல்பட்டாலும், இதுவரை எதுவும் சிக்கவில்லை.மற்றொரு பக்கம், 20 ரூபாய் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி வருகிறாராம், இன்னொரு தலைவர். 'நாட்டிலேயே, அதிகமாக பணம் பிடிபட்டது தமிழகத்தில் தான்' என, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.'அவங்க பிடிச்சதெல்லாம், ரொம்ப கம்மி; கவலை வேண்டாம்; உங்களுக்கு தேவையானது, வீடு தேடி வரும்' என, வேட்பாளர்கள் கூறி வருகின்றனர்.


'அப்பாடா... தப்பித்தோம்!'

மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடுவை, துணை ஜனாதிபதி வேட்பாளராக, பா.ஜ., மேலிடம் அறிவித்த போது, நொந்து போனார், அவர். 'துணை ஜனாதிபதி பதவி வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளுக்கு அரசியலில் இருக்க விரும்புகிறேன்' என்றார்.ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்து, வெங்கையா நாயுடுவை, துணை ஜனாதிபதியாக்கி விட்டனர்.'நல்ல வேளை... தப்பித்தேன்' என, இப்போது பெருமூச்சு விடுகிறார், வெங்கையா நாயுடு. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு, தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிட, பா.ஜ., மேலிடம், 'சீட்' கொடுக்கவில்லை.பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு பிடிக்காத தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக, கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்துள்ளது. இதனால், 'துணை ஜனாதிபதியாகாமல் இருந்திருந்தால், எனக்கும் இந்த கதி தான் ஏற்பட்டிருக்கும்' என, வெங்கையா கூறுகிறார்.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நெருக்கமானவர், வெங்கையா. அத்வானிக்காக, தன் கட்சி தலைவர் பதவியையே துறக்க தயாராக இருந்தவர். 'கட்சிக்காக உழைத்தவருக்கு இப்படி செய்து விட்டனரே...' என, வெங்கையா வருத்தப்படுவதாக கூறுகின்றனர்.இதற்கிடையே, அத்வானியை ராஜ்யசபா, எம்.பி.,யாக்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுயுள்ளது. முரளி மனோகர் ஜோஷிக்கும், நல்ல பதவி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மூத்த தலைவர்களோ, 'தேர்தலுக்கு முன், இப்படி சொல்வர். தேர்தல் முடிந்து, மீண்டும் ஆட்சி அமைத்தால், என்ன நடக்கும் என, யாருக்கு தெரியும்' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X