தேர்தல் முறையை மாற்றுங்க!
நம் நாட்டில் பின்பற்றப்படும் தேர்தல் முறை, பிரிட்டன் நாட்டின் தேர்தல் முறை போல வடிவமைக்கப்பட்டுள்ளது தான், பல அரசியல் மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாக உள்ளது.ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள்; தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் கமிஷனில் மட்டும் பதிவு செய்துள்ள, 'லெட்டர் பேடு' கட்சிகள்; பதிவாகும் ஓட்டுகளில், ௧௫ சதவீதம் கிடைத்தாலே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வேட்பாளர்கள்;
௨௫ சதவீதத்துக்கும் குறைவாகப் பெற்ற போதிலும், ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சிகள் என்ற நிலை, இந்த தேர்தல் முறையால் தான்!மொத்தம், 20க்கும் குறைவான, எம்.பி.,க்கள் ஆதரவுடன், தேவ கவுடா பிரதமரானது, நாம் பின்பற்றும் பிரிட்டன் மாடல் தேர்தல் முறையால் தான். இதனால் தான், பெரும்பான்மை ஆதரவு இல்லாமல், மிகக் குறைந்த ஓட்டு பெற்ற கட்சிகளின் தலைவர்கள், ஆட்சியை பிடிக்கின்றனர்.திரைமறைவு பேரங்கள் நடத்தி, கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து, பிரதமராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், நாட்டை கொள்ளை
அடிக்கின்றனர்.ஆட்சியை ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, ஊழல் மூலம் சம்பாதித்து, கோடீஸ்வரர்களாகின்றனர்.
அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், கோடிகளில் குளிக்கின்றனர். மக்களாட்சி என்ற பெயரில், ஊழல் ஆட்சிகள் மாநிலங்களில் ஏற்பட, இந்த தேர்தல் முறை தான் காரணம்.எனவே, நேரடி ஓட்டுகளை பெற்று, பதிவாகும் ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறுபவர்களே, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யாக முடியும் என, தேர்தல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும்.அது போல, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை செல்லா காசுகளாக ஆக்கி, கவர்னர், ஜனாதிபதி ஆகியோரின் நேரடி நிர்வாகத்தில், மாநிலங்களும், மத்திய அரசும் வர வேண்டும். அப்படி வந்தால் தான், அது உண்மையான ஜனநாயகமாகவும், நேர்மையான தேர்தலாகவும் இருக்கும்.பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் உள்ளது போன்ற, கவர்னர் -
ஜனாதிபதி ஆட்சி முறையை, நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.நாட்டின் பிரதமரே, தலைமை நிர்வாகியாக இருக்கும், இப்போதைய முறையை மாற்றி, ஜனாதிபதியே நாட்டின் தலைமை நிர்வாகியாக வேண்டும்.மாநிலங்களில் முதல்வர்களே, தலைமை நிர்வாகிகளாக இருக்கின்றனர்; அதை மாற்றி, கவர்னர்களே தலைமை நிர்வாகிகளாக மாற வேண்டும்.தேர்தலில் பதிவாகும் நேரடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளை பெறும் ஜனாதிபதி வேட்பாளரே, நாட்டின் தலைமைநிர்வாகியாக, ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என, மாற்றம் கொண்டு வர வேண்டும்.இது, புதுமையான முறையல்ல; உலகின் பல நாடுகளில் உள்ள முறை தான். மேலும், இது தான், உண்மையான ஜனநாயக தேர்தல் முறை.ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, மக்கள் நேரடியாக ஓட்டளிக்க வேண்டும்; அதில், 50 சதவீதத்திற்கு அதிகமாக, எந்த வேட்பாளர் பெறுகிறாரோ, அவரே ஜனாதிபதி ஆக வேண்டும். அது போல, மாநிலங்களிலும், கவர்னரை, மக்களே நேரடி ஓட்டு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.சரி, நிறைய வேட்பாளர்கள் போட்டியிட்டதால், யாருக்கும், 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓட்டுகள் கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்பட்டால், என்ன செய்வது என, கேட்கலாம். அத்தகைய சூழலில், அதிக ஓட்டுகளைப் பெற்ற, முதல் இரண்டு வேட்பாளர்களை மட்டும், மீண்டும் மோதச் செய்ய வேண்டும்; பிறரை கழித்து கட்ட வேண்டும்.இத்தகைய முறை தான், விளையாட்டு போட்டிகளில் நிலவுகிறது. உண்மையான வீரர்களை, இப்படித் தான் தேர்ந்தெடுக்கின்றனர். அது போலத் தானே, மாநிலத்தின் கவர்னர், மத்தியில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்... அது தானே, நியாயமானதாக இருக்கும்...இந்த முறையில், தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அதிகபட்சம், இரண்டு பதவி காலங்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிட வேண்டும். குடும்ப சொத்து போல, ஒருவரே பல முறை, பல தேர்தல்களில் போட்டியிடுவது கூடாது.
இவ்வாறு குறைந்த பதவி காலம் நிர்ணயிக்கப்படுவதால், ஊழல், முறைகேடு, மோசடிகளில் ஈடுபட முடியாது.
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே, ஆட்சி, அதிகாரத்தில் தொடர்வது தடுக்கப்படும்.இத்தகைய முறை, ஜனாதிபதி - கவர்னர் பதவிக்கு பின்பற்றப்படுமானால், புதிது, புதிதாக அரசியல் தலைவர்களும் உருவாகுவர். 50 ஆண்டு காலமாக கருணாநிதி; 40 ஆண்டு காலமாக தேவ கவுடா, 35 ஆண்டுகளாக முலாயம் சிங், லாலு யாதவ், மாயாவதி போன்றோர் மாயமாவர்.அதுபோல, கருணாநிதி மகன் ஸ்டாலின்; தேவ கவுடா மகன் குமாரசாமி; முலாயம் மகன் அகிலேஷ் என, வாரிசு அரசியலும் மறைந்து போகும்.திரும்பத் திரும்ப இவர்களே ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதால் தானே, ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன... அதனால் தானே, நம் ஜனநாயகம், கேலிக்கூத்தாக மாறுகிறது!சரி, 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகளை பெறுபவர் தான், ஜனாதிபதி - கவர்னர் ஆக முடியும். திடீரென அவர் இறந்து விட்டால், இரண்டாவது இடத்தில் வந்தவர், முதலிடத்தை பிடித்து விடுவார் அல்லது ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பவர், பொறுப்புக்கு வருவார்... அவ்வளவு தான்!இப்படி நடந்தால், அடிக்கடி தேர்தல்; அதனால் பண விரயம் போன்றவை தடுக்கப்படும். மக்களும், அவரவர் வேலைகளை ஒழுங்காக பார்த்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட முடியும்.அமெரிக்காவை விட, பிரேசில், ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளில் பின்பற்றப்படும், ஜனாதிபதி, கவர்னர் தேர்தல்களே, நேர்மையான மக்களாட்சி தத்துவத்தின் முன்னுதாரணமாக திகழ்கின்றன.இந்த முறை, நம் நாட்டில், முதல் தேர்தல் நடந்த, 1952ல் பின்பற்றப்பட்டிருந்தால், அந்த தேர்தலில், ஜவஹர்லால் நேரு தான், ஜனாதிபதி ஆகி இருப்பார்; அடுத்த முறையும், ஜனாதிபதி ஆகியிருப்பார். அதற்குப் பிறகு, புதிய ஜனாதிபதி வந்திருப்பார். அதனால், புதிய திட்டங்
களும், சட்டங்களும் வந்திருக்கும்; குடும்ப ஆட்சி முறை வந்திருக்காது.
அது போல, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் உலை வைக்கும், சில, குட்டி கட்சிகள்; அவற்றின்தலைவர்கள் தலையெடுத்திருக்க மாட்டார்கள்.அவர்களால், இளைஞர்கள், மூளை சலவை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். 'அரசியல், கொள்ளை லாபம் பார்க்கும் தொழில்' என்ற எண்ணம் விட்டுப் போயிருக்கும். பல லட்சம் அரசியல்வாதிகள், உழைத்து முன்னேற வழி தேடி இருப்பர்.இந்த வழிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், மத்தியில், தேவகவுடா, சந்திரசேகர், வி.பி.சிங், குஜ்ரால், வாஜ்பாய் போன்றவர்கள், நாட்டின் உயரிய பொறுப்பிற்கு வந்திருக்கவே முடியாது.முரண்பாடான தேர்தல் கூட்டணி; தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி; மக்கள் மன்றங்களில், மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பின் போது கூட்டணி போன்ற நடைமுறைகள் இருக்காது. ஊழலுக்கும், குதிரை பேரங்களுக்கும் இடமிருக்காது.
அதுபோல, மாநிலங்களில், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் போன்றோர் வசம், ஆட்சி, அதிகாரம் சென்றிருக்காது.தமிழகம் போன்ற சில மாநிலங்களில், ௫௦ சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற, அரசியல்வாதியோ, கட்சித் தலைவரோ இன்றைய சூழ்நிலையில் இல்லை. குறிப்பாக, ஸ்டாலின், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., போன்றோர், பதவிக்கு வர முடியாது.அதுபோல, 10 - 15 சதவீதத்திற்கும் குறைவாக பெற்றுள்ள போதிலும், தங்களிடம் ஏதோ வினோதமான சக்தி இருக்கிறது என்பது போல செயல்படும், விஜயகாந்த், அன்புமணி, வைகோ போன்றோர், அரசியல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும்.அதுபோல, நாட்டில் ஜாதி, மதப் பிரச்னையும் தலைதுாக்காது. தேர்தல் நேரத்தில் மட்டும் கடை விரிக்கும், லெட்டர் பேடு கட்சிகள், நடிகர்கள், பிரமுகர்களுக்கு, தேர்தலில் வேலை இருக்காது. வெள்ளை வேட்டி, சட்டைகள் விற்பனை குறைந்திருக்கும்.நாட்டின் உண்மையான முன்னேற்றம், நியாயமான ஆட்சி, வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை கொண்ட கட்சிகளும், அவற்றின் தலைவர்கள் மட்டுமே, ஆட்சி, அதிகாரத்திற்கு வர முடியும்.அதனால், நாடு முன்னேறும்; நாட்டு மக்கள் முன்னேற்றம் காண்பர். பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்.நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு குந்தகம் ஏற்படாது.
அதே நேரத்தில், உண்மையான ஜனநாயகம் மலரும்; அதன் மாண்புகள் மேம்படும்.இதே முறையில், உள்ளாட்சி நிர்வாகங்களும் மாற்றப்படுமானால், உண்மையான ஜனநாயகம், அடிமட்டத்திலிருந்து கிடைக்கும்.
குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்; பண பலம் மிக்கவர் போன்றவர்கள், தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்; நியாயமான உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஓட்டுக்கு பணம் கொடுக்கும், பணம் பெறும் முறை இருக்காது. நியாயமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எப்படி, விளையாட்டுப் போட்டிகளில், உண்மையான திறமைசாலிகள் வெற்றி பெறுகின்றனரோ, அதுபோல, உண்மையானவர்கள் உயர் பதவிகளில் அமர்வர்.ஊழல் பேர்வழிகள், முறைகேடுகளுக்காக நீதிமன்றங்களுக்கு நடையாய் நடப்பவர்கள், சுயமாக நடக்க முடியாதவர்கள், நோயாளிகள், பணப்பேய்கள் போன்றோர், பதவியில் அமர முடியாத உன்னத நிலை, அரசியலில் ஏற்படும். அந்த நாள் எந்நாளோ... அதற்காக இறைவனை வேண்டிக் கொள்வோம்!தொடர்புக்கு அலைபேசி: 80991 07855