'மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!' என, மகாகவி பாரதி முழக்கமிட்டதை அனைவரும் அறிவோம். இன்று பெண்களுக்கு நம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், கொடுமைகளையும் பார்க்கும் போது, பாரதி சொன்ன கூற்று பொய் என்றே தோன்றுகிறது. பெண்ணாய்ப் பிறந்தது, எப்போதோ செய்த பாவம் என, தோன்றும் அளவிற்கு மாறிவிட்டது சமுதாயம்!
கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் வந்த வண்ணமாக இருக்கும், பொள்ளாச்சி பாலியல் விவகாரம், கொடூர மனம் படைத்தவர்கள் நிறைய இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.வளர்ந்து வரும் நம் நாட்டில், இது மாதிரியான அநீதிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என, எண்ணும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது.தகவல் தொழில்நுட்பம் நிறைந்த இவ்வுலகில், வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், 'அப்டேட்' ஆக இல்லாவிடில், நம்மை புறந்தள்ளி, புறக்கணித்து விடும், இந்த சமுதாயம். ஆனால், சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதில் தான் உள்ளது, நன்மையும் தீமையும்!பெண்களே... சமூக வலைதளங்களை, உங்களை முன்னேற்றவும், நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், உலகைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுத்துங்கள்.நமக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறான பாதையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணருங்கள்.
பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும், 'டிக் டாக்' வீடியோக்களிலும் அரைகுறை ஆடையுடன், 'போஸ்ட்' செய்வது பெண் சுதந்திரம் அல்ல!வஞ்சகர்கள் நிறைந்த இவ்வுலகில், யாரையும் வெகு சுலபமாக நம்பி விடாதீர்கள். ஆண் நண்பர்களின் நட்பு அவசியம் தான்.ஆனால், முகம் தெரியாத ஆண்களிடம், 'சாட்' செய்வதும், உங்கள் புகைப்படங்களை, 'ஷேர்' செய்வதும் மிகவும் முட்டாள் தனமானவை.சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் நம்மை வளர்ப்பதற்கே ஒழிய, அழிப்பதற்காக அல்ல. சமூக வலைதளங்களை, உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக உபயோகியுங்கள்.'அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல, எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறியாமல், பெற்றோர் கூறுவதையும் கேட்காமல், பாதாளக் கிணற்றில் ஏன் விழுகிறீர்கள்...
எந்த ஒரு விஷயம் ஆனாலும், பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். முகம் தெரியாத பலரிடம் பகிர்ந்து கொள்ளும் உங்களின் ஆசை, விருப்பம், சோகம், பிரச்னைகளை, பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டாலே பல மாற்றங்களைக் காணலாம். மாற்றம் நம்மிடமிருந்தே துவங்கட்டும்.மறைந்த, 'அணு நாயகன்' அப்துல் கலாம் கனவு கண்ட, 'இந்தியா - 2020'க்கு, இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. நாளைய இந்தியா, இளைஞர்கள் கையில் என்ற, அவர் கனவை நினைவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, மாணவர்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும் உள்ளது. எனினும், சட்டங்களும், விதிமுறைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்யும் கொடூரர்களுக்கு, கடும் தண்டனை வழங்க வேண்டும்.
- ஜி.ஜி.ஸ்ரீநிதி
- சமூக ஆர்வலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE