எலெக்ஷனுக்கு எம்.எல்.ஏ., கலெக்ஷன் - வசூல் டீமில் பார்த்து பார்த்து செலக்ஷன்!| Dinamalar

எலெக்ஷனுக்கு எம்.எல்.ஏ., 'கலெக்ஷன்' - வசூல் டீமில் பார்த்து பார்த்து செலக்ஷன்!

Updated : ஏப் 02, 2019 | Added : ஏப் 02, 2019
Share
எலெக்ஷனுக்கு எம்.எல்.ஏ., 'கலெக்ஷன்' - வசூல் டீமில் பார்த்து பார்த்து செலக்ஷன்!

அ ன்றைய நாளிதழ்களில் வந்திருந்த செய்திகளை, படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.'ஷாப்பிங்' சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, தேர்தல் களம் படுசூடாகியிருச்சு போலிருக்கே...'' என துவக்கினாள்.

''ஆமா, வீதி வீதியா போறாங்க. கடந்த தேர்தல்ல, எந்தெந்த பகுதியில், 'வீக்'கா இருந்தாங்களோ, அந்த 'லிஸ்ட்'டை கையில வச்சுக்கிட்டு, கூடுதல் கவனம் செலுத்துறாங்க. பி.ஜே.பி.,யா இருந்தாலும், மா.கம்யூ.,வா இருந்தாலும் கூட்டணி கட்சிங்க தயவுலதான் ஜெயிக்க வேண்டிய நெலைமை இருக்கு'' என்றாள் சித்ரா.

''சரியா சொன்னே''

''இருந்தாலும், அமித் ஷா, மோடி, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., - வாசன்னு ஏகப்பட்ட பிரபலங்கள் பிரசாரத்துக்கு வர்றதுனால, பி.ஜே.பி.,க்காரங்க ரொம்பவே தெம்பா இருக்காங்க. ஜெயிக்கிறது முக்கியமல்ல; ஓட்டு வித்தியாசம் அதிகமா இருக்கணும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''தேர்தல் பறக்கும் படை அதிகாரிங்க, ஒவ்வொரு ரோட்டுலயும் நின்னு சோதனை போடுறாங்களே. அவுங்க கண்ணுல கூட சிக்கலையா...'' என்று கேட்டாள் மித்ரா.

''அவுங்க... கடைக்கு பொருள் வாங்க போறவங்களையும், வங்கி ஏ.டி.எம்.,க்கு பணம் நிரப்ப போறவங்களையும்தானே பிடிக்கிறாங்க...''

''அப்படியா...'' என, ஏதும் தெரியாதவள் போல கேட்டாள் மித்ரா.''இதுல, பேங்க் ஆபீசருங்கதான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி, ஒரு பிராஞ்ச்சுல இருந்து, இன்னொரு பிராஞ்சுக்கு, பணம் கொண்டு போறது ரொம்ப ஈசியா இருந்துச்சு. இப்ப அப்படி கொண்டு போக முடியலை. பாதி வழியில, பறக்கும் படைக்காரங்ககிட்ட பணம் சிக்கிட்டா என்ன பண்றது, யாரை உதவிக்கு கூப்பிடுறதுன்னு தெரியாம, பேங்க் ஆபீசருங்க பயந்துட்டு இருக்காங்க. மாவட்டம் விட்டு மாவட்டம், பணம் கொண்டு போக வேண்டிய பேங்க் ஆபீசருங்க, புலம்பித் தள்ளுறாங்க...'' என்றாள் சித்ரா.

''தொழில்துறையை சேர்ந்தவங்க, பதுங்கி இருக்காங்களாமே... ஏன்'' என, நோண்டினாள் மித்ரா.'
'அதுவுமே... எலக்ஷன்தான் காரணம். ஒவ்வொரு தேர்தலுக்கும் 'டொனேஷன்' கேட்டு, தொழில்துறையை சேர்ந்தவங்கள்ட்ட, கட்சிக்காரங்க வருவாங்க. தேர்தல் செலவுக்கு பணம் கேட்பாங்க. இல்லைன்னு சொன்னா, ஏதாவது ஒரு செலவை ஏத்துக்கச் சொல்லுவாங்க'' ''ஓகோ''''இதுக்கு பயந்துக்கிட்டு, தொழில் பிரமுகர்கள் பலரும் பதுங்கியிருக்காங்க.
கோடை விடுமுறையை கழிக்கப் போயிருக்கோம்னு சொல்லி, வெளிமாநிலத்துலயும், வெளிநாடுகள்லயும் முகாம் போட்டுருக்காங்க. உள்ளூர்ல இருக்கற சில பேரு, அரசியல் கட்சியினருக்கு, போனை போட்டா 'ஸ்விட்ச் ஆப்'னு வருதாம்'' என்றாள் சித்ரா.
''அவுங்க சிக்காட்டி என்ன... நம்மூர் எம்.எல்.ஏ., ஒருத்தரு, எலக்ஷன் செலவுக்குன்னு, 'கலெக் ஷன்' பண்ணிக்கிட்டு இருக்காராமே...''
''ஆமா... நானும் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு இடத்துக்கும் தனி ஆளா போயி, கலெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்காராம்; பல கோடி ரூபா 'அமுக்கிட்டாராம்'' ''கட்சியில மத்தவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?''- ஆர்வமானாள் மித்ரா.
''முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், கட்சியில முக்கிய பொறுப்புல இருந்தவங்க யாரையுமே, தேர்தல் பொறுப்பாளர் பட்டியல்ல சேர்க்கலையாம். எலக் ஷன் தொடர்பா மீட்டிங் போட்டாலும், அவங்கள கூப்புடுறதில்லையாம். ''அவருக்கு வேண்டப்பட்டவங்கள மட்டும், தேர்தல் பொறுப்பாளரா போட்டு, நிதி வசூலிச்சிருக்காரு. இது சம்பந்தமா, விவரமா மேலிடத்துக்கு புகார் போயிருக்காம்...'' என, புட்டு புட்டு வைத்தாள் சித்ரா.
''அதெல்லாம் சரி... போலீஸ் அதிகாரிங்கள, வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன்; காத்திருப்போர் பட்டியல்ல வச்சிருக்காங்களே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''கோவை எஸ்.பி.,யா இருந்த பாண்டியராஜன், கூடுதல் எஸ்.பி.,யா இருந்தப்ப, சாமளாபுரம் 'டாஸ்மாக்' பிரச்னைல, ஒரு பெண்ணை தாக்குனதுல சிக்குனாரு. இன்னொரு ஆளான டி.எஸ்.பி., இங்க வேலை பார்த்தப்ப, லேடி போலீஸ்கிட்ட தகாத முறையில நடந்துக்கிட்டதா பிரச்னை எழுந்துச்சு'' என்றாள் சித்ரா.
''அப்புறம் எப்படி தப்ப முடியும்?''
''அதான் இப்ப, இவங்க ரெண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியல் வச்சிருக்காங்க. எலக்ஷன் நேரத்துல, வேற ஊருக்கு மாத்துனா, அங்கேயும் பிரச்னை வந்தா, சமாளிக்குறது கஷ்டம்னு, கொஞ்ச நாள் 'ரெஸ்ட்'டுல இருக்கட்டும்னு, காத்திருக்க வச்சிருக்காங்களாம்'' என்று டீட்டெயிலாக கூறினாள் சித்ரா.
''போலீஸ் துறையிலும், சில இன்ஸ்., - எஸ்.ஐ.,க்கள், அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வருமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. தங்களுக்கு பிடிக்காத அதிகாரிகள பத்தி, தி.மு.க.,காரங்க மூலமா, மேலிடத்துக்கு புகார் அனுப்பிக்கிட்டு இருக்காங்களாம். போலீஸ் வட்டாரத்துல இதைப்பத்தி தான் பேசிக்கிறாங்க...'' என்ற சித்ரா, 'டிவி'யை 'ஆன்' செய்தாள்.
''அப்போது, கட்டு கட்டாக 'கரன்சி' சிக்கிய, வீடியோ ஒளிபரப்பானது. இருவரும், அச்செய்தியில் ஆழ்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X