சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பழைய கணக்கை சொல்வது காலத்துக்கு ஒவ்வாது!

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கற்பனைகளை துாவி, கனவுகளை விதைத்து, மக்களது எண்ணங்களை கொள்ளை கொள்வது தான் தேர்தல் அறிக்கைகளின், முக்கியமான பங்கு.'லோக்சபா தேர்தல் - 2019'க்கு, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் உள்ளன. ஆனால், மாறிவரும் சூழலையும், எதிர்காலத்தையும், இந்தத் தேர்தல் அறிக்கை கருத்தில் கொள்ளவில்லையோ என்ற அச்சம், எழவே செய்கிறது.உதாரணமாக, '2019 ஏப்ரல், 1ம் தேதி வரை
 பழைய கணக்கை சொல்வது காலத்துக்கு ஒவ்வாது!

கற்பனைகளை துாவி, கனவுகளை விதைத்து, மக்களது எண்ணங்களை கொள்ளை கொள்வது தான் தேர்தல் அறிக்கைகளின், முக்கியமான பங்கு.'லோக்சபா தேர்தல் - 2019'க்கு, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் உள்ளன. ஆனால், மாறிவரும் சூழலையும், எதிர்காலத்தையும், இந்தத் தேர்தல் அறிக்கை கருத்தில் கொள்ளவில்லையோ என்ற அச்சம், எழவே செய்கிறது.

உதாரணமாக, '2019 ஏப்ரல், 1ம் தேதி வரை நிலுவையில் இருக்கும், நான்கு லட்சம், மத்திய அரசு காலி பணியிடங்களை, மார்ச், 2020க்குள் நிரப்புவோம். மாநில அரசுகளிடம் இருக்கும், 20 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப கோரிக்கை விடுப்போம்' என்றும் தெரிவிக்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.


'கிக் எகானமி'


இன்றைய தேதியில், இது சாத்தியமே இல்லை. உலகெங்கும், 'ஆட்டோமேஷன்' மற்றும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரமயமாக்கல் போன்றவை பெருகி வருகின்றன.ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, பணிகளை நிறைவேற்றுவது லாபகரமாக உள்ளது. நாம் படிப்படியாக, முறையான வேலைவாய்ப்புகளில் இருந்து முறைசாரா, 'கிக் எகானமி' பாணி வேலைகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
மேலும், அரசின் காலியிடங்கள் என்பவை, பழைய காலத்து கணக்கு. பல பதவிகள், வேலை கொடுக்கப்பட வேண்டுமென்றே, அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவையெல்லாம் இல்லாமலேயே, இன்று பணிகள் நடக்கின்றன. பல பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன. இதில், இன்னமும், பழைய கணக்கைச் சொல்வது, காலத்துக்கு ஒவ்வாது.


தொலைநோக்கு இல்லை


மேலும், அடுத்த ஐந்தாண்டுகள் என்பது, புதிய பாய்ச்சலை நோக்கி, உலகம் நகரப் போகும் தருணம். அமெரிக்கா மாதிரி, நிதி, பாதுகாப்பு, நீதித்துறை உள்ளிட்ட, ஐந்து துறைகளை மட்டுமே, அரசு கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், வலுப்பட்டு வரும் நேரம். இந் நிலையில், மற்ற அனைத்து துறைகளையும், தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டிய அத்தியாவசியம் எழப் போகிறது.
இந்த சூழ்நிலையில், அரசு வேலைகளை தருவேன் என்பது, தொலைநோக்கு பார்வையற்ற சிந்தனை.சரக்கு மற்றும் சேவை வரி, 2.0 அறிமுகம் செய்யப்படும் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. உண்மையில், காங்கிரஸ் கோரிய, 18 சதவீத வரி அடுக்குக்கு நெருக்கமாக, ஏற்கனவே அத்தனை பொருட்களின் வரிகளும் வந்து சேர்ந்து விட்டன. கீழே, 0, 5, 12 சதவீத வரிகள் தாம் மிச்சமிருக்கின்றன.


பலன்கள் என்ன?அடுத்த சில ஆண்டுகளில், இவையும் ஒருங்கிணைக்கப்பட்டு, 15 சதவீதம் என்ற, ஒற்றை வரியை நோக்கி, எப்படி இருந்தாலும், எந்த அரசும் போய் தான் ஆக வேண்டும்.ஜி.எஸ்.டி.,யில், பல பாடங்களைக் கற்று, பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தெரிவிக்கும், 'ஜி.எஸ்.டி., 2.0' என்பது, பெரிய கவர்ச்சியாக இல்லை.இதேபோல, 'மன்ரேகா, 3.0' அறிமுகப் படுத்தப்படும் என்கிறது, காங்கிரஸ்.
அதாவது, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக மாறும் என்பது தான் திட்டம். அது, 200 நாட்கள் கூட ஆகட்டும்; தப்பே இல்லை. ஆனால், அதன் பலன்கள் என்ன; படிப்பினைகள் என்னென்ன; எப்படி அதனை மேலும் பயனுடையதாக ஆக்கப் போகிறீர்கள்?


நகைப்பு தான் போங்க!


கிராமப்புற ஏழை எளியவர்களை கை துாக்கிவிடுவது தான் நோக்கம் என்றால், ஏற்கனவே மாதம், 6,000 ரூபாய் தருகிறேன் என்று தான் தேர்தல் அறிக்கை சொல்கிறதே... இது, எதற்குப் புதிதாக?நிடி ஆயோக்கை ஒழித்துவிட்டு, புதிய பொறுப்புகளோடு, பழைய திட்டக் கமிஷன் கொண்டு வரப்படும் என்பது, உண்மையில் நகைப்புக்கிடமாக இருக்கிறது. எந்தப் பெயரில் இருந்தால் என்ன; பா.ஜ., தலைமையிலான அரசு, திட்டக் கமிஷனை ஒழித்து விட்டு, நிடி ஆயோக்கைக் கொண்டு வந்தது என்பதால், காங்கிரஸ், மீண்டும் பழையதை திரும்ப கொண்டு வர வேண்டுமா; இது, என்ன லாஜிக்?உண்மையில், திட்டக் கமிஷனோ, நிடி ஆயோக்கோ, எதுவாக இருந்தாலும், இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாநிலங்களின் நலனை நினைவில் வைத்து, உரிய திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் செய்தால் போதாதா; எதற்கு சக்கரத்தை மீண்டும் சுழற்ற வேண்டும்?நிடி ஆயோக் என்ற பெயரிலேயே, புதிதாக இயங்கினால் தான் என்ன; பெயர் மாற்றத்தினால், என்ன சாதித்துவிட நினைக்கிறது காங்கிரஸ்?குறை இருந்தால்?


புதிதாக தொழில் தொடங்குவோருக்கு, மூன்றாண்டுகள் வரை, எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. அவர்கள் தொழிலை தொடங்கி நடத்தலாம் என்று தெரிவிக்கிறது, காங்கிரஸ். இதன் பின்னே உள்ள நோக்கம் நல்லது தான். அதாவது, தொழில் தொடங்கும் இளைஞர்கள் சிரமப்படக் கூடாது; அவர்கள் அரசு தொல்லை இல்லாமல், நிறுவனத்தின் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
பிரச்னை அங்கே இல்லை. இத்தகைய தொழில்களின் வாயிலாக கிடைக்கும் சேவையோ, பொருட்களோ, எப்படி மக்களின் நம்பிக்கையை பெறும்?ஏதேனும், ஒரு குறை என்றால், எந்த நீதிமன்றத்தின் முன் போய் நிற்க முடியும்? உண்மையில், இங்கேயுள்ள அரசு கட்டுப்பாடுகள், வாடிக்கையாளர்களான மக்களின் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே அன்றி, தொழில் முனைவோரை அழுத்துவதற்கானது அல்ல.

உண்மையில், சிகப்பு நாடாவை குறைப்பேன் என்று, காங்கிரஸ் சொல்லியிருந்தால், அது ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும்.இன்னொரு முக்கியமான உறுதிமொழி, தொழில் துறை சம்பந்தமானது.தொழிற்புரட்சி காலம்

தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, 16 சதவீத பங்களிப்பு செய்யும் தொழில் துறையானது, அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 25 சதவீதம் பங்களிப்பு செய்யும் அளவுக்கு உயர்த்தப்படும் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.அறிக்கையை தயாரித்தவர்கள், ஒரு உண்மையை புரிந்து கொண்டனரா என, தெரியவில்லை.

அதாவது, பழைய பிரிட்டனை போன்றோ, ஐரோப்பா போன்றோ, நாம் வளர்ச்சி அடைய வில்லை.முதலில், விவசாய பொருளாதாரம் கோலோச்சியது. பின், மனித உழைப்பு நிரம்பிய தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் பிறகே, சேவைத் துறைகள் கால் பதிக்கத் தொடங்கின.இதில், தொழிற்புரட்சி காலம், இந்தியாவில் ஏற்படவே இல்லை. நாம் ஒரேயடியாக, 'ஹைஜம்ப்' செய்து விட்டோம்.சந்தேகம் தான்!


விவசாய பொருளாதாரத்தில் இருந்து, 1991 முதல், சேவை சார்ந்த பொருளாதாரத்துக்கு நகர்ந்து விட்டோம். இது, ஒரு பொருளாதார உத்தி. இப்போது, இடையில் விட்டுப் போன, தொழிற் புரட்சியை கொண்டு வருவேன் என்று, எந்தக் கட்சி வாக்குறுதி கொடுத்தாலும், அதைச் சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க முடியும்.இந்நிலையில், 16 சதவீத தொழில் வளர்ச்சி, மேலும், சிறுத்துப் போகாமல் பாதுகாப்பதே, இப்போது, நம் முன் உள்ள சவால்.

ராகுல் தொடர்ச்சியாக, சீனாவோடு இந்தியாவை ஒப்பிட்டு பேசி வருகிறார். குறிப்பாக, இந்தியா வில் ஒரு மணி நேரத்தில், 450 வேலைகளே உருவாக்கப்படுகின்றன, சீனாவிலோ, 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்ற, புள்ளிவிபரத்தையும் சொல்லி வருகிறார்.குளறுபடி நடக்கும்புள்ளி விவரம் சரிதான். ஆனால், சீனா, இன்னமும் உடலுழைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் இருக்கிறது. நாமோ, மூளை சார்ந்த, திறன் சார்ந்த பொருளாதாரத்துக்கு நகர்ந்து விட்டோம். நாம், எப்படி மீண்டும் உடலுழைப்பு சார்ந்த தொழில் வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்துக்கோ நகர முடியும்?ஒரு விஷயம் புரியவில்லை.

'நீட்' நுழைவுத்தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு, அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்கிறார், ராகுல். அது, எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. உண்மையில், தேசிய பட்டியல், மாநில பட்டியல் என்று, அத்தனை மருத்துவப் படிப்பு இடங்களும் அட்டவணைப் படுத்தப்பட்டே, தேர்வு நடத்தப்பட்டு, பின், 'அலாட்மென்ட்' வழங்கப்படுகிறது. இதில், ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு என்பதில், பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்புண்டு.யாரும் கேக்கலியே!தமிழகத்தில், 2017ல் தான் பெற்றோரும், பிள்ளைகளும், 'நீட்'டை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். ஆனால், 2018 முடிவுகள், பெரும் ஆச்சரியத்தை அளித்தன. பிள்ளைகள் கடுமையாக உழைத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.பெற்றோரும், இத்தகைய தேசிய தேர்வுகளையும், அதில் கிடைக்கும், அங்கீகாரங்களையும் பெரிதும் விரும்புகின்றனர்.

இதுதான் பெற்றோரின் மனநிலை என்றால், நீட்டில் இருந்து விலக்கு என்பது, தற்போதைக்கு, வெறும் அரசியல் கோஷமாகவும், அழுத்தமாகவும் மட்டுமே புரிந்து கொள்ளப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மொத்த உள்நாட்டு உற்பத்தியான, ஜி.டி.பி.,யில் கல்விக்காக, 6 சதவீத ஒதுக்கீடு, பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மானநஷ்ட வழக்குகள் மற்றும் தேசத் துரோக வழக்குகளை, குற்ற வழக்குகளாக கருதப் படுவதில் இருந்து விலக்கு, தேர்தல் நிதிப் பத்திரங்களை ஒழித்துக் கட்டுவது போன்ற, நல்ல பல உறுதிமொழிகளும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.எதார்த்தம் இது!ஒரே ஒரு பிரச்னை தான். அடுத்த ஐந்தாண்டு கள் என்பது, சாதாரணமானது அல்ல. மின்சார கார்கள், சாலைகளை ஆக்கிரமிக்கப் போகின்றன, தொழிற்துறையும் சேவைத்துறையும், ஆட்டோமேஷனுக்குள் வெகு வேகமாக நகரப் போகிறது. இதனால், வேலை இழப்புகள் ஏராளமாக இருக்கலாம்.இந்த எதார்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் விதமாக, காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், ஏதும் இல்லை.

தேர்தல் அறிக்கை என்பது, நாட்டை ஆள நினைக்கும் கட்சிக்கான, எதிர்காலத்துக்கான கையடக்க ஆவணம் மட்டுமல்ல; அது, மக்களுக்கான திசைகாட்டியும் கூட. அந்த வகையில், காங்கிரஸ் அறிக்கை, இன்னும் தொலைநோக்கோடு இருந்திருக்கலாம்!

ஆர்.வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Kulandaisamy - Kumbakonam,இந்தியா
12-ஏப்-201910:25:27 IST Report Abuse
Rajendran Kulandaisamy அமையும் புதிய அரசை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளில் முக்கிய..ஒரு சில.... ஒரு கண்ணோட்டம்... வடிவேல் காமடி கலாட்டா... ஆம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே .... அரசியல்வாதிகள் காவிரி பிரச்சனையை தீர்க்க விடமேட்டேன்... என்னை என்ன செய்ய முடியும்.. பாலிதீனை தடை பண்ணீங்க.... ஆம்.. முடிஞ்சதா... 1000 அரசியல்வாதிகள் நீங்க இருக்கலாம்.. நாங்க 140 கோடி மக்கள் அனைவரும் heavy டியூட்டி server எங்கிருந்து தண்ணீர் கொண்டுவந்தாலும் சரி ...... அது காவிரியாய் இருந்தாலும் சரி,,,கங்கையாய் இருந்தாலும் சரி.... அடைபோன்டா... தண்ணீர் வாராத அளவிற்கு பிளாஷ்டிக்கை நானோ செகண்ட்ல கொட்டி . .....அட இப்பிடிங்கிருத்துக்குள்ள ஆம். ஆறு, குளங்கள், ஏரி , கடல் என்று அனைத்தையும் பாழடித்து அடைக்கிறது பிளாஸ்டிக், பாலிதீன்... காவிரி தண்ணீரை கொண்டுவந்து என்ன பண்ணுவது.... காவிரி தண்ணீர் இல்லாமலே வெள்ளம்.... ஒரு மனிதனை எரித்தால் ஒரு பிடி சாம்பல் தான் கிடைக்குமாம். அதுபோல பாலிதீன், பிளாஸ்டிக் எரித்தது போக மீதி பாலிதீன், பிளாஸ்டிக் பெருமளவில் சேர்ந்து நீர்நிலைகளை அடைக்கிறது.... குற்றவாளியாய் உள்ள நான்...... எப்பெடி குற்ற வாழ்க்கையாக தானே வாழ முடியும்... கரும்புகை பெரும்பகை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X