காற்று மாசு, மனதை பாதிக்குமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காற்று மாசு, மனதை பாதிக்குமா?

Added : ஏப் 04, 2019
 காற்று மாசு, மனதை பாதிக்குமா?

நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, பிறரைவிட மன நலச் சிக்கல்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை, மருத்துவர்கள் வெகுகாலமாகவே சொல்லி வருகின்றனர். அண்மையில், லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள், இது ஏன் என்று விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இந்த ஆராய்ச்சி, சில ஆச்சரியமான தொடர்புகளை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளின் நகர வாசிகளில், 2,000 பேருக்குமேல் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றனர். இதன் முடிவில், நகர்ப்புறக் காற்று மாசுபாடுக்கும், பதற்றம், மனச்சோர்வு, மனச்சுமை போன்ற மனநலச் சிக்கல்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என, ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றோர் வசிக்கும் பகுதிகளில் காற்று மாசுபாட்டை அளந்து, ஒப்பிட்டுப் பார்க்கையில், நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு போன்ற மாசுபாடுகள் காற்றில் அதிகமாக இருக்கும் இடங்களில் வசிக்கும் இளம் வயதினருக்கு மனப் பிரமை, பதற்றம் போன்ற மனநல குறைவுகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வு முடிவுகள், காற்று மாசுக்கும், மனநலத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் துவக்கப்புள்ளி தான் என்றும், இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கிங்ஸ் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X