வீரத்தின் அடையாளம் ஜஸ்வந்த் சிங்.

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement







15 நவம்பர் 1962.

இந்தியா - சீனாவிற்கு இடையில் மூண்ட போர் முடியும் தருணம்.

நமது ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் உள்ளவர்களை திரும்ப வரச்சொல்லிவிட்டனர்.நாட்டிற்கு வெற்றியை பரிசாக தரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும் ,தோல்வியால் துவண்டு போன உள்ளத்தோடும் எல்லையில் இருந்து நம் வீரர்கள் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

கர்வால் ரைஃபல்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ,திரிலோக் சிங் , கோபால் சிங் ஆகிய மூவரும் தோல்வியோடு திரும்ப மனமில்லாமல் வேறு ஒரு முடிவு எடுத்தனர்.முடிந்த வரையில் போராடுவது முடியாவிட்டால் இந்த மண்ணிலேயே இறந்து போவது என்பதுதான் அந்த முடிவு.

கண்ணுக்கு எட்டிய துாரத்தில் இருக்கும் சீன முகாம்களில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நவீன ரக எந்திர துப்பாக்கிகள் நம்மிடம் இருந்தால் எதிரி முகாமில் இருப்பவர்களை எளிதாக அழித்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.

திரிலோக் சிங்கும்,கோபால்சிங்கும் எதிரிகள் அயர்ந்த நேரத்தில் போய் ஆயுதங்களை அள்ளிக் கொண்டு வருவது என்றும் கொண்டு வரும் ஆயுதங்களை ஜஸ்வந்த் சிங் வாங்கிப்பத்திரப்படுத்துவது என்பதும் ஏற்பாடு.

அதன்படியே இருவரும் எதிரி முகாமில் இருந்து எந்திர துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் என்று ஏாராளமான ஆயுதங்களை விடிய விடிய எடுத்து வந்தனர்.

விடிவதற்குள் கடைசியாக ஒரு முறை இன்னும் கொஞ்சம் ஆயுதம் எடுத்து வந்து விடுவோம் என்று நுழைந்தவர்கள், சீனா ராணுவத்தினர் கண்ணில் பட்டுவிட்டனர். நம்மை தாக்க நம் கோட்டைக்குள்ளேயே வருகின்றனர் என்று முடிவு செய்து தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சல்லடையாக இருவரையும் துளைத்து கொன்றனர்.

மறைவில் இருந்த இந்த காட்சியைப் பார்த்தாலும் செய்வதறியாது திகைத்த ஜஸ்வந்த் சிங் தான் பதுக்கிவைத்துள்ள நவீன துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு எதிரிகளை சூறையாட முடிவு செய்தார்.

அங்கு இருந்து பதுங்கு குழிகள் மரங்கள் மற்றும் மறைவு பகுதிகளில் துப்பாக்கிகளை பொருத்தினார் கையெறிகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டார்.

இந்திய ராணுவம் வாபஸ் பெற்றுவிட்டது, எஞ்சி இருந்து இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றாகிவிட்டது, விடிந்ததும் இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டியதுதான் என்று எக்காளமிட்டு விடிய விடிய ஆட்டம் போட்ட சீன ராணுவம் விடிந்ததும் இந்திய எல்லைக்குள் காலை வைத்தது.

இதற்காகவே ஊன் மறந்து உறக்கம் துறந்து காத்திருந்த ஜஸ்வந்த் சிங் சீன ராணுவம் எல்லையில் கால் வைத்ததுமே குண்டுகளை மழையாக பொழிந்தார் .

இதைக் கொஞ்சமும் எதிர்பாரத சீன ராணுவத்தினர் கொத்து கொத்தாக செத்து விழுந்தனர் உயிர்பிழைத்தவர்கள் வேறு வழியாக குண்டு வந்த திசை நோக்கி நடந்தனர்

இப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட ஜஸ்வந்த்சிங் வேறு ஒரு இடத்தில் இருந்து எந்திர துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் மேலும் பல எதிரிகளை கொன்று குவித்தார்.

இப்படி தனது இருப்பிடத்தை மாற்றி எதிரிகளை பந்தாடிய ஜஸ்வந்த் சிங்கின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் பின்வாங்கினர்.

எதிரில் இருப்பது தனி ஒருவன் அவன் தன் நண்பர்களைக் கொன்றவர்களை, நாட்டை தோற்கடித்தவர்களை பழிவாங்க போராடுகிறான் என்பது தெரியாமல் ,இந்தியா சிறப்பு படையுடன் இருந்து மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்றே சீன ராணுவத்தினர் முடிவு செய்தனர்.

தனது ராணுவ வியூகத்தை மாற்றி மாற்றி வீரர்களை அனுப்பியும் அத்தனை பேரையும் ஜஸ்வந்த்சிங் தந்திரமாக சுட்டுக் கொன்றார் கிட்டத்தட்ட 72 மணி நேரம் நடந்த இந்த போரில் ஜஸ்வந்த்சிங் தனி ஒருவனாக செயல்பட்டு 300 சீன ராணுவத்தினரை கொன்றார்.

கடைசியில் இத்தனையும் செய்தது செய்வது தனி ஒரு ஆள் என்பது தெரிவதற்கும் ஜஸ்வந்த்சி்ங்கின் கையில் இருந்த குண்டுகள் தீர்வதற்கும் சரியாக இருந்தது.

ஜஸ்வந்த் சிங்கை சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர் இன்னும் சில நொடிகளில் தன்னை சிறைப்படுத்தி எதிரிநாட்டில் கொண்டு போய் சித்திரவதை செய்வர் என்பதை உணர்ந்தார், தன்னிடம் இருந்த துப்பாக்கியில் இருந்த கடைசி குண்டுக்கு தன்னையே பழி கொடுத்தார். எதிரிகள் நெருங்கிய போது,‛ உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாது என்று சொல்லாமல் சொன்ன ஏளனப்புன்னகை மட்டுமே' அவரது உயிரற்ற முகத்தில் எஞ்சியிருந்தது,இப்படி இன்னுயிர் என்னும் தன்னுயிரை நாட்டுக்காக ஜஸ்வந்த் சிங் அர்ப்பணித்த போது அவருக்கு வயது 21தான்.

ஜஸ்வந்த் சிங்கின் இறந்த உடல் மீது சராமாியாக சுட்டு தங்களது ஆத்திரத்தை தணித்துக் கொண்டனர் , தனி ஒருவனாக செயல்பட்டு நம்மில் முன்னுாறு பேரை கொன்று விட்டானே என்ற ஆத்திரம் குறையாததால் ஜஸ்வந்த் சிங்கின் தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.

போர் ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தான பிறகு என்ன நடந்தது என்பதை சீன ராணுவ உயரதிகாரி விசாரி்த்து அறிந்தார்.கோழையைப் போல தலையைக் கொய்து வந்ததை கண்டித்தார்.பதிலாக ஜஸ்வந்த் சிங்கின் மார்பளவு வெங்கல சிலையை செய்து ராணுவ மரியாதையுடன் கொடுத்தனுப்பினார்.

ஜஸ்வந்த் சிங்கின் அந்த சிலையும் அவர் காவல் காத்த இடமும் இப்போது வீரத்தின் அடையாள சின்னமாக,அவரது நினைவாலயமாக கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது.பாரதத்தாயின் வீரப்புதல்வானாம் ஜஸ்வந்த் சிங் பயன்படுத்திய உடை,துப்பாக்கி உள்ளீட்டவை உள்ளே கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.

திரிலோக்சிங்கிற்கும்,கோபால் சிங்கிற்கும் வீர் சக்ரா விருதும் ஜஸ்வந்த் சிங்கிற்கு மகா வீர் சக்ரா விருதும் அறிவித்து அவர்களது வீரத்தை நாடு போற்றியது.இன்றைக்கும் அந்த வழியாக கடந்து செல்லும் ராணுவத்தினர் பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் இந்த நினைவாலயத்தினுள் சென்று தங்கள் மரியாதையை செலுத்திவிட்டே செல்கின்றனர்.

அரசியல் மற்றும் ஐபிஎல் அழுத்தத்திற்கு நடுவே இந்த உணர்வுபூர்வமான நிஜக்கதையை சென்னை தியேட்டர்க்காரன் குழு கடந்த சில தினங்களுக்கு முன் அரங்கேற்றியது.

கதையை ராணுவ உடையி்ல் இளைஞர் விஜய் கிருஷ்ணா உணர்ச்சி பொங்க சொல்லி முடித்த போது அரங்கில் அப்படி ஒரு அமைதி அனைவரது கண்களிலும் கண்ணீர்.






இப்படி எத்தனை எத்தனையோ வெளியே தெரியாத ஜஸ்வந்த் சிங் போன்ற ராணுவ வீரர்களின் தியாகத்தால் பெற்றதுதான் நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், இதை எப்போதம் நம் மனதில் நிறுத்த வேண்டும் பள்ளி கல்லுாரிகளில் செலவில்லாத இந்த குறுநாடகம் நடத்தப்பட்டால் மாணவர்களிடையே வீரம் விதைக்கப்படும் நாட்டுப்பற்று வளரும் தேசத்தின் மீதான பாசம் அதிகரிக்கும். ஜஸ்வந்த் சிங்கின் நாடகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் சபரியை தொடர்பு கொள்ளவும் எண்:98849 66613.

எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in




Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Brahadeeswaran.M - coimbatore,இந்தியா
06-ஏப்-201910:27:00 IST Report Abuse
Brahadeeswaran.M great Instead of keeping some rubbish politicians life history as lesson in school, like this persons life history and their sacrifice for our country should add in syllabus , this is the only way to motivate and form the Good citizen...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X