தேர்தல் விதிமீறல்: சிக்கும், தலைகள் யார்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதிமீறல்: சிக்கும், 'தலை'கள் யார்?

Updated : ஏப் 06, 2019 | Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (9)
Share
தேர்தல் விதிமீறல், கட்சிகள், தலைகள்

தமிழகத்தில், அரசியல் தலைவர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதால், தேர்தல் ஆணையத்தில், புகார்கள் குவிகின்றன. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


விமர்சனம்

அ.தி.மு.க., சார்பில், முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி; தே.மு.தி.க., சார்பில் பிரேமலதா ஆகியோர், ஒவ்வொரு தொகுதிக்கும், திறந்த வேனில் சென்று, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.தி.மு.க., தலைவர், ஸ்டாலின், அவரது மகன், உதயநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ ஆகியோர், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.பிரசாரத்தில், ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பதால், இரு கூட்டணி சார்பிலும், தேர்தல் ஆணையத்தில், புகார்கள் குவிந்தபடி உள்ளன.


2,000 ரூபாய்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், கோடநாடு கொலை சம்பவம் குறித்து பேசியதாகவும், அமைச்சர் வேலுமணி குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், அ.தி.மு.க., சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல, 'அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தால், 2,000 ரூபாய் நிச்சயம்' என, முதல்வர் பிரசாரம் செய்வதாக, தி.மு.க., சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், தினமும் வழக்கறிஞர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து, புகார் அளித்தபடி உள்ளனர்.இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தனித்தனியே புகார் அளித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, தேர்தல் விதிகளை மீறியது உட்பட, பல்வேறு புகார்கள் அடிப்படையில், 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


புகார்

பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய, 'சி விஜில்' என்ற, 'மொபைல் ஆப்' வழியே, 1,770 புகார்கள் வந்துள்ளன.இவற்றில், 1,005 புகார்கள் கைவிடப் பட்டன; 735 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி வாகனங்களில் பிரசாரம் செய்தது, ஜாதி ரீதியாக பேசியது, பணம் கொடுத்தது உட்பட, பல்வேறு புகார்கள் வந்துள்ளன.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வரும் புகார்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.தேர்தல் நடத்தை விதி மீறல் உண்மை என, தெரிய வந்தால், வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அவதுாறாக பேசுவது தொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில், ஓட்டுச் சாவடியை கைப்பற்ற துாண்டும் வகையில், மறைமுகமாக பேசியதாக, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர், அன்புமணி மீது, வழக்கு பதிவு செய்ய, மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.பா.ம.க., அளித்த புகார் அடிப்படையில், மத்திய சென்னை, தி.மு.க., வேட்பாளர், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல தலைவர்கள் மீது, வழக்குகள் பாய வாய்ப்புள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X