தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில், கட்சி தலைவர்களின் பிரசாரங்கள், மக்களுக்கு நல்ல பொழுது போக்காக விளங்குகின்றன. சினிமா நகைச்சுவை காட்சிகளை விட, ஒரு சில தலைவர்களின் பேச்சு, சிரிப்பை ரொம்ப வரவழைக்கிறது.
அதே நேரம், சுட்டெரிக்கும் சூரியனின் உக்கிரத்தை விட, சில, தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சு, ஹிந்து மக்களை, அக்னி நட்சத்திரமாக வறுத்தெடுக்கிறது.கூட்டணிக்கு தகுந்தவாறு தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும், கொண்ட கொள்கையிலும் தெளிவில்லாதவர்களுக்கு, ஹிந்து மதத்தை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?ஹிந்து மதம் புனிதமானது. அஹிம்சை, சத்தியம், சகிப்புத் தன்மை போன்றவற்றை உள்ளடக்கியது. அதற்காக, யார் வேண்டுமானாலும், எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்பதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சமீப காலமாக, தமிழகத்தில், ஹிந்து மத எதிர்ப்பை ஒரு கொள்கையாகவே கடைபிடிக்கின்றனர். பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சில், ஹிந்துக்களுக்கு எதிரான கோபம் கொப்பளிக்கிறது; குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கு எதிராக கூப்பாடு போடுகின்றனர்.ஹிந்து கடவுள்களை அவமதித்து பேசுபவர்கள் எல்லாம், மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுள்ளனர். நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் அவர்களின் மதச் சார்பற்ற வேஷத்தை, தினமும் பார்க்க முடிகிறது.தேர்தலின் போது, ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்தும்; எந்தக் கட்சியையும் சாராத, சாதாரண பொதுஜனம் நான். எனக்கு என் மதமும், என் தெய்வங்களும் முக்கியம். சில அரசியல் தலைவர்களால் அவை தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது, மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
என் பாரத தேசம்; என் ஹிந்து மதம்; என் இறைவன், எனக்குப் பெருமை. எங்கள் உணர்வுகளை சிறுமைப்படுத்தி பேசுபவர்கள், உண்மையான தலைவர்களாக இருக்க முடியாது.ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாகவே இருப்பர் என, தப்புக்கணக்கு போட்டு கொண்டிருப்பவர்களுக்கு, ஜனநாயக முறையில், தேர்தலில் பதிலளிப்போம்.சனாதன தர்மத்தை வேரறுப்போம் என, மேடைகளில் முழங்கி, ஹிந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை, அரசியல் தலைவர்கள் சிலர் தொடர்ந்து செய்து கொண்டு உள்ளனர்.ஆனால், உண்மையில் அவர்கள், சமுதாயத்தின் அனைத்து மதம், ஜாதியினரையும் ஒற்றுமைப்படுத்தும் வகையில் தான் பேச வேண்டும்; செயல்பட வேண்டும். ஆனால், அது கூட தெரியாமல், தொடர்ந்து ஹிந்து மதத்தையும், அதில் உள்ள ஒரு ஜாதியையும், கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு, என் ஹிந்து மதம்; அந்த ஜாதி, இளக்காரமானது அல்ல; ஹிந்துக்களும் உணர்வில்லாதவர்கள் இல்லை.உலகில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றக்கூடியது, கிறிஸ்தவ மதம்; அதற்கடுத்து, இஸ்லாம் உள்ளது. உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், பெரும்பான்மை ஹிந்துக்கள் வாழும் நாடு, இந்தியா. இங்கே, குறிப்பாக, தமிழகத்தில், ஹிந்துக்களையும், ஹிந்து தெய்வங்களையும் தொடர்ந்து அவமரியாதை செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.'ஹிந்து எதிர்ப்பு' என்ற, போலி முகமூடி அணிந்து செயல்படும் அவர்களின் குடும்பத்தினர், ஹிந்துக்களாக, ஹிந்து தெய்வங்களை வழிபடுகின்றனர்... யாரை திருப்திப்படுத்த இந்த இரட்டை வேடம்? பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் இது குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும் போது கூட, அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
கடவுள் மறுப்புக் கொள்கையில், அவர்களுக்கு அவ்வளவு பிடிப்பா என்றால், அதுவும் இல்லை. ஹிந்து மதத்துக்கும், ஹிந்து கடவுள்களுக்கு மட்டுமே எதிர்ப்பு. பிற மதத்தையும், மதத்தினரையும் மதிக்கின்றனர்.தங்கள் வீட்டுப் பெண்கள், கோவிலுக்குச் சென்று வழிபடுவதை, 'அவர்களின் தனிப்பட்ட விருப்பம்' என, 'பெருந்தன்மை'யாக சொல்பவர்கள், பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கையை, உணர்வுகளை மட்டும் தொடர்ந்து புண்படுத்தி வருவது ஏன்?ஹிந்து மதத்தில், கடவுளை வழிபடுபவர்கள் பெரும்பான்மை என்றால், கடவுள் மறுப்பாளர்களும் இருக்கின்றனர்; அது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பே, அதன் கட்டுப்பாடுகள் அற்ற தன்மை தான். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கூட, தினமும் கோவிலுக்கு சென்று வழிபட்டாக வேண்டும் என, எந்த கட்டாயமும் இல்லை. எதையும் வலியத் திணிக்காத, சாத்வீகமானது, அமைதியானது, என் ஹிந்து மதம்.
அதனால் தான், கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்கள், தங்கள் அபத்தக் கருத்துகளையும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது.நாத்திகர்களை யாரும் கட்டாயப்படுத்தி, கோவிலுக்கு வரச் சொல்லவில்லை; தெய்வ வழிபாடுகளில் பங்கேற்கவும் அழைக்கவில்லை. அது, அவர்களது விருப்பு, வெறுப்பு சம்பந்தப்பட்டது.ஆனால், கடவுளைக் கொண்டாடும் எங்களின் மத, மன உணர்வுகளை, நம்பிக்கையை அவமரியாதை செய்ய, கொச்சைப்படுத்திப் பேச, உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... யார் இந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது... இது போல பிற மதங்களை உங்களால் வசை பாட முடியுமா? அது போல, 'ஹிந்துக்கள் யாரும் என் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டாம்' என, உங்களால் அறிவிக்க முடியுமா... உங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை, ஹிந்துக்கள் இல்லை என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியுமா... பிறகு ஏன், ஊரை ஏமாற்ற, மேடையில் ஹிந்துக்களை துாற்றுகிறீர்கள்?ஒரு விஷயத்தை அவர்கள் நினைவில் கொள்வதில்லை... 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களாலும், அதற்கு முந்தைய இஸ்லாமிய அரசுகளாலும், ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.
பல்வேறு கால கட்டங்களில் இருந்து, இன்று வரை எத்தனையோ போராட்டங்களுக்கு நடுவிலும், சாத்வீகமான தன் அணுகுமுறையில் இருந்து விலகாமல், சகிப்புத்தன்மையுடன் கம்பீரமாக நிற்கிறது, ஹிந்து மதம்.வேத, புராண, இதிகாசங்களையும், பெரும் காப்பியங்களையும், அவதார புருஷர்களையும் தன்னகத்தே கொண்டு, பல நுாற்றாண்டுகளைத் தாண்டி, தழைத்தோங்கி நிற்கிறது ஹிந்து மதம்.நம் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரத்தால் கவரப்பட்ட பல நாட்டவர்களும் வியந்து போற்றும் மதம், ஹிந்து மதம். ஆனால், நமக்குத் தான் நம் அருமை, பெருமை புரிவதில்லை.புரிந்தும் புரியாதது போலவும் பிதற்றுபவர்களை, இந்த தேர்தலில் புறக்கணிப்போம். இது போன்ற நிகழ்வுகள் தான், ஹிந்து மதத்தின் மீதான நம்பிக்கையையும், தெய்வ பலத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது.
மக்கள் அனைவருக்கும் என் நாடு, என் மதம், என் மொழி, என் கடவுள் என்ற ஆழ்ந்த பற்றும், பெருமையும் அவசியம் இருக்க வேண்டும். அதுவே, எல்லை கடந்து, வெறியாக மாறக்கூடாது. பிற மத, இன, மொழி துவேஷமும் கொள்ள கூடாது. இதுவே, ஹிந்து மதம் காட்டும் உயர்நெறி.என் அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன். வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட, சில சம்பவங்களால் நிலை குலைந்து, செய்வதறியாது தவித்து நின்ற சமயம் அது...வீட்டருகே இருந்த ஒரு கடைக்கு, பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். கடை முதலாளியான, கிறிஸ்தவப் பெண், நன்கு அறிமுகமானவர். எனவே, அவர் என்னை நலம் விசாரித்து, ஆறுதல் சொன்னார்.அவர், ஹிந்துவாக இருந்து, கிறிஸ்தவ மதம் மாறியது பற்றியும், நானும் அவருடன், சர்ச் சென்று வழிபட்டால், என் பிரச்னைகளும், துன்பங்களும் குறையும் எனவும், ஆலோசனை கூறினார்.
அவர் பேச்சில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக நான் உணரவில்லை. தெரிந்த நபருக்கு ஒரு பிரச்னை என்றதும், அதிலிருந்து மீள, அவருக்குத் தெரிந்த வழியைச் சொன்னார், அவ்வளவே.சிறு புன்னகையுடன் நான் சொன்னேன்... 'அம்மா... எங்கள் குடும்பத்தை நன்றாக அறிந்தவர் நீங்கள். அதுவும் இல்லாமல், பிரச்னைகள் யாருக்குத் தான் இல்லை... ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்த்தா, பிரச்னைகள் வருகின்றன... எதையும் போராடி தான் சமாளிக்க வேண்டும்' என சொல்லி, வீடு திரும்பினேன்.என் நிலையில் நான் தெளிவாக, திடமாக இருக்கிறேன். பிற மதத்தவரிடம் நட்பும், அவர் தம் கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், எனக்கு என் மதம் பெரியது. என் கடவுள், நல்லது செய்வார் என்ற இறுமாப்பு என்னிடம் உள்ளது.மதச்சார்பின்மை என்ற பெயரில் போலியாக இல்லாமல், அவரவர் மதம் கடைபிடிக்கச் சொல்லும் அன்பு வழியில் நடந்தாலே, உலகம் அமைதியாக இயங்கும் என்பது நிச்சயம். இது அவசியமும் கூட!என் அனுபவத்தை பதிவு செய்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மக்களாகிய நாம், ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக நட்புடன், மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
பல இடங்களில் பல ஊர்களில் மாற்று மத திருவிழாக்களை, எல்லாரும் சேர்ந்து, ஒற்றுமையுடன் நடத்துவதை பார்த்துள்ளோம்.எனவே, சில அரசியல் தலைவர்களின் துவேஷ பிரசாரங்களுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்; அத்தகைய கட்சிகளை, ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்.அவரவர் மதத்தில், தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் எல்லை மீறாமல், கண்ணியம் காக்க வேண்டும். மத உணர்வை தவிர்த்து, மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கு அரசியல் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட ஜாதியினரையும், ஹிந்து மதத்தினரையும் வசைபாடுவதே தங்கள் கொள்கை என, சிலர் உலாவிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு, தேர்தலில் தண்டனை வழங்க வேண்டும்.இன்னொரு சம்பவத்தையும், இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எங்கள் துன்பத்தைத் தீர்க்க வேண்டி, பாடல் பெற்ற ஒரு பெரிய சிவாலயத்தில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
வேத மந்திரங்கள் முழங்க, பூஜை வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.அப்போது, என் கணவர் வெளியே மண்டபத்தில் அமர்ந்து, நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.அவரிடம் சென்று, பூஜையில் கலந்து, இறைவனை மனமுருக வேண்டிக் கொள்ள, உள்ளே வருமாறு அழைத்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான், இந்த கட்டுரையின் உள் கருத்து.'நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த இறைவன் காலடியில் தான். நினைவு தெரிந்த நாள் முதல், அவரை வழிபட்டு வருகிறேன். எனவே, என்னை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது, என் இறைவனுக்குத் தெரியும்' என்றார்.அவர் சொன்ன பதில், என்னை சிந்திக்க வைத்தது.ஒவ்வொருவரும் தம் இறைவன் மீதும், தேசத்தின் மீதும், மதத்தின் மீதும், மொழி, கலாசாரம் போன்ற அனைத்திலும், இது போன்ற அசைக்க முடியாத பற்றும், நம்பிக்கையும் வைத்து, அதை வாழ்க்கை நெறியாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குற்றங்கள் குறையும்.எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், நாமெல்லாம் மனிதர்கள் என்ற அடிப்படை ஒற்றுமையை உணர்ந்து செயல்படுவோம்; மத நல்லிணக்கம் பேணுவோம்; பிரித்தாளும் சூழ்ச்சியை வேரறுப்போம்!
தொடர்புக்கு: ikshu1000@yahoo.co.in
அபிராமி,
சமூக ஆர்வலர்