பழுக்குமா மாம்பழம்: பதைபதைப்பில் பா.ம.க., | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழுக்குமா மாம்பழம்: பதைபதைப்பில் பா.ம.க.,

Updated : ஏப் 07, 2019 | Added : ஏப் 07, 2019 | கருத்துகள் (50)
Share
பாமக, ராமதாஸ், குரு, பிரேமலதா,  அன்புமணி, முதல்வர் இபிஎஸ்,

தேர்தல் பிரசாரங்களில், எதிர்பார்த்த கூட்டம் சேராததால், பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, பா.ம.க., மத்திய சென்னை, தர்மபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுார், விழுப்புரம் தனி, கடலுார், திண்டுக்கல் ஆகிய, ஏழு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தர்மபுரியில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி போட்டியிடுகிறார். வட மாவட்டங்களில், பா.ம.க., வின் பலம் குறைந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தல்கள் வாயிலாக, இது நிரூபணம் ஆகியுள்ளது.எனவே, இத்தேர்தலில் வெற்றி பெற்று, பழைய பலத்தை நிரூபிக்க, பா.ம.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. வன்னியர் சங்க தலைவராக இருந்து மறைந்த, குரு குடும்பத்தினர், பா.ம.க.,விற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். பல்வேறு வன்னியர்கள் சங்க தலைவர்களும், பா.ம.க.,விற்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இது, பா.ம.க.,விற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsபா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர், தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பிரசாரங்கள் கைகொடுக்கும் என, பா.ம.க., தலைமை கணக்கு போடுகிறது. எலியும், பூனையுமாக இருந்த, தே.மு.தி.க.,வினருடன், பா.ம.க.,வினர் இணைந்து, தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இதுவும் வெற்றியை உறுதி செய்யும் என, பா.ம.க., வேட்பாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், பா.ம.க., ஏற்பாடு செய்யும் பிரசார கூட்டத்திற்கு, அதிகளவிற்கு கூட்டம் சேர்வது இல்லை. கட்சியினரால், அழைத்து வரப்படும் நபர்கள் மட்டுமே, அதிகளவில் பங்கேற்று வருகின்றனர்.முன்பெல்லாம், ராமதாஸ், அன்புமணி, குரு உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டங்களில், தொண்டர்கள் மட்டுமின்றி, வன்னியர் சமுதாய மக்களின் கூட்டமும் அலைமோதும். ஆனால், இந்த தேர்தலில், கூட்டம் குறைந்துள்ளது, வெளிப்படையாக தெரிகிறது.அ.தி.மு.க., - பா.ஜ.,வின் ஆட்சி செல்வாக்கு, பா.ம.க., - தே.மு.தி.க., வின் ஓட்டு வங்கியை வைத்து, இந்த தேர்தலில், வெற்றியை அறுவடை செய்துவிட வேண்டும் என, பா.ம.க., விரும்புகிறது. ஆனால், கூட்டம் குறைந்து வருவதால், பா.ம.க., நிர்வாகிகள் மட்டு மின்றி, வேட்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X