புதுச்சேரி:பொதுப்பணித்துறையில் ஊழல், முறைகேடு, கமிஷன் போட்டி போட்டுக் கொண்டு நடக்கிறது என அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.காங்., ஆட்சியில் அமைச்சர்களால் சம்பாதிக்க முடியவில்லை என்பதால், ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினீர்கள் என அன்பழன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக போட்டியிடும் கே.நாராயணசாமியை ஆதரித்து, வில்லியனுார் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் சட்டசபை அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் பேசியதாவது:மக்கள் விரோத முதல்வர் நாராயணசாமி அணிக்கும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட ரங்கசாமி அணிக்கும் இடையே நடக்கும் தேர்தலாக கருதி மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து முதல்வரின் பேச்சு அநாகரீகத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளது.இந்த ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட அரசு. மத்திய அரசு, கவர்னர், அண்டை மாநில அரசுடன் மோதல் என்றால் மாநிலம் எவ்வாறு வளர்ச்சி பெறும்.தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கிடைக்கவில்லை. மணல், ஜல்லி கிடைக்காமல் கட்டட தொழில் நலிவடைந்துள்ளது. ஆளும்கட்சி ஆட்கள் ஆற்று மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க முடியவில்லை. மணல் கடத்தல் போட்டியால் 8 பேர் இறந்துள்ளனர்.பொதுப்பணித்துறையில் ஊழல், முறைகேடு, கமிஷன் போட்டி போட்டுக் கொண்டு நடக்கிறது. என்.ஆர். காங்., ஆட்சியில் 2 நகராட்சிகளில் குப்பை அள்ள ஆண்டிற்கு 12 கோடி செலவு ஆனது. தற்போது 32 கோடி செலவு. துணை நகர திட்டம் செயல்பட்டிருந்தால், வில்லியனுார் பகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். அதை தடுத்து நிறுத்தியது யார் என பொதுமக்களுக்கு தெரியும். 10 ஆண்டாக ஒரு அரசால் பாலம் கட்ட முடிய வில்லை. என்.ஆர்., ஆட்சியில் போடப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை பராமரிக்க முடியாமல் பழுதாகி கிடக்கிறது.இவ்வாறு அன்பழகன் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE